குரு நித்யா காவியமுகாம், என்ன தகுதி?

அன்புள்ள ஜெ

குரு நித்யா காவிய முகாமில் கலந்துகொள்ள என்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்?

ஜெயலக்ஷ்மி

அன்புள்ள ஜெயலக்ஷ்மி

இலக்கிய ஆர்வம் மட்டுமே தேவை.

பொதுவாக எங்கள் நிகழ்ச்சிகள் எல்லாமே தொடக்கநிலை வாசகர்களை உத்தேசித்து செய்யப்படுபவை. ஆகவே எதற்குமே அடிப்படையான அறிவார்ந்த தகுதி ஏதும் தேவையில்லை. ஆர்வம், கவனம் இருந்தால் மட்டும்  போதும். அப்படி ‘கிளீன் ஸ்லேட்’ ஆக வந்த பலர் இன்று மிக முக்கியமான அறிஞர்களாகவே ஆகியிருக்கிறார்கள்.

ஆனால் ஆர்வம் முக்கியம். மேலோட்டமான ஆர்வம், சமாளிப்பது சரிவராது. அதனால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. வீட்டுக்குள் வந்து இணையத்தில் சொல்லிக்கொடுப்பார்களா, எங்களூரிலேயே நடத்த முடியுமா, எனக்கு நேரம் கிடைத்தால் வரலாமா போன்ற கேள்விகளெல்லாம் ஆர்வமில்லாமையின் வெளிப்பாடுகள் மட்டுமே. ஆர்வமில்லாத ஒருவர் அதை தனக்குத்தானே ஒப்புக்கொள்ளாமலிருக்க போட்டுக்கொள்ளும் பாவலாக்கள் அவை. அவற்றை நாங்கள் ஊக்குவிப்பதில்லை.

உண்மையான ஆர்வமும், அதன்பொருட்டு ஒருவர் கிளம்பிச்செல்வதும் இன்றைய சூழலில் மிகமிக அரிதான தகுதிகள். இங்கே எதிலும் ஆர்வமில்லாமல், எந்த இலக்குமில்லாமல், எங்காவது தேங்கி நின்றிருப்பதுதான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை. தேங்கிய நீரின் கலங்கல்தான் எல்லாருடைய வாழ்க்கையும். தேக்கநிலையே நோயின் பிறப்பிடம்

குரு நித்யா இலக்கிய அமர்வுகள் கதை, கவிதை, இலக்கியக்கொள்கைகள் சார்ந்த சுருக்கமான உரைகள் மற்றும் அவற்றின் மீதான விவாதங்களால் ஆனவை. ஓர் எளிய வாசகருக்கே சட்டென்று இலக்கியமென்றால் என்ன என அறிமுகம் செய்பவை

ஜெ

முந்தைய கட்டுரைரசனை ஏன் இன்றியமையாதது?
அடுத்த கட்டுரைஇந்திய தத்துவ அறிமுகம் மீண்டும் எப்போது?