வாழும்தமிழ் மாநாடும் ஊடகங்களும்

அன்புள்ள ஜெ

இந்தியச் சூழலில் ஆங்கில மொழி ஊடகங்கள் வாழும்தமிழ் இலக்கியவிழா பற்றிய விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளனர். நியூயார்க் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் தமிழ்ச்சூழலில் இருந்து பெரிய அளவில் கவனம் கிடைத்ததாகத் தெரியவில்லையே? அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லையா?

ரமேஷ் கிருஷ்ணன்

நிகழ்ச்சி குறித்த செய்திகளை அனைவருக்கும் அனுப்பினோம். அந்தச் செய்தியின் முக்கியத்தை உணர்ந்தே ஆங்கில ஊடகங்கள் பேட்டிகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன. தமிழ் ஊடகங்களில் தினமணி ஒரு நல்ல பேட்டியை வெளியிட்டது. குங்குமம் வெளியிட்டது. மின்னூடகங்களில் புதியதலைமுறை இதழ் செய்திவெளியிட்டது. மற்றபடி இதழ்கள் அக்கறை காட்டவில்லை. 

ஓர் இதழில் செய்தி வருகிறது என்றால் அங்கே இலக்கியம் என்றால் என்ன என்று அறிந்த, இச்செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒருவர் இருக்கிறார் என்றுதான் பொருள். துரதிருஷ்டவசமாக நம் தமிழ் ஊடகங்களில் அப்படி இலக்கியஞானம் கொண்டவர்கள் எவருமில்லை. பெரும்பாலான தமிழ் அச்சு ஊடகங்கள் கிட்டத்தட்ட வாசகர்கள் இல்லாமல், அழிவின் விளிம்பில் நிற்கின்றன. தகுதியானவர்களை வேலைக்கு வைக்குமளவுக்கு அவற்றுக்கு நிதியுமில்லை. ஆகவே அவற்றிடமிருந்து பெரிதாக எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றது.

மேலும் தமிழிலுள்ள பரப்பு ஊடகங்கள் நாங்கள் என்ன செய்கிறோமோ அவற்றுக்கு எதிர்த்தரப்பாகச் செயல்பட்டவை. நாங்கள் சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்தை முன்வைக்கிறோம். அது பரப்பு ஊடகங்களுக்கு எதிராகச் செயல்பட்ட இயக்கம். அதன் ஆளுமைகள் புதுமைப்பித்தன் முதல் அசோகமித்திரன் வரை அந்த பேரூடகங்களால் வெளியே நிறுத்தப்பட்டவர்கள். அவர்களைக் கொண்டுசென்று நியூயார்க்கில் நிறுத்துகிறோம். அதற்கு அவர்கள் இயல்பாக ஆதரவளிப்பார்கள் என எப்படி எதிர்பார்ப்பது?

ஜெ

முந்தைய கட்டுரைவாழும் தமிழுக்கு வாழ்த்து