அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளியில் பேசும் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் உங்களுடன் நிரந்தரமான உரையாடலில் இருந்து கொண்டிருக்கும் ஒருவன் நான். ஒரு முன்னாள் ஆசிரியன்.
அண்மையில் ஒரு காணொளியில் நீங்கள் படைப்பூக்கம் கொண்ட குழந்தைகளை பற்றி பேசி இருந்தீர்கள். இந்த தலைமுறையின் பெரும்பாலான குழந்தைகள் தீவிரமான படைப்புத்தன்மையுடன்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் இளமையிலேயே அவர்களுக்கு சத்துணவு கிடைக்கிறது .உடல் உழைப்பு பெரும்பாலும் அளிக்கப்படுவதில்லை. அவர்கள் கடுமையான மூளை உழைப்புக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் மனதாலும் மூலையாலும் உழைத்தால் மட்டும் போதும் என் இந்த சமூகம் அவர்களிடம் சொல்கிறது. ஆகவே அவர்களுக்கு தீவிரமான தேடலும் அதையெல்லாம் புரிந்து கொள்ள திறனும் இருக்கிறது.
நான் சிறுவனாக இருந்தபோது ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் உடல் உழைப்பு வேலைகளை செய்ய வேண்டி இருந்தது. சரியான உணவும் இல்லை. மிகக் குறைவான நேரம் தான் மனவளர்ச்சிக்கு செலவிட வேண்டி இருந்தது.
இப்படி குழந்தைகளுக்கு ஒரு உலகத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு அந்த குழந்தைகளுக்கு கற்பதற்கு எதையுமே அளிக்காமல் திரும்பத் திரும்ப குறைவான பாடங்களை அளித்து அவற்றை இயந்திரத்தனமாக நகல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தும் போதுதான் அவர்கள் மனச்சோர்வடைகிறார்கள்.அந்த மனச்சோர்வுதான் அவர்களை இன்றைய கணிப்பொறி விளையாட்டுகளை நோக்கி எல்லாம் கொண்டு செல்கிறது என்று ஒரு ஆசிரியராக என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
நாம் இப்போது யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் இது. இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நம் குழந்தைகளை அறிவுக்கூர்மை தேவைப்படும் செயல்பாடுகளை நோக்கி கொண்டு செல்லவில்லை என்றால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அதை தெளிவாக சொன்னமைக்கு நன்றி.
தயானந்தன்.











