தில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி
இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய சிக்கல் செயலுக்கு உள்ளத்தைக் குவிக்கமுடியாமைதான். எந்த செயலையும் தீவிரமாகச் செய்ய முடியாத நிலை. கவனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும் நிலை.தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் அவர்களுக்கானவை
தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.
உங்களுக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லையா? எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறதா? ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறதா ?மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறதா ? எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறதா?
மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.
இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.
இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.
அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு. எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது
நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9
விண்ணப்பிக்க [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்
ஜெயக்குமார் தமிழ் விக்கி
ஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்
ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்
ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.
இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?
இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?
உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?
இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.
ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.
சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.
அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.
விண்ணப்பிக்க [email protected]
திரைப்பட ரசனை – உருவாக்கப் பயிற்சி
சினிமா மீது தீராப்பற்று கொண்டவர்கள் நாம். ஆனால் நம்மில் மிகச்சிலரே நல்ல சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். மிகமிகச் சிலரே சினிமாவின் கலை என்ன என்று அறிந்திருக்கிறோம். வெறுமே சினிமாக்களைப் பார்ப்பது மட்டும் அக்கலையை அறிமுகம் செய்து அளிக்காது. உண்மையில் நிறைய படங்களைப் பார்ப்பது அந்தக் கலைக்கு எதிரான ஒரு செயலாகவே ஆகிவிடும். மனம்போன போக்கில் சினிமா பார்ப்பவர் தேவையற்ற படங்களை ஏராளமாகப் பார்த்து ரசனையை இழப்பதும் சாத்தியமே
எந்தக் கலையையும்போலவே சினிமாவையும் முறையாக அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். சினிமக்கலையின் பெரும்படைப்புகள் என்ன, வரலாறு என்ன என்பது ஒரு வகை கல்வி. சினிமாவின் ஷாட், காட்சி, நடிப்பு படத்தொகுப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைத் தொழில்நுட்ப அறிதல் என்பது இன்னொரு வகை அறிதல். அந்த அறிதலை முறையான ஆசிரியரிடமிருந்து முறையாகக் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல தொடக்கம். நல்ல சினிமாவை பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல நல்ல சினிமாக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கும் அவசியமான கல்வி அது.
இன்று, நாம் குறைந்த செலவில் நல்ல குறும்படங்களை உருவாக்கமுடியும். முழுநீளப்படங்களையே உருவாக்கமுடியும். சொல்லப்போனால் சிற்றிதழ் இலக்கிய இயக்கம் போலவே செலவே அற்ற சிறுசினிமா இயக்கத்தையே உருவாக்க முடியும். நமக்குத்தேவை முறையான பயிற்சி. இன்று வரும் குறும்படங்களின் சிக்கலே அவற்றில் முறையான திரைக்கலைப் பயிற்சி இன்மையின் விளைவான தேர்ச்சியின்மை தெரிகிறது என்பதுதான்.
இன்று திரைப்படக்கலை என்பது திரைப்படங்களுடன் மட்டும் நின்றுவிடுவது அல்ல. எல்லா காட்சிக்கலைகளும் திரைப்படத்தின் அழகியலும் தொழில்நுட்பமும் கொண்டவையே. ஒரு நல்ல யூடியூப் வீடியோ தயாரிப்பதற்கே அந்தக் கலைப்பயிற்சி அவசியமானது.
பல நண்பர்கள் கோரியத்ற்கிணங்க தமிழின் கலைப்பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரான திரு ஹரிஹரன் அவர்கள் வகுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார். ஏழாவது மனிதன் முதலிய படங்களின் இயக்குநர். நீண்டகாலம் திரைக்கலைப் பயிற்றுநர் ஆக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.
நாள் நவம்பர் 21 22 மற்றும் 23
விண்ணப்பிக்க [email protected]
நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி
ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.
இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.
- ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.
- இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.
நாள் நவம்பர் 28 29 மற்றும் 30
விண்ணப்பிக்க [email protected]