நித்யா, கடிதம்

குரு நித்யா உங்களுக்கு எப்படி ஆசிரியரானார் என்பதை பல உரையாடல்களில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் சொற்களில், நேருக்குநேர் பார்ப்பதுபோல, அதைக் கேட்பது உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.

நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு, இன்றைய சூழலில் ஆன்மிக குருக்களுக்கு என்ன இடம் என்று. பலவகையான ஆன்மிக குருக்கள் இன்றுள்ளனர். மாயங்களைச் செய்பவர்கள் ஒருபக்கம்.  பெரிய கார்ப்பரேட்டுகளாகச் செயல்படுபவர்கள் இன்னொரு பக்கம். பெரிய ஆலயங்களைக் கட்டுபவர்கள் உண்டு. சிலர் உளவியல் ஆலோசகர்களாகவும் செயல்படுகிறார்கள். உண்மையான ஆசிரியரின் இடமென்ன என்று இந்தக் காணொளியில் கண்டேன்.

இன்றைய உலகில் நமக்கு ஒன்று மரபான மதம் உள்ளது. அல்லது இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வு அளிக்காத எளிமையான சமகால தத்துவம் உள்ளது. மரபான மதம் நவீன காலகட்டத்துடன் உரையாடுவதில்லை. அதற்கான அறிவுக்கருவிகள் அதனிடமில்லை. மரபான மதஞானத்தை இன்றைய அறிவுலகுடன் இணைத்து நமக்கு அளிப்பதற்கே நமக்கு இன்றைக்கு நவீனகுருக்கள் தேவைப்படுகின்றனர்.

நித்ய சைதன்ய யதி பற்றி நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர் ஒரு கவிஞர், ஒரு கலைஞர், ஒரு தத்துவ அறிஞர், கூடவே மெய்ஞானி. இந்தக் கலவைதான் இன்றைக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. அவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அவருடைய குரலாக ஒலிப்பதற்கு வணக்கம்

ராஜ் மகேந்திரன்

 

முந்தைய கட்டுரைதனிமையையே பேசுகிறேனா?