
அன்புள்ள ஆசிரியருக்கு,
இந்த வகுப்பிற்கு செல்வதில் குறைந்தபட்ச சிக்கலும் அதிகபட்ச விருப்பமும் இருந்தது. ஒருவழியாக பயணம் ஆரம்பமானது. அந்தியூரில் இருந்து மடம் செல்லும் 7:20 மணி பேருந்தில் ஏறிக்கொண்டேன். பேருந்தில் ஏறியதிலிருந்து இறங்கும் வரை எனக்குள் இருந்த பரவசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. திடீரென்று வேறொரு லோகத்தில் மனம் ஆனந்த கூத்தாடியது. பள்ளி செல்லும் மாணவர்கள் அங்கு வசிக்கும் கிராம வாசிகள் எல்லோரையும் எனக்கு நிரம்ப பிடித்திருந்தது. அந்த மாணவர்களை பார்த்த போது நான் மாணவியாகவும் மாணவச்செல்வமாகவும் இருந்த நாட்கள் நினைவலையில் வந்து போயின.
இப்படி லயித்திருந்ததால் மடம் வரை சென்று பிறகு அதே பேருந்தில் திரும்பி நித்ய வனம் வந்தேன். வகுப்பு தொடங்கப்பட்டிருந்நது. நானும் வகுப்பை தொந்தரவு செய்யாமல் அமர்ந்து கொண்டேன். பக்தி இலக்கியம் மற்றும் பக்தனின் இயல்புகள். சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியம் வேறுபாடுகள். ஆழ்வார்கள் பற்றிய சுவையான செய்திகள் இப்படி முதற்கட்டம் இனிதே ஆரம்பமாகி பின்பு பாசுரங்கள் வழி பெருமாளை தரிசிக்க துவங்கினோம்.
என் சிறு குட்டன் எனும் தலைப்பில் 10 பாடல்களை மிகுந்த சொல்லழகோடும் நாடகீயத்தோடும் தத்துவார்த்தமாகவும் ஆசிரியர் சொல்ல சொல்ல மனம் மெய்மறந்து ஆயர் பாடி கண்ணனை தரிசித்த வண்ணம் இருந்தது.
“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாக தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழ
திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே“.
இப்பாடலில் சொல்லப்பட்ட நமக்குள் இருக்கும் நான்(என்னுடையது) ஆகிய உறியை உருட்டி விட்டு நமக்குள் இருக்கும் அகந்தையை அழித்து நம்மை மகிழ்ச்சியில் மட்டுமே திளைக்க வைக்க இறைவனால் மட்டுமே இயலும்.
நப்பின்னை காணில் சிரிக்கும்
இதில் பெரியாழ்வார் கண்ணனுக்கும் யசோதைக்கும் நடக்கும் பொய்கோப பேச்சுவார்த்தைகளை மிக தெளிவாக ஆசிரியர் விளக்கிசில இடங்களில் சிந்திக்கும் படியான வினாகக்களையும் எழுப்பி எங்கள் ஆர்வத்தை இன்னும் தூண்டிவிட்டார்.
“தாய்மார் மோர் விற்க போவர் தகப்பனார் கற்று ஆநிரை பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே“.
வைணவம் பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டு பின்னர் இறைவனின் ஐந்து நிலைகள் (1) பரம்
(2) வியூகம் (3) விபரம் ( 4)அந்தர்யாமி (5) அர்ச்சை பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கினார் ஆசிரியர்.
பின்னும் ஆளும் செய்வன்
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் இறைவனை வழிபடும் விதம் சற்று மிரள வைத்தது. அவள் காதலித்த விதம் என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.
“நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் – கொலோ“
இப்பாடலில் இறைவனுக்கு கொடுப்பதில் ஆண்டாளை யாராலும் மிஞ்ச முடியாது என்று தெளிவாகிறது. ஒருவேளை இதனை பெருமாள் ஏற்கவில்லை எனில் ,
“இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப்பெறில் நான்
ஒன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்” என்கிறாள். என்னே! ஆண்டாளின் பக்தி என்று நான் வியந்த இடம் இப்பாடல்.
திருமங்கை ஆழ்வாரின்
“கொட்டாய் பல்லி குட்டி” யை நாங்களும் கைத்தட்டி ரசித்தோம்.
பாதியும் உறங்கிப் போகும்
“வேத நூல் பிராயம் நூறு மனிதர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதால் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே“.
–தொண்டரடிப்பொடி ஆழ்வார்
இப்பாடலில் நாங்களும் பிறவி வேண்டேன் பெருமாளே உன் திருவடி அடைதல் வேண்டும் என்று வேண்டி நின்ற நொடிகளை பெருமாள் கவனித்திருப்பார் என்றே நம்புகிறேன்.
ஒன்று அலாத மாயையாய்
“பூ நிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்கு மாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே“.
–திருமழிசை ஆழ்வார்
இப்பாடலை விளக்குவதற்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆனது. அத்துனை ஆழமான தத்துவம் நிறைந்த பாடல் இது.
இத்தலைப்பின் கீழ் பெருமாளின் அவதாரங்கள் மற்றும் ஐம்பூதங்கள் குறித்து சிறப்பாக விளக்கினார் ஆசிரியர்.
என்னையும் உன்னில் இட்டேன்
“பொன்னை கொண்டு உரைகள் மீதே நிறம் எழ உரைத்தால் போல்
உன்னை கொண்டு என் நாவகம்பால் மாற்று இன்றி உரைத்துக்கொண்டேன்
உன்னை கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே“.
– பெரியாழ்வார்
இறுதியாக என்னையும் உன்னில் இட்டேன் என்ற தலைப்பில் சில பாடல்களை பார்த்துவிட்டு இனிதே வகுப்பு நிறைவடைந்தது.
“வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே“.
–குலசேகர ஆழ்வார்
இப்பாடலில் சொல்லப்பட்டது போல நானும் எனக்கு இறைவன் தருகிற துன்பங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு இன்பமாகிய இறைவனின் திருவடியை அடைய வேண்டும்.
நான் அந்த மூன்று நாட்களில் மிகவும் நிதானமாக ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து கடந்தேன். ஆழ்வார்கள் வெறுமனே பாடல்களை பாடுவதற்கு மட்டும் எழுதவில்லை. கணிதவியல், வானவியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல், பறவையியல், நாட்டார் மரபுகள், காதல், குழந்தை வளர்ப்பு என பல துறைகள் சார்ந்து மிகவும் நுட்பமாக எழுதி இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன்.
காலங்கள் கடந்தாலும் கற்ற அறிவு அழியாது. அறிவை அழிக்கும் வல்லமை பெற்றவன் இறைவன் மட்டுமே. நினைக்க நினைக்க நெஞ்சூரும் அழகான தருணங்கள் அவை. இந்த வகுப்பை எடுத்த ஆசிரியர் மிகவும் சீரும் சிறப்புமாக வகுப்பை கொண்டு சென்றார். பல புராணக் கதைகளை கேட்பவர் ரசிக்கும் படி சொன்னார். அவ்வப்போது சில சிந்தனை வினாக்களை எழுப்பி சிந்திக்க வைத்து விடை சரியாக சொன்னவர்களை சாக்லேட் கொடுத்து ஊக்கப்படுத்தினார். நானும் மூன்று சாக்லேட்டை பெற்றதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் உள்ள பல பெருமாள் கோவில்களையும் அங்கு உள்ள சிறப்புகளையும் சில சமயங்களில் கோயிலுக்கு செல்லும் வழிதட வரைபடத்தையும் சொன்னார். எனக்கு இந்த வாய்ப்பை அமைத்து கொடுத்த உங்களுக்கும் இந்த வாய்ப்பை பற்றிக்கொள்ள உந்துசக்தியாக இருந்த அப்பா அம்மா (ரவீந்திரன் மீனாட்சி) அவர்களுக்கும் அருமையாக வகுப்பு எடுத்த வைணவ ஆசிரியருக்கும் நன்றிகள்.
பவானி












