ஆசிரியரின் கண்டிப்பு

அன்புள்ள ஆசிரியருக்கு

தத்துவ அறிமுகம் பற்றிய உங்கள் காணொளியை கண்டேன். என்னுடைய பிரச்சினை ஒன்று உண்டு. நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு சைவசித்தாந்தம் கற்க ஒரு ஆசிரியரிடம் சென்றேன். நடுவே எனக்கு ஒரு ஃபோன் வந்தது. ஆசிரியர் என்னிடம் கடுமையாகக் கோவித்துக்கொண்டார். பலர் முன்னிலையில் அப்படி கோவித்துக்கொண்டது அவமானமாகப் போயிற்று. அதன்பின் செல்லவில்லை. ஒரு நவீனச் சூழலில் இந்தவகையான கண்டிப்புகள் இல்லாமல் தத்துவம் கற்க முடியாதா?

எஸ்

அன்புள்ள எஸ்,

அப்படிச் சில இடங்கள் இருக்கலாம். தத்துவம் என சில செய்திகளைச் சொல்லிக்கொடுத்து தத்துவம் கற்றேன் என்னும் ஒரு நம்பிக்கையை உங்களுக்கு அளிப்பவர்கள் அவர்கள். கண்டிப்பு இல்லாமல் தத்துவம் கற்க முடியாது. ஆசிரியரின் கண்டனங்கள் எந்த தத்துவக் கல்வியிலும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஏனென்றால் தத்துவம் நுணுக்கமானது, அருவமானது (abstract) ஆனது. அதற்கு அன்றாட மதிப்பு என்பது உடனடியானது அல்ல. அதைக் கற்பவனின் ஆளுமையில் உருவாகும் மாற்றமே அதன் பயன்பாடு . ஆகவே சாமானியர் தத்துவ உலகுக்குள் நுழைய முடியாது. தத்துவம் அவர்களுக்குப் புரியாது

அன்றாடவாழ்க்கையில் இருந்து முன்னகர்ந்து சென்று தத்துவத்தின் தனியுலகுக்குள் சென்றுதான் அதைக் கற்கமுடியும். ஒரு மாணவர் அப்படி உலகியல் அன்றாடத்தை விட்டு வர மறுத்துவிட்டால் தத்துவம் புரியாது. இன்னும் சிக்கலென்னவென்றால் தத்துவம் எளிய உலகியல் செய்தியாக , வெறும் கருத்துக்களாக அவர்கலுக்கு புரிந்துவிடும். தத்துவம் புரியவில்லை என்பதே புரியாது. கற்றுவிட்டோம் என நினைப்போம். அந்த மாயையில் வாழ்க்கை சென்று வீணாகும்.

ஆகவேதான் தத்துவ ஆசிரியர்கள் சில விஷயங்களில் கறாராக இருக்கிறார்கள். தத்துவத்தை மாணவர்கள் தீவிரமாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். முழுக்கூர்மையுடன் கவனிக்கவேண்டும். தத்துவ உலகுக்குள் நுழையவேண்டும். தத்துவத்துடன் பயணம் செய்யவேண்டும். அவ்வண்ணம் இல்லாத ஒருவர் தத்துவத்துக்குள் தான் வருவதில்லை என்பதுடன், அங்கிருக்கும் பிறரையும் பின்னிழுக்க ஆரம்பிக்கிறார்.

தத்துவக்கல்வி என்பது தத்துவத்தைத் எ தெரிந்துகொள்வது அல்ல. நம் மனம் தத்துவமயமாக ஆவது. நம் சிந்தனை தத்துவார்த்தமாக ஆவது. நாம் மாறுவது. அது எளிதல்ல. ஆசிரியரின் நேரடி வழிகாட்டலில், தொடர்ச்சியாக பயின்றால்தான் அது நிகழும். ஆகவே கண்டிக்காத ஆசிரியர் கற்பிக்காத ஆசிரியர்தான்.

ஏன் நீங்கள் புண்படுகிறீர்கள்? ஏனென்றால் நீங்கள் உங்களைப் பற்றி மிகையான எண்ணம் கொண்டிருக்கிறீர்கள். எங்கும் உங்கள் ஆணவத்தையே முன்வைக்கிறீர்கள். கல்விக்கு தேவையானது அறிவின் முன்பு அமையும் பணிவு. தன்னை ரத்துசெய்து கல்வியை முதன்மைப்படுத்தும் மனநிலை. ஆசிரியர் சொல்லால் புண்படுபவர் தத்துவம் பயிலும் மனநிலையை அடையவில்லை

ஜெயமோகன்

 

 

முந்தைய கட்டுரைகற்று என்ன பயன்?
அடுத்த கட்டுரைஆலயங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?