வாசிப்புப் பயிற்சி, கடிதம்

கற்பதன் அலகுகள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

சென்ற ஆண்டு நடந்த மேடை உரை பயிற்சியில் கலந்து கொண்ட நான் அதன் பிறகு என்னுடைய நடைமுறை வாழ்க்கையிலும் மற்றவர்களிடம் பேசுவதிலும் பெரிய மாற்றத்தை நான் உணர்கிறேன். எதேச்சையாக இணையத்தில் உங்களுடைய கட்டுரையை படித்த நான் அன்று முதல் உங்களுடைய தீவிர ரசிகனாக மாறிவிட்டேன் தினமும் உங்களது தளத்தை பார்த்து வருகிறேன்.

மேலும் உங்களுடைய பயிற்சி வகுப்பில் பங்கு பெற வேண்டும் எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது மூன்று நாள் பயிற்சியில் கலந்து கொண்டு வருகின்ற போது என்னுள் அடைகின்ற மாற்றத்தை எண்ணி நானே மிகுந்த வியப்படைகிறேன். நான் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதால் உங்களுடைய அபுனைவு பயிற்சி எனக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும்.

எனவே வரும் ஜூலை மாதம் நடைபெறும் அபுனைவு பயிற்சி வகுப்பில் எனக்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

சி.சிற்றரசு
வழக்கறிஞர்
அரூர்
தருமபுரி மாவட்டம்

 

அன்புள்ள சிற்றரசு,

வழக்கறிஞர்கள்தான் உடனடியாக இந்த வகுப்பு மிகுந்த பயனுள்ளதாகக் கருதுகின்றனர். இந்த வகுப்பை பிறரும் பயன்படுத்தலாம்.  எந்த ஒரு நீண்ட குறிப்பு, கடிதம் ஆனாலும் இதுவே வாசிப்புக்கான வழி

பொதுவாக நமக்கு கூர்ந்து வாசிக்கும் வழக்கம் இல்லையேல் வாசிப்பதற்கான வழிமுறை நம்மிடம் உருவாகியிருக்காது. அந்நிலையில் நாம் ஒரு கடிகாரத்தை அல்லது மோட்டாரை வெறும் கையால் பழுதுபார்க்க முயல்பவர்கள் போல ஆகிவிடுகிறோம். கடுமையாக முயல்கிறோம். சட்டென்று எரிச்சலும் சோர்வும் வந்துவிடுகிறது. நம்மால் முடியவில்லை என நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். அந்த எரிச்சல் நிலையில் அதைப்பற்றி ஓர் மிக எளிய சித்திரத்தை, ஒற்றை வரியை, உருவாக்கிக்கொண்டு அதைப்பேசிக்கொண்டிருப்போம்.

இன்று, சமூகவலைத்தளச்சூழல், அரசியல் சூழலில் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான நூல்கள் கட்டுரைகளைப்பற்றி இதைத்தான் செய்கிறார்கள். அது பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் படிப்பு, தொழிலிலும் இதையே செய்வது தற்கொலைத்தனமாக ஆகிவிடும்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைதத்துவம் நான்காவது வகுப்பு
அடுத்த கட்டுரைசோதிடக்கல்வி குறித்து…