
அன்புள்ள ஜெயமோகன்,
கோவை பெரியார் நூலகத்தில் வெளிப்பட்டுள்ள ஊழல், நம்முடைய வாசிப்புச் சூழல் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும், நம்முடைய பதிப்புத்துறை எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்துவந்த ஒரு பெரும் ஊழலின் உச்சக்கட்டம் மட்டுமே இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஆனால், இது ஏதோ இப்போதுதான் புதிதாக நிகழ்ந்துவிட்ட ஒரு சம்பவம் போலவும், சில நூல்களில் மட்டுமே சில முறைகேடுகள் கண்டறியப்பட்டிருப்பது போலவும் இந்தப் பிரச்சினையைச் சுருக்கிப் பார்க்கும் போக்கு நிலவுகிறது. ஆளுங்கட்சியைச் சார்ந்த எழுத்தாளர்கள், தங்கள் நூல்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு இனி தாங்களே அவற்றை விற்றுக்கொள்கிறோம் என்று கட்சிச் சார்புடன் குரல் கொடுப்பதையும் பார்க்கும்போது மேலும் சோர்வு ஏற்படுகிறது. இங்கே யாரை நம்பிப் புத்தகங்களை வாசிப்பது? எதை நம்புவது? நம்முடைய வாசிப்புச் சூழலின் அடிப்படைகளே கேள்விக்குள்ளாகியிருக்கின்றன.
இத்தகைய சூழலைக் காணும்போது எனக்குள் பெரும் மனச்சோர்வு உருவானது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து செயல்பட்டு, தங்களுடைய முயற்சிகளின் வழியாகப் பொருளுள்ள அறிவுச்சூழலை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது என் நம்பிக்கை மீண்டும் துளிர்க்கிறது.
அவர்களுடைய இடையறாத முயற்சிகளும் செயல்பாடுகளும், தமிழ்நாட்டின் அறிவுசார் வளர்ச்சியின் மீது நான் இழந்துகொண்டிருந்த நம்பிக்கையை மீட்டெடுக்கின்றன.
அன்புடன்,
ராம்கி












