அன்புள்ள ஜெ,
இலக்கியத்தை ஒரு மன ஆறுதலுக்காக துணைவே படிக்கிறோம் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. வாழ்க்கை பற்றி புரிந்து கொள்வதற்கு இலக்கியவாதிகள் எதுவும் உதவ மாட்டார்கள், அதற்கு சிந்தனைகளும் ஞானிகளும்மதாத்ன் உதவுவார்கள் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் சிந்தனைகளை படிக்கும்போது அவற்றிற்கு எதிரான தர்க்கங்கள்தான் உருவாகின்றன. இலக்கியங்கள் மட்டும் தான் நம்மை திருப்திப்படுத்தி நம்மை நிறைவு தந்து நாம் ஏற்கும் வாழ்க்கை பற்றிய அறிதல்களை அளிக்கின்றன என்பதை நான் எனது நேரடியாக அனுபவத்திலே அடைந்தேன் .
இது ஏன் என்று எனக்கு புரியாமல் இருந்தது. உங்களுடைய ஒரு காணொளியில் தான் அதை பற்றிய ஒரு உணர்வை அடைந்தேன். இலக்கியம் வாழ்க்கையைத்தான் சித்தரித்து காட்டுகிறது. வாழ்க்கையில் இருந்து நாம் செல்லும் சொந்தமான முடிவுகளைத்தான் அந்த இலக்கியத்தில் இருந்து பெற்றுக்கொள்கிறோம்.அவை நாம் சொந்தமாக அடைவது என்பதனால் தான் நமக்கு தெளிவாகவும் ஏற்புடையதாகவும் இருக்கிறது. நிஜமான வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறுவது போல ஒரு உண்மையைத்தான் இலக்கியத்தில் இருந்தும் பெற்றுக் கொள்கிறோம். அதாவது இலக்கியம் என்பது வாழ்க்கை அனுபவத்தை பெருக்கிக் கொள்வதுதான்.
இந்த புரிதலை அடைந்த உங்கள் காணொளி எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. நன்றி
ஜெயபால் கிறிஸ்டோபர்











