ஆலயங்களின் அழகில்…

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

என்னுடைய கணவர், தங்களுடைய பக்கத்தில் ஆலயக் கலைப் பயிற்சி முகாமுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும், என்னிடம், “இந்த முறை நாம் கட்டாயம் வகுப்பிற்குச் செல்ல வேண்டும்” என்று சொன்னார். நாங்களும் பதிவு செய்துவிட்டு காத்திருந்தோம்.

அக்டோபர் 30, 31, நவம்பர் 1 ஆகிய தேதிகள் என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன. அக்டோபர் 26ஆம் தேதி மின்னஞ்சலுக்காகக் காத்திருந்தோம். மின்னஞ்சல் வராததால் மணி அண்ணாவுக்குத் தொலைபேசியில் அழைத்து எங்கள் பதிவை உறுதி செய்துகொண்டோம்.

அக்டோபர் 29ஆம் தேதி என் மனம் ஒரு சின்னக் குழந்தையைப் போல இனம் புரியாத மகிழ்ச்சியில் இருந்தது. இந்த வகுப்பு எப்படிப்பட்ட வகுப்பாக இருக்கும் என்ற உற்சாகத்தில் எனக்கு இரவில் தூக்கமே வரவில்லை.

அக்டோபர் 30ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு ஓசூரில் இருந்து நானும் என் கணவரும் எங்களுடைய நான்கு சக்கர வாகனத்தில் கிளம்பினோம். அந்தியூரில் ஒரு சிறிய கடையில் காலை உணவை முடித்துக்கொண்டு தாமரைக்குளம் நோக்கிப் புறப்பட்டோம். மலை எங்களை அழகாக வரவேற்பது போலத் தோன்றியது. நித்தியவனம் வரும் வரை அந்தப் பாதை எங்களைப் பேசுவதை நிறுத்திவிட்டு அழகை ரசிக்கச் செய்தது.

ஒன்பதரை மணி அளவில் நித்தியவனத்தை வந்தடைந்தோம். அதன் அழகைச் சுற்றிப் பார்த்து ரசித்துவிட்டு, பத்து மணிக்கு வகுப்பு ஆரம்பமாகும் என்பதால் வகுப்பறையை நோக்கிச் சென்றோம். உள்ளே செல்லும்போது ராஜ்ஸ்ரீயைச் சந்தித்தேன். நானும் அவளும் முதல் வரிசையில் அமர்ந்துகொண்டோம்.

ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் வந்தார். அவர் ஒவ்வொரு நாளும் வகுப்பைத் தொடங்கும்போது ஒரு பாடல் பாடுவார். அந்தப் பாடல் என் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியை உருவாக்கும். ‘கோயில்கள் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் எங்கள் வகுப்பு முதல் நாள் தொடங்கியது.

இதுவரை நான் சென்று வந்த அனைத்துக் கோயில்களுக்கும் திரும்பச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த மூன்று நாட்களும் என் இனிவரும் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

என்னுடன் அறையில் தங்கியிருந்த ராஜ்ஸ்ரீ ஓர் எழுத்தாளராகவும் பயணப் பதிவாளராகவும் (Travel Vlogger) இருப்பதை அறிந்துகொண்டேன். கிருத்திகா உங்களுடைய மிகப்பெரிய விசிறி என்பதையும், ரேவதி அவர்கள் உங்கள் தத்துவ வகுப்பு மாணவி என்பதையும் தெரிந்துகொண்டேன்.

இந்த வகுப்பைப் பற்றிய குறிப்புகள், சந்தேகங்கள் ஆகியவற்றை மதிய உணவு இடைவேளையின்போதும், இரவு உணவுக்குப் பின்னரும் பதினொரு மணி வரை எங்களுக்குள் பேசித் தெளிவுபடுத்திக்கொள்வோம். பின்னர் உற்சாகமாக ராஜ்ஸ்ரீயும் கிருத்திகாவும் இந்த உரையாடல்களில் இணைந்துகொண்டனர்.

ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் வகுப்பு எடுக்கும் விதம் அற்புதமானது. அவர் எங்களுக்குச் சிலைகளின் புகைப்படங்களைக் காட்டும்போது, அந்தச் சிலையை முதல்முறையாகப் பார்ப்பது போலவே ரசிப்பார். ஒரு சிலையை எவ்வாறு ரசிக்க வேண்டும் என்ற என்னுடைய பார்வையை அது மாற்றியிருக்கிறது.

நானும் ராஜ்ஸ்ரீயும் எங்களுடைய பயணங்களைப் பற்றிப் பேசும்போதுகூட, “தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. முன்பு பார்த்தவற்றைக்கூட மீண்டும் பார்க்க வேண்டியிருக்கிறது” என்று பேசிக்கொண்டோம்.

அலைபேசி அழைப்புகள், Instagram, Facebook ஆகியவை இல்லாமல், மலைகளுக்கு நடுவில் கலை, இலக்கியம், சிற்பம், ஆலயம் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே மூன்று நாட்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியும் என்பதை இந்த வகுப்பு எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது.

ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள்கூட, “நான் ஒரு துளிதான் கற்றுத்தருகிறேன்” என்று கூறினார். அந்த ஒரு துளிதான் என் வாழ்க்கையின் இனிவரும் நாட்களில் நான் யார் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

என்னுடைய பதினைந்து வருடத் திருமண வாழ்க்கையில், எனக்காக வெளியே சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்து, என்னை நானே அறிந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை. என்னுள் தடையாக இருப்பதாக நான் நினைத்திருந்த விஷயங்களை ஒரே நாளில் தவிடுபொடியாக்கி, எனக்குள் ஒளியேற்றிய தங்களுக்கும், ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கும், இந்தக் குழுவிற்கும், என்னுடன் பயின்று பயணித்த சக தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்,

அங்கம்மை,
ஓசூர்.

முந்தைய கட்டுரைமரபில் தோய்தல்