அ
அன்புள்ள ஆசிரியருக்கு
உங்கள் காணொளிகளைப் பார்க்கிறேன். எனக்கு வயது 53. குடும்பத்தலைவி. கடமைகளை எல்லாம் முடித்துவிட்டேன். பணி ஓய்வும் வந்துவிட்டது. நீங்கள் அளிக்கும் பயிற்சிகள் ஒவ்வொன்றையும் கேள்விப்படும்போது இனி கற்று அதைக்கொண்டு என்ன செய்யப்போகிறேன் என்னும் எண்ணம் ஏற்படுகிறது
ராஜி கிருஷ்ணசாமி
அன்புள்ள ராஜி
எங்கள் வகுப்புகளின் அடிப்படை ஒன்று உண்டு, கற்றுக்கொள்வது என்பது வெறும் பயிற்சி அல்ல. அது கல்வி. பயிற்சி என்பது ஒரு நோக்கத்துக்காக, ஒரு செயலைச் செய்வதற்காக ஆற்றப்படுவது. கல்வி என்பது கல்வியின்பொருட்டே ஆற்றப்படுவது.
கல்வி நிகழாத கணம் இல்லை. எந்த வயதிலும் எப்போதும் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். அனைவரும். ஆனால் அது முறைப்படுத்தப்படாத, உதிரியான கல்வியாக உள்ளது. ஆகவே பயனற்றதாக உள்ளது. சிலசமயம் தீங்கு விளைவிக்கும் கல்வியாகவும் உள்ளது. ஆகவே முறையான, பயன் அளிக்கும் கல்வியை அளிக்கிறோம்
கல்வியின் பயன் என்பது அக்கல்வி நிகழும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே. அது வாழ்க்கையை பொருள்கொண்டதாக ஆக்குகிறது. அக்கல்வி கற்பவரை அக– புற ஆரோக்கியம் கொண்டவராக ஆக்குகிறது. கல்வி கற்பவரின் ஆளுமை வளர்கிறது. அது அவரை மேலும் நல்ல வாழ்க்கை வாழச்செய்கிறது.
நல்ல கல்வியில் உள்ள இன்னொரு கொண்டாட்டம் பிறருடன் சேர்ந்து அதைச் செய்வது. நல்ல சுற்றம் ஒன்று அமைவது. அந்த மகிழ்ச்சி எல்லா வயதிலும் நமக்குத்தேவை
அத்துடன், நமக்கே நாம் கொஞ்சம் கற்றுக்கொண்டோம் என்று தோன்றினால் அதைச் செயல்படுத்த தோன்றும். ஏதேனும் வகையில் அது செயலாகும். இன்னொருவருக்கு கற்றுக்கொடுக்கவும் உந்துதல் உருவாகும்
கல்வி ஒன்றே மகிழ்ச்சிக்கான வழி. மகிழ்ச்சி வேண்டாம் என முடிவுசெய்துவிட்டவர்கள் சிலர் உண்டு. அவர்கள் தவிர பிற அனைவருக்குமே கல்வி தேவை
ஜெ