வரலாற்றில் நமக்கு ஒரு இடம் என்பது நம் அனைவருக்குள்ளும் இளமையிலேயே ஊறிப்போன ஒன்றாக உள்ளது .சுய முன்னேற்றப் பேச்சாளர்கள் ‘ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது. அனைவருமே சாதனையாளர்கள் ஆகமுடியும்’ என்று தான் என்று சொல்வார்கள் .அதை நாம் இளமையில் நம்பியிருப்போம். நாம் எப்படியோ உலகத்தையே ஜெயிக்கப் போகிறோம் ,உலகமே நம்மை திரும்பிப் பார்க்கப் போகிறது என்ற கற்பனையில் இருப்போம்.
வாழ்க்கை வளர வளர அந்த கற்பனை நம்மை கைவிடுகிறது .அத்துடன் நாம் நம்மை மிகச் சாமானியராக வரலாற்றில் இடம் பெற்றவர்களாக நினைக்க ஆரம்பிக்கிறோம். மிக எளிமையான ஒரு வாழ்க்கைக்குள் ஒடுங்கி நாமெல்லாம் சாமானியர்கள் என்று நம்மை நாமே சொல்லி நிறுவி விடுவோம். அதன் பிறகு நமக்கு வரலாற்றில் அரசியலிலோ ஈடுபாடு இருக்காது. மிகப்பெரிய செயல்கள் எதிலும் தொடர்பிருக்காது .அனைத்தையும் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவோம். எந்த ஒரு பெரிய விஷயம் சொன்னாலும் ‘அது எல்லாம் நமக்கு எதற்கு?’ எந்த மனநிலை வந்துவிடும்.
இரு மனநிலையுமே தவறானவை என்பது என்னுடைய எண்ணம். ஒவ்வொரு சாமானியருக்கும் வரலாற்றில் ஓரிடம் உண்டு .வரலாற்று நிகழ்வுகளுடன் அவர் எவ்வாறு தன்னை பொருத்திக் கொள்கிறார் என்பதுதான் முக்கியம். நீங்கள் சரியாகச் சொன்னது போல காந்தியப் பேரியக்கத்தில் மிகச்சிறிய அளவில் உறுப்பினராக இருந்தவர் கூட அந்த பேரியக்கத்தின் வரலாற்றில் ஒரு பகுதிதான். அப்படி ஒவ்வொருவரும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாற முடியும். அவ்வாறு பார்த்தால் யாருக்கு வரலாறு உள்ளது? யாருக்கு வரலாற்றில் பொறுப்புள்ளதோ அவருக்குத்தான் வரலாற்றில் இடம் உள்ளது என்று சொல்லலாம்.
ராஜா கிருஷ்ணசாமி












