வாசிப்பிற்கான வழிகாட்டுதல்

ஜெ

பதின் பருவத்திற்கு பின் தினமும் வாசிக்கும் பழக்கத்தை நான் சென்ற ஆண்டு தான் மறுபடியும் தொடங்கினேன். ‘அறம்வழியாக தமிழில் வாசிக்க துவங்கியதும் சென்ற ஆண்டுதான். இந்த ஆண்டு வெண்முரசை தொடங்கிவிட வேண்டும் என்று எண்ணினேன். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வாசிப்பேன். இப்போது அம்பிகா விசித்திரவீர்யன் நட்பு மலர்ந்துகொண்டிருக்கிறது. இந்த பழக்கம் பிடித்து இதை அப்படியே என் வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக ஆக்கிக்கொண்டாள் என் வாழ்நாளில் எவ்வளவு வாசிக்க முடியும் என்று கணக்கிட்டேன்

2023 வரை, ஏறத்தாழ 15 கோடி புத்தகங்கள் உலகில் இருப்பதாக Google சொல்கிறது. என் கணக்கு படிஒரு வாரத்திற்கு ஒரு புத்தகம் என்று 50 ஆண்டுகளில் 2600 புத்தகங்கள்.   0.00001 %. 

இதில் நிறைய நூல்கள் எழுதப்பட்ட மொழியினால் எனக்கு அணுக முடியாமல் இருக்கும் , சிலவை என் ரசனையிலுருந்து விலகி இருக்கலாம். இருப்பினும், எழுதப்பட்டதில் மிக மிக சிறிய பாகம் மட்டுமே நமக்கு இருப்பதாக தெரிகிறது. சென்ற ஆண்டு வரை வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவதுதான் முக்கியம் என்று எண்ணியிருந்தேன், இப்பொழுது, எதை வாசிப்பது என்ற தேர்வு மேலும் முக்கியம் என்றே நினைக்கிறன்

தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தாலும், இந்த கடலில், தவறான, தேவையற்ற அல்லது பொருட்படுத்தும் தன்மை இழக்க கூடிய 0.00001 % இல்  விழுவது சுலபம்

இதுவே என் கேள்விகற்றலில் வாசிப்பு வழி அறிந்துகொள்வது எவ்வளவு ? தனிப்பட்ட விருப்பத்திற்கு அப்பால், எதை வாசிப்பது என்று தேர்வு செய்வது எப்படி ? உங்கள் கருத்தையும் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கிறேன்

அன்புடன் 

விவேக் கண்ணன் 

அன்புள்ள விவேக்

சில சுருக்கமான விளக்கங்கள்

அ. ஒருவர் ‘எல்லா’ நல்ல நூல்களையும் வாசிக்கமுடியாது. சென்னையில் விற்கப்படும் எல்லா உணவுகளையும் நீங்கள் உண்ண முடியுமா என்ன? உங்கள் பசிக்கும் ருசிக்கும்தான் உண்ண முடியும். உங்கள் தேடலுக்கேற்ப, ரசனைக்கேற்ப வாசியுங்கள்

ஆ. ஒருவர் வாசிக்கும் எல்லா நூல்களும் பயனுள்ளவையாக இருக்கவே முடியாது. சில நூல்கள் பின்னர் பயனளிக்கலாம். சில நூல்கள் பிற நூல்களுடன் இணைந்து ஒட்டுமொத்தமாகப் பயனளிக்கலாம். ஆகவே கூடுமானவரை நல்ல நூல்களை வாசிப்பதே நல்லது

இ. ஒரு நூலை நீங்கள் தேர்வுசெய்வது உங்கள் ரசனை, தேடலின்படி அமையவேண்டும். இன்னொருவர் சொல்வதனாலோ, புகழ்பெற்றிருப்பதனாலோ தெரிவுசெய்யக்கூடாது.

ஈ. உங்கள் இன்றைய நிலையில் இருந்து கொஞ்சமேனும் மேம்பட்ட, கொஞ்சம் முன்னால் இழுக்கக்கூடிய நூல்களையே நீங்கள் வாசிக்கவேண்டும்

உ. அத்தகைய நூலுக்கு கொஞ்சம் கவனமும் உழைப்பும் அளிக்கப்படவேண்டும். தேர்வுசெய்து எடுத்த எந்த நூலையும் அதன் ஐந்தில் ஒரு பங்கை வாசிக்காமல் வாசிப்பை கைவிடக்கூடாது என்ற நெறி தேவை.

ஊ. ஒரே சமயம் ஒரு தீவிர நூலையும், வேகமாக வாசிக்கச்செய்யும் நூலையும் வாசிக்கவும். மாறிமாறி வாசிப்பது வாசிப்பு என்னும் செயல் நின்றுவிடாமல் தொடரச்செய்யும். தீவிரமான நூலால் சலிப்புற்று நாட்கணக்கில் வாசிக்காமலிருந்தால் வாசிப்புக்கான உளநிலை அழிய வாய்ப்புண்டு.

நீங்கள் வாசிப்பது நீங்கள் வளர்வதற்காக. உங்கள் வாழ்க்கை நிறைவுகொள்வதற்காக. வாசிப்பின் ‘இலக்கு’ அதுவே. புத்தகங்களில் எத்தனை சதவீதம் வாசித்திருக்கிறீர்கள் என்பது இலக்கு அல்ல.

உலகத்தின் மகத்தான வாசகர்கூட நூல் எனும் கடலின் ஒரு துளியே. உலகத்தின் மாபெரும் படைப்பாளி கூட மானுட ஞானமெனும் கடலின் சிறு துமி மட்டுமே. நம் பணி என்பது இந்த பிரம்மாண்டமான பெருக்கில் இருந்து நமக்குரியதை எடுப்பது மட்டுமே. நம்மை உருவாக்கிக்கொண்டு நம் துளியை திரும்ப இதில் சேர்த்துவிட்டு செல்வதே நாம் செய்யக்கூடுவது.

இப்படி பலகோடிபேர் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சேர்த்து உருவாக்கியதே இந்த கடல்.

ஜெ

 

முந்தைய கட்டுரைபிரச்சாரமா?
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் இலக்கியக்கூடுகைகள்: அழகுநிலா