அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய தத்துவக் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். தத்துவத்தை புரிந்து கொள்வதற்கான அழைப்பாகவும், தத்துவத்தை தவறாக புரிந்து கொள்வதற்கு எதிரான ஒரு எச்சரிக்கையாகவும் அந்த உரையாடல்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக இந்தியாவிலே மதத்துடன் தத்துவத்தை பிணைத்துக் கொள்வது மிக அதிகம் .ஆசாரங்கள் தான் மதம் என்று நம்புவதும் அதிகம். இங்கே தத்துவம் சார்ந்து அதிகமாக பேசிக் கொண்டிருப்பவர்கள் இறுதியாக ஆச்சாரத்திற்குள்ளும் அப்படியே சாதிக்குள்ளும் செல்வது தான் வழக்கம். எதிலிருந்து எல்லாம் தத்துவத்தை எப்படி எல்லாம் வேறுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இன்று தத்துவத்தில் ஈடுபட நினைக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் .அதை நீங்கள் உங்கள் உரைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள் .
தத்துவம் சார்ந்த ஒரு மன நிலையை அடைந்த பிறகு தத்துவத்திற்கு வருவதுதான் எல்லா வகையிலும் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கு உதவியாகிறது .ஆசார வாதிகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் உதிரி உணர்ச்சிகளாகவும் சில எளிய பயிற்சிகளாகவும் சிலவற்றை புரிந்து கொண்டு அவற்றையே தத்துவ கல்வி என்று நினைத்துக் கொண்டிருக்கும் நவீன குருமார்களின் மாணவர்கள் இன்னொரு பக்கம்.
இவற்றிற்கு இரண்டு பேர் வகுப்புகள் வழியாக சீராக தத்துவத்தை கற்பதற்கான வழிமுறைகளை நீங்கள் சொல்லி வருவது வரவேற்கத்தக்கது
கே .வெங்கடாசலபதி












