அப்பால் ஓர் இடம்!

 

அன்புள்ள ஜெயமோகன்,

உலகில் தேவையில்லை. அதற்கு அப்பால் உள்ளதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று சொல்லும் மதஞானிகள் பலர் உள்ளனர். ஆன்மிகம்பேசுவோர் அதைச் சொல்வதுண்டு. உலகியல் தவிர வேற எதுவுமே முக்கியமல்ல பிற எல்லாம் ஏமாற்றுவேலை என்று சொல்வது பகுத்தறிவு என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

(தமிழகத்தில் மட்டும் தான் பகுத்தறிவு என்று சொல்பவர்கள் கலை, சிந்தனை ஆகியவற்றையும் முழுமையாக மறுப்பவர்களாக இருக்கிறார்கள். நடைமுறை சார்ந்த அறிவியல்,பொதுச்சாமர்த்தியம், கட்சியரசியல் ஆகியவை தவிர வேறு எதையுமே அவர்கள் முக்கியமாக நினைப்பதில்லை)

இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவே இலக்கியம்,அழகியல், தத்துவம் ஆகியவை சார்ந்த ஒரு உலகம் உலகியலுக்கு அப்பால் உண்டு என்றும், அந்த உலகியலுக்கு அப்பால் உள்ள உலகத்தை மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்வது என்பது உலகியலை மிக வெற்றிகரமாக நடத்துவதற்கு மிக அவசியமான ஒன்று என்றும் சொல்லும் ஒரு தரப்பாக உங்கள் குரல் ஒலிக்கிறது.

உலகியல் என்பது ஒரு போர்க்களம் என்றால் அதில் நமக்கு ஓய்வெடுக்க இடம் தேவைப்படுகிறது. நமக்கே என்ற ஒரு சிறு அறையை நம் வீட்டில் ஒதுக்கி கொள்வது போல என்று நீங்கள் அதைச் சொன்னீர்கள். மிக முக்கியமான ஒரு கருத்து .

என் வாழ்க்கை முழுக்க நான் திருமந்திரத்தை படிப்பதையும், அது சார்ந்த குறிப்புகளை எடுப்பதையும், அதை வெவ்வேறு இடங்களில் நண்பர்களிடம் உரையாடுவதையும் எனக்கான ஒரு தனி உலகமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் என்ன லாபம் என்று சிலர் கேட்பது உண்டு. லாபம் இல்லாத சில விஷயங்கள் உலகத்தில் உண்டு அவைதான் சந்தோஷத்தை அளிக்கின்றன என்று அவர்களுக்கு பதில் சொல்வேன்.

அடிக்கடி என்னிடம் ‘இதெல்லாம் அர்த்தமே இல்லை’ என்று சொல்லும் ஒருவர் நண்பரிடம் ‘சரி உங்கள் வாழ்க்கையில் என்ன பெரிய அர்த்தம் ?’என்று ஒரு முறை கேட்டேன். அவர் வாழ்க்கை முழுக்க அலுவலகத்தில் போராடிநார். அதன்பிறகு பிள்ளைகளிடம் போராடினார். ஒரு கணம் கூட நிம்மதியோ மகிழ்ச்சி அடையாத ஒருவர்.

நான் சொன்னேன் “என் வாழ்க்கை முழுக்க நிம்மதியையும் மகிழ்ச்சியையும் திருமந்திரம் எனக்கு அளித்திருக்கிறது. அதற்கிணையாக வேற எதுவுமே கிடைக்க வேண்டியது இல்லை. பேரம் பேசிய  வாழ்க்கையில் இருந்து எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. வாழ்க்கை வந்து ஒரு மாபெரும் கனிமரம். அது கனிகளை தன் லடியிலேயே போட்டு இருக்கிறது. அதை பொறுக்கிக் கொள்வது மட்டும்தான் நாம் செய்ய வேண்டியது”

இந்த மாதிரியான விஷயங்களை தமிழ்ச் சூழலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒன்றை அதீதமான நம்பி தீவிரமாக உணர்ச்சிகரமாக  பேசிக் கொண்டிருப்பதும், அதற்காகப் பூசலிடுவதும், தெரியாத ஒன்றைப் பற்றி தெரிந்தது போல பேசுவதும் தான் நம்முடைய பொதுவெளியில் பரவலாக இருக்கின்றன.இச்சூழலில் உங்களை போன்ற எழுத்தாளர் இதை சொல்வது மிக முக்கியமான ஒரு விஷயம். சொல்லிக் கொண்டே இருங்கள் என்று மட்டும் தான் மூத்தவனாக என்னால் சொல்ல முடியும்.

புலவர் மா.நமச்சிவாயம்

முந்தைய கட்டுரைகவனச்சிதைவுதான் மல்டி டாஸ்கிங்