அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளிகளில் நீங்கள் திரும்பத் திரும்ப ஒரு குறிப்பிட்ட சாராரை சென்றடைய வேண்டும் என்று முயல்வதைப் போல் தெரிகிறது. இங்குள்ள சாமானிய பாமர மக்களிடையே அடிப்படையான விழிப்புணர்ச்சியை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை என்று தோன்றுகிறது. அவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டியவர்கள் அல்ல என்று நினைக்கிறீர்களா? அவருடைய பணியாற்றுதliல் உங்களுக்கு ஆர்வம் இல்லையா?
என். நேசராஜ்,
அன்புள்ள நேசராஜ்,
என் காணொளிகள் சிந்திப்பவர்கள், ஏதேனும் கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்காக மட்டுமே. அவர்கள் என்னிடம் பெறும் கல்வியை அடுத்த கட்டத்தில் இருக்கும் சாமானியர்களுக்கு எடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்.
சாமானியர்கள் அறிவுத் தேடல் கொண்டார்கள் அல்ல. அவர்களுக்கு தேவை அறிவுப்பயிற்சியும் அல்ல. அவர்களுக்கு வாழ்க்கைப்பயிற்சி தான் தேவை. அதை அளிக்கும் சமூக பணியாளர்கள் மீது எனக்கு பெருமதிப்புண்டு. அவர்களை தொடர்ந்து ஆதரித்து முன்வைத்தும் வருகிறேன்
ஆனால் எனது பணி சமூகப் பணி அல்ல அறிவுப்பணி மட்டும்தான். அது அறிவார்ந்த தேடல் கொண்டவர்களிடம் மட்டும்தான் என்பதில் தெளிவுடன் இருக்கிறேன்.
ஜெ










