அன்புள்ள ஜெயமோகன்,
மல்டி டாஸ்கிங் என்பது உண்மையில் ஒரே நபர் பல வேலைகளை செய்வதுதானே ஒழிய ஒரே சமயத்தில் பல வேலைகளை குழப்பிக் கொள்வது அல்ல என்பதை தெளிவாக சொல்லியிருந்தீர்கள். ஆனால் இன்று பலர் கவனச் சிதைவை மல்டி டாஸ்க் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சாதாரண விஷயத்தை அவர்களால் செய்ய முடியவில்லை. பெரும்பாலானவர்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் செல்போனில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் பதில் வராது. ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் பதில் வராது. பார்த்தால் நேரமில்லை என்று பதில் வரும். என்னதான் அப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் அதிலேயே ஒன்றிலிருந்து இன்னொன்று தாவிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த கவனச்சிதைவுக்கு மருந்து என்பது அது ஒரு நோய் என்று நாமே புரிந்து கொள்வதுதான். அதுதான் முதல் தொடக்கம். அதிலிருந்து தான் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும் .அதையே தகுதி என்று நினைத்துக் கொண்டோம் என்றால் ஒருபோதும் அதில் இருந்து வெளிவரப்போவதில்லை.
ஆனால் இன்று பல இளைஞர்களிடம நாம் இதை சொல்ல முடிவதில்லை. அவர்கள் தங்கள் அபாரமான திறமை கொண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி நினைக்க வைப்பதற்கான அடிப்படை என்பது முந்தைய தலைமுறையினருக்கு தெரியாத பல தகவல்கள், உலகளாவிய பல சிறிய விஷயங்கள் அவர்களுக்கு நினைவில் இருக்கின்றன என்பதுதான். அதற்கு காரணம் என்று சமூக வலைத்தளங்கள் உலகளாவ இருக்கின்றன என்பதுதான். செய்திகள் உலகளாவ வருகின்றன என்பதுஹான்.
ஆனால் அந்த் உதிரிச் செய்திகள், ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத தகவல்களால் எந்த பயனும் இல்லை. அவை சிந்தனையாக ஆவதில்லை. சிந்தனை செயலாக மாறுவதும் இல்லை. இந்த வகையான தகவல்களை தெரிந்து கொண்டிருப்பதனாலோ அல்லது தொழில்நுட்பம் சார்ந்து சில் நுணுக்கங்களை தெரிந்து கொண்டிருப்பதாலோ ஒருவர் முந்தைய தலைமுறையை விட மேலானவர் ஆவதில்லை. இந்த கவனச் சிதைவு தங்களுக்கு இருக்கிறது என்று இளைஞர்கள் புரிந்து கொள்ளும்போது தான் அவர்களால் இன்று இந்த சூழல் அவர்களை நோயாளிகளை ஆக்கி இருக்கிறது என்று எதார்த்தத்தை உணர்ந்து வெளிவர முடியும்.
இதை முந்தைய தலைமுறையாக் நான் சொல்லவில்லை. இந்றைய தலைமுறையிடம தொடர்ச்சியாக தொடர்பு கொண்டிருப்பவன், அவர்களுக்கு கல்வி கற்பிப்போம் என்ற அர்த்தத்திலே சொல்கிறேன்.
மா.ராஜாராம்











