
அன்புள்ள ஜெ
இன்றைய சூழலில் நாம் மரபான முறையில் கலைகளை பெறுவதற்கான இடம் எந்த அளவுக்கு உள்ளது ஏன் நம்ம நவீன முறைகளை பயன்படுத்தி கற்க முடியாது எதற்காக ஒரு சம்பிரதாயமான வகுப்புகளை உருவாக்க வேண்டும் என்னுடைய கேள்வி இதுதான்.
எம்.மாதவன்.
அன்புள்ள மாதவன்
இன்று திரைப்படங்களை பார்ப்பதற்கான பயிற்சியை இணையம் வழியாக அடைய முடியாது . ஏனெனில் காட்சி ஊடகம் பலவாறாக பெருகி சூழ்ந்திருக்கையில் இன்று நமக்கு கிடைக்கும் காணொளிகளில் லட்சத்தில் ஒன்றே ஏதேனும் வகையில் தரமானது. எஞ்சியவை முழுக்க பயிற்சியற்ற காணொளிகள்தான். ப புகைப்படங்களும் கூட அவ்வாறுதான் .இன்று புகைப்படங்களை நிபுணர்கள் அல்லாதவர்கள் தான் மிகப் பெரும்பாலும் எடுக்கிறார்கள். இணையத்திலேயே வாழ்பவருக்குக்கூட நிபுணர்களின் புகைப்படங்கள் மிக அரிதாகவே கண்களுக்கு படுகின்றன .
தமற்ற கலை மிக அதிகமாக கண்களுக்கு படும்போது நம் உள்ளம் அதற்கு பழகி தரமற்ற ரசனையை உருவாக்கிக் கொள்கிறது. அது தரமான படைப்புகளை பார்ப்பதற்கான மிகப்பெரிய தடையாகவும் அமைந்துவிடுகிறது .இன்றைய ரசிகர்களின் சிக்கல் இது .ஆகவேதான் நம்பவே முடியாத அளவுக்கு தரமற்ற படைப்புகள் வணிகரிதியாக கூட மாபெரும் வெற்றியை அடைகின்றன. சில படைப்புகள் எப்படி வெல்கின்றன என்று நாம் திகைத்து கொண்டே இருப்போம்.
பல திரைப்படங்கள் எப்படி ரசிக்கப்படுகின்றன என்பது சாமானியர்களாகிய எந்த ஒரு திரை ரசிகருக்கும் ஆச்சரியமளிப்பது. ஆனால் அவற்றைப் பார்ப்பவர்கள் அவற்றைவிட தரன் குறைந்த ரீல்ஸ் காட்சிகளில் கண்களும் உள்ளமும் பழகிக்கொண்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை .
இந்தச் சூழலில் அவற்றிலிருந்து வெளியே சென்று, தரமான கலைகளுக்கான கண் அமையும் பயிற்சியை அடைவது தான் நமக்கு முக்கியமான சவாலாக இருக்கிறது .இன்று அத்தகைய பயிற்சிகளை ஒரு தனி குழுக்களாக நம்மை திரட்டிக்கொண்டு மட்டுமே அடைய முடியும். எனது பார்வையில் இங்கு வெற்றிகரமாக திகழ்ந்த சென்ற கால கலைப்பட இயக்கத்தில் இருந்து ஒரு தொடர்ச்சியை எடுத்துக்கொண்டு தான் நாம் முன்னேற முடியும் .ஆகவே தான் ஹரிஹரன் அவர்களின் வகுப்புகளுக்கு அந்த முக்கியத்துவத்தை நான் அளிக்கிறேன்.
ஜெ












