வாழும் தமிழ்- வாழ்த்து

அன்புள்ள ஜெயமோகன்,

வாழும் தமிழ் இலக்கிய விழா சிறப்புடன் நிகழ என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒரு பெரும் கனவை தன்னமின்றி யோசிப்பதும் அதை இத்தனை பேரை இணைத்து உலகளாவக் கொண்டு சென்று சேர்ப்பதும் சாதாரணமான ஒன்று அல்ல. இந்த சாதனையை நீங்கள் ஒருவராக ஏற்க மாட்டீர்கள். உங்கள் நண்பர்களின் சாதனை என்றே சொல்வீர்கள். அனைவரையும் வாழ்த்துகிறேன்.

ஒரு காலத்தில் எதையோவது பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. பெரும் கனவுகளுடன் செயல்பட்டார்கள். சேர்ந்து செய்ய முயன்றார்கள். ஆகவேதான் இடதுசாரிக் கட்சிகளில் அத்தனை இளைஞர்கள் சேர்ந்தனர். ஒவ்வொரு சிறு ஊரிலும் நூலகங்கள், வாசகசாலைகள் எல்லாம் இருந்தன. இன்றைய சமூக ஊடகக் காலம் ஒவ்வொருவரையும் அந்தந்த நாளில் கட்டிப் போட்டு இருக்கிறது. எவருக்குமே ஐந்து நாட்களுக்கு அப்பால் இருக்கும் எதைப் பற்றியும் கவலை இல்லை. ஐந்து நாளுக்கு முன்னால் இருக்கும் எதுவும் நினைவிலும் இல்லை. ஒவ்வொரு நாளும் அன்றன்றைய செய்திகள் பரிமாறப்படுகின்றன. அதற்கு எதிர்வினைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதைப்பற்றி விவாதம் நடக்கின்றது. அது முடிவதற்குள் அடுத்த நாள் வந்துவிடுகிறது. ஐந்து நாட்களுக்கு முன் பேசியதையும் எவருமே மறுபடியும் பேசுவதில்லை .

ஆகவே தான் இன்று இத்தகைய ஒரு பெரிய விழா என்பது ஒரு பெரிய பண்பாட்டுக் கொடை என்ற எண்ணம் ஏற்படுகிறது. நம் இலக்கியத்தை நாம் உலகளவக் கொண்டு சென்று சேர்க்கிறோம் என்பது முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் ஒரு பெரும் செயலின் பொருட்டு நாம் அனைவரும் ஒன்றாக சேர முடிகிறது, ஒரே கனவைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது, நம்மை ஒரு செயல் இணைக்கிறது என்பதுதான். இந்த மனநிலையைத் தக்கவைத்துக் கொண்டால் நாம் இங்கேயே அடையும் உச்சங்கள் நிறைய உள்ளன. எளிய சச்சரவுகள் போட்டி- பொறாமைகளுக்கு அப்பால் நாம் இணைய முடியும் என்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிதான். அந்த நம்பிக்கையே பெரும் பரிசுதான்.

அதற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டி இருக்கிறது. உங்கள் நண்பர்களுக்கும் நன்றி.

ராம் அழகப்பன்

முந்தைய கட்டுரைநாம் வரலாறற்றவர்களாக ஆகிறோமா?