அன்புள்ள ஜெ
முழுமையறிவு கல்வியில் சோதிடக்கல்வியைச் சேர்க்கலாம் என நினைக்கிறேன். இன்று சாஸ்த்ரா போன்ற பல்கலைகளிலெயே சோதிடம் ஓர் அறிவியலாகக் கற்பிக்கப்படுகிறது. சோதிடக்கல்வி என்பது தியானம் யோகம் ஆகியவற்றுடன் இணைந்தது. அவற்றை சோதிடம் இல்லாமல் கற்க முடியாது என்பார்கள்
சந்தானகிருஷ்ணன்
அன்புள்ள சந்தான கிருஷ்ணன்
இந்த அமைப்பு அடிப்படையில் நாராயண குருவின் மரபைச் சேர்ந்தது. நாராயண குரு சங்கரரின் தத்துவமரபைச் சேர்ந்தவர். அத்வைத வேதாந்தமே இதன் தத்துவம். அதாவது ‘தூய அறிவே’ மெய்மைநோக்கிய பயணத்துக்குரிய வழி என்பதே இதன் கொள்கை.
ஆகவே அறிவின் எல்லா தரப்புகளும் ஒன்றையொன்று நிரப்புபவை, ஆகவே எல்லா அறிவும் மெய்மை நோக்கிச் செல்பவை என்பதே நாராயண குரு முன்வைத்த கொள்கை. அவ்வடிப்படையிலேயே இங்கே எல்லா அறிவியலும், கலைகளும், ஆன்மிகப் பயிற்சிகளும் கற்பிக்கப்படுகின்றன.
ஆனால், சங்கர வேதாந்த மரபு சோதிடத்தை ஏற்பதல்ல. இப்பிரபஞ்சப் பேரியக்கம் என்பது பிரம்மத்தின் ஆடல். அதை அடைய பிரம்மஞானம் அல்லது ஆத்மஞானமே வழி. எல்லா ஞானமும் அந்த ஞானம் நோக்கிச் செலுத்துவன. பிரம்மத்தை 12 ராசிகள் கொண்டு அளக்கமுடியாது என்று நாராயண குரு சொன்னார். சோதிடத்தில் உண்மை உண்டா இல்லையா என்பதல்ல விவாதம். அது எங்கள் மரபுக்கு, நாங்கள் முன்வைக்கும் வழிமுறைகளுக்கு எதிரானது என்பதே.
எல்லா ஞானமும் எங்களுக்கு உடன்பாடே. ஆனால் ஞானத்துக்கு எதிரான வழிகள் உடன்பாடானவை அல்ல. உதாரணம், கடுமையான ஹடயோகப் பயிற்சிகள், மறைவாகச் செய்யப்படும் வாமமார்க்கச் சடங்குகள், பலிச்சடங்குகள் போன்றவை.
நன்றி
ஜெயமோகன்