அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் தளத்தில் ஓவிய பயிற்சி பற்றிய அறிவிப்பை பார்த்தேன். இன்றைய சூழலில் ஓவியத்தை மிக எளிதாக ஏ.ஐ. வைத்து செய்துவிட முடிகிறது. கையால் ஓவியம் வரையும் காலம் முடிந்து விட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூட ஏஐ வைத்து ஓவியங்களை வரையலாம் என்று இப்போது ஒத்துக் கொள்வது போல தெரிகிறது. இந்த சூழலில் ஓவிய வகுப்புக்கு என்ன இடம் இருக்க முடியும்?
ராம்குமார் மயிலை
அன்புள்ள ராம்.
ஏறத்தாழ இதே போன்ற பல கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஓவிய அறிமுகம் என்பது இரண்டு வகை தேவைகளுக்காக. ஒன்று ஓர் ஓவியர் ஆவதற்கான பயிற்சி. அது படச்சட்டகம் அல்லது களம் , அதில் வரையும் ஓவியங்களின் வடிவங்கள் வழியாக தொலைவும் அண்மையும் விரிவும் தொடர்புறுத்தப்படுவது, குறியீடுகளை அமைப்பது, மற்றும் வண்ணக் கலவைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து கொள்வதும் பின்னர் படிப்படியாக தொடர் பயிற்சி எடுப்பதும் நிகழ்கிறது.
இரண்டாவது ஓவியத்தை சற்று தொழில்நுட்ப ரீதியாக புரிந்து கொள்வதற்கான அடிப்படைப் பயிற்சி. ஓவியம் வரைவதற்காக அல்ல, ஓவியத்தை உணர்வதற்கான ஓவியப் பயிற்சி. ஓவியம் பலவகையிலும் மறைமுகமாகப் பயன்படுத்தப்படும் இணையம் சார்ந்த மின் வரைவு வடிவங்களை நாமே செய்வதற்கான பயிற்சி. இத்தகைய பயிற்சிகள் ஓவியத்தைப் பற்றிய ஒரு கண் பழக்கத்தை, அழகியல் தன்னுணர்வை உருவாக்குகின்றன.
இந்த இரண்டு வகையில் இந்த வகையான அறிமுக வகுப்புகள் உதவியானவை. இவை இந்த ஏஐ சூழலில் தான் மேலும் முக்கியமானவை என்று தோன்றுகிறது. எப்படி செல்பேசி வந்தவுடன் புகைப்படம் மலிந்ததோ அதேபோலத்தான் ஓவியம் ஏ.ஐயால் மலிவாக்கப்பட போகிறது. செல்பேசியில் எவர் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம் என்று வந்தபோது புகைப்படக் கலை இல்லாமல் ஆகவில்லை. மாறாக இன்று புகைப்படக் கலைக்கு வேற எந்த காலகட்டத்தை விட அதிகமான இடம் இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை .
ஏனெனில் பிழையான, குறைவான, சாதாரணமான புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்காக பெருகும் போது சரியான, அழகான ,தனித்துவம் கொண்ட புகைப்படங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்று பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் புகைப்படங்கள் உள்ளன என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அதுவே ஓவியத்திற்கும் நிகழும்.
ஏ.ஐயை பயன்படுத்தி ஓவியத்தை உருவாக்க வேண்டும் என்றாலும் கூட படச்சட்டகம் சார்ந்தும் வண்ணக் கலவைக்ள் சார்ந்து, உருவங்களின் ஒத்திசைவு சார்ந்தும் ஒரு கண் பழக்கம், ஓர் அழகியல் புரிதல் நமக்கு தேவை .அது இல்லையில் நான் உருவாக்கும் டிசைன்கள்கூட அசட்டுத்தனமானதாகவே இருக்கும்.
நாம் இன்று வெவ்வேறு வகையில் வடிவமைப்புகளை நாமே செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறோம் .ஒரு ‘பிரசன்டேஷன்’ செய்ய வேண்டியிருக்காத வேலையே குறைவு. ஓர் இணைய பக்கத்தையோ அல்லது இணைய அறிவிப்புப்பக்கத்தையோ நாமே வடிவமைக்க வேண்டி இருக்கிறது . ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு அலுவலகப் பணியாளரும் தானாகவே இவற்றை செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். அவற்றை புத்திசாலித்தனமாகவும் அழகாகவும் செய்பவர்களுக்கு ஒரு படி மேலான இடம் இருக்கிறது.
அவற்றை ஏ.ஐ மட்டுமே கொண்டு செய்துவிட்டால் நீங்கள் சராசரிக்கும் கீழே செல்கிறீர்கள். ஏ.ஐ செய்யாத ஒன்றை ஒரு படி மேலாக ஏஐயைக் கொண்டே செய்ய வைப்பதில்தான் இன்றைய சவாலே அமைந்திருக்கிறது அந்தக்கு ஓவியத் திறன் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஓவியம் சார்ந்த அழகியல் பழக்கம் அல்லது கண் பழக்கம் பயிற்சி இருந்தால் போதுமானது .
ஆகவே அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைவருக்குமே ஓவியப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஓவியத்தின் வெவ்வேறு அழகியல் இயக்கங்கள் பற்றி பள்ளி மாணவர்களே பயில்கிறார்கள். அந்த வகையான பயிற்சிகளுக்கு நம் கல்விச்சூழலில் இடமே இல்லை. அந்த அறிமுகத்தை நாம் இளையோருக்கு அளிக்கவேண்டும். அதற்கான ஒரு தொடக்கமாகவே இந்த பயிற்சி வகுப்புகள் அமைக்கப்படுகின்றன.
ஜெ












