கவிநிலவனின் வகுப்பு.

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

கடந்த மூன்று மாதமாக கவி நிலவன் அவர்களின் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் வகுப்பு நடந்தது. முதல் வகுப்பில்  பிள்ளை தமிழ், குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு, விநாயகர் வணக்க  பாடல் ஆகியவற்றை கற்றுக் கொண்டோம். அதில் வகுப்பு எப்படி இருக்கும் என்ற புரிதல் வந்தது. வார்த்தை வார்த்தையாக தமிழ் வகுப்பு போல் அல்லாமல், வரியை விளக்கி அதில் கிடைக்கும் காட்சியை விவரித்து  சொல்வதாக இருந்தது. இப்பாடலில் மதநீர் ஒழுகும் யானை, திருநீறை அள்ளி அள்ளி மேலே பூசியதால், ஐராவதத்தை ஒத்திருந்த காட்சி கண் முன் விரிந்தது. 

காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் என்று பத்து பருவங்கள் உள்ளன. அதில் மூன்று பருவங்களை பற்றி மட்டும் எழுதுகிறேன் .  

நீராடல் பருவம் 

முந்தைய எட்டு  பருவங்களுக்கும்,  பதம் பிரித்த பாடலை  எங்களுக்கு அனுப்பினார். நீராடல் பருவத்தில் தமிழ் வாத்தியாரிடம்  சிக்கிக் கொண்டோம். PPT போட்டு, பதம் பிரிக்க நன்னூல் நெறிகளை சொல்லிக் கொடுத்து, பள்ளி பருவத்தை நினைவூட்டினார். முதலில் கேட்கும் போது, புணர்ச்சி விதிகள் கடினமாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கும் போது சிறிது புரிகிறது. 

இப்பருவத்தின் முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. அன்னையின் சங்கு ரேகையையும், சங்கு வளையையும் , வைகை ஆற்றில் உள்ள சங்குகள் சந்தித்தன. கண்ணாகிய கயலை, ஆற்று கயல் மீன்கள் சந்தித்தன. அன்னையின் கூந்தலை, ஆற்றின் கொடிப்பாசி சந்தித்தது. இந்த சந்திப்புக்கள் வராமல் வரும்  உறவினர்களை சந்தித்த ஆனந்தத்தை தந்தது. ஆற்றில் நீராட வந்த அஷ்டதிக்கு யானைகளை, வைகையின் வெள்ளம் மேலே பந்து போல் தூக்கி வீச, அவை  ஐராவதத்தை சென்று சந்தித்து வந்ததாம். அப்படிப்பட்ட வைகை பெருக்கில் நீராடு என்று அழைக்கிறார்.

அம்மானை பருவம் 

அன்னை பந்து விளையாடும் அழகை இந்த பருவம் கூறுகிறது. திருமணத்தன்று பூப்பந்து விளையாடுவது , நிலவைத் தொடரும் மருண்ட மான், அன்னையின் கையில் இருந்து சிவப்பு நிறத்தையும், கண்களில் இருந்து கருப்பு நிறத்தையும், முகத்தில் இருந்து வெள்ளை நிறத்தையும் பிரதிபலிக்கும் முத்து பந்து, சூரிய மண்டலத்தையே மறைக்கும் மகரந்த தூள்கள் என்று பல காட்சிகள் மனதை மயக்கியது.  

ஊசற் பருவம் 

கவித்தம்பி AI gemini இடம் கொடுத்து, சற்றே மாற்றியமைத்த ஊசற் பருவ அன்னையின்  படத்திலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. அவளின் தோரணையும், கையில் கொஞ்சும் கிளியும், காலில் தீட்டப்பட்ட வண்ணமும் மிக அழகு. கண் கூச வைக்கும் வைரமும், மணிகளுமான ஊஞ்சலில் சுடராக இருந்து அருள் புரியும் அன்னையை தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

வகுப்பினூடேயே கற்று கொடுக்கும் பாடலுக்கு தொடர்புடைய சிற்பங்கள், தங்களின் சிறுகதை, வெண்முரசு, தேவதேவன் கவிதை, மரபின் மைந்தன் முத்தையா கவிதை, ஜப்பானிய ஹைக்கூ, தத்துவம், சைவ சித்தாந்தம், கம்ப ராமாயணம், அபிராமி அந்தாதி என்று  பலவற்றிலிருந்து மேற்கோள் காட்டியது,  அக்கருத்தை  இன்னும் விரிவாக புரிந்து கொள்ள  உதவியது. 

3.2.26 அன்று தொடங்கிய வகுப்பு நேற்று(29.04.26) மதுரை மீனாட்சி அம்மையின் திருக்கல்யாண நாளில்  நிறைந்தது  அவளின் அருள் தான்.  என் இஷ்ட தெய்வம் அன்னை மீனாட்சி என்பதாலும், பிறந்த ஊர் மதுரை என்பதாலும் வகுப்பை கூடுதலாகவே ரசிக்க முடிந்தது.  எப்போதும் உடனிருந்து காக்கும் அன்னையின் பெருங்கருணைக்கு நன்றி. 

என்றும் அன்புடன்,

S.ராஜேஷ்வரி

கோவை.  

முந்தைய கட்டுரைநீலக்குறுநிலவு- பாரி