அன்புள்ள ஜெ,
இலக்கியத்தின் இடத்தைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இலக்கியத்தை முன்னெடுப்பதற்காக நியூயார்க் இலக்கிய விழா போன்றவற்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இங்கே இலக்கியத்தின் கூடவே மெய்யியல் தத்துவம் ஆகியவற்றையும் நீங்கள் முன்வைக்கிறீர்கள். அவற்றுக்கும் இவ்வாறான ஒரு உலகளாவிய இயக்கம் தேவைப்படுகிறது என்பது என்னுடைய எண்ணம்.
ராஜ்குமார்
அன்புள்ள ராஜ்
தத்துவம் மெய்யியல் ஆகியவை இலக்கிய கல்வியின் ஒரு தொடர்சியாகவே உருவாக முடியும். அவற்றை மதத்துடன் இணைக்காமல் கற்பிக்கவேண்டும் என்றால் முதலில் அவற்றுக்கு பின்புலமாக ஒரு வாசிப்புத் தளத்தை உருவாக்க வேண்டும். அது இலக்கியம் வழியாகவே உருவாகமுடியும் .அதன் முதிர்ச்சியில் மட்டுமே ஓர் உலகளாவிய தத்துவப் பயிற்சி மரபை உருவாக்க முடியும்.
இந்த இலக்கிய நிகழ்வுகளுக்குத் தொடர்ச்சியாக இன்று கீழைத்தத்துவம் மேலைத்தத்துவம், கலை ஆகியவற்றைக் கற்பிக்கும் வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவை எதிர்காலத்தில் இவற்றுடன் இணைந்து வளரலாம்.
ஜெ










