அன்புள்ள ஜெ
சாமிக்கிட்ட அருளும், குறிப்பிட்ட கடை ஒன்றில் பொருளும் வாங்க சொல்லும் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று ஜெயபைரவிக்கு சமீபகாலமாக அதிகம் பிடித்திருப்பதால், ஒரு நாளைக்கு சிலமுறை அந்த விளம்பரத்தை யூடிபில் பார்க்க நேரிடும்…
ஆலயக்கலை பயிற்சி வகுப்பு முடிந்து வீடு சேர்ந்த மறுநாள் மேற்படி விளம்பரம் ஒளிபரப்பப் படுகையில், “அட… ஒரு கைல அபய ஹஸ்தம், மறு கையில வரத ஹஸ்தம்….” என்று வாய்விட்டு சொல்ல முடிந்தது.
‘நாதஸ்வரத்தை ரசிக்க நாம் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். அது இந்திய தத்துவம், இந்திய ஆலயக்கலை ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாகச் சொல்லத்தக்கது’
ஈரோட்டின் இசைப்பொழிவு | எழுத்தாளர் ஜெயமோகன். 2025ம் ஆண்டு தூரன் இசைவிழா குறித்த கட்டுரை ஒன்றில் சொல்லி இருப்பீர்கள். அவரோகணத்தில் இருந்து ஆரோகணத்திற்கு வர ஆரம்பித்துள்ளேன்.“தன் கரங்களினூடாக ஒரு வடிவம் ஒர் ஒலி ஒரு பொருள் உருவாகிவரும் விந்தைமுன் வியந்து நின்று பின்பு எழுந்து கைகொட்டிச் சிரித்து ஆர்ப்பரித்தது குழந்தை”
கொற்றவை நாவலில் முதுபுலவர் பெருஞ்சாத்தனாரின் மடியிலமர்ந்து, கரியபலகை ஒன்றில் தனது முதல் எழுத்தை கண்ணகி கற்கையில் வரும் வரிகள்.
ஆலயக்கலை முதல் வகுப்பை பயிலும் அனைவரும் உணரக்கூடியது அந்த தருணம். மூன்று நாள் பயிற்சி வகுப்புகளில், சிற்பக்கலையின் அரிச்சுவடியை அழகாய் உள்வாங்கும்படி கற்றுத் தந்தார் ஜெயக்குமார்.
தடுக்கி விழுந்தால் கோவில் சுவர் ஒன்றின் மேல்தான் விழுந்தாக வேண்டும் என்ற சூழலில் வளர்ந்தவன், ஆலயக்கலை பற்றிய புரிதல்கள் இல்லாமல் இதுவரை இருந்ததைப் பற்றி ஒரு கணம் கவலையோடு யோசித்தாலும், இப்பவாவது கற்றுக் கொள்கிறோமே என்ற எண்ணம் தோன்றி ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.
கர்ணகூடம், சாலை, போதிகை என்று கலைச்சொற்களின் நிறையும், திராவிட, நாகர, வேசர என்று விமானங்களின் வகையும் மனதையும், மூளையையும் நிறைத்தபடி உள்ளன.
சிற்பங்களுக்கு கண் திறக்கும் வைபவத்தின் முக்கியத்துவத்தையும்,சிற்பி அந்த வைபவத்தை பெரும்பாலும் சிலைக்கு பின்புறத்தில் இருந்து மேற்கொள்வதைப் பற்றியும் விளக்கி கூறினார் ஜெயக்குமார்.
முழுமையறிவு முன்னெடுப்புகள் அனைத்துக்கும் பின்புலமாய் இருக்கும் உங்களுக்கு நன்றிகள் ஜெ!
–யோகேஸ்வரன் ராமநாதன்