மாற்றுமருத்துவ வகுப்புகள்!

அன்புள்ள ஜெ,

முழுமைக்கல்வி என்ற பேரில் நீங்கள் நடத்திவரும் வகுப்புகளை பார்க்கிறேன். இன்றைய சூழலில் மிக அவசியமானது மாற்று மருத்துவம் பற்றிய கல்வி. மருத்துவக் கொள்ளையை தடுக்கும் வழி அதுவே. அதற்கான வகுப்புகளை நீங்கள் ஒருங்கிணைப்பது அவசியம் என நினைக்கிறேன். (நான் நீண்டகாலமாக வகுப்புகளை எடுத்து வருகிறேன்)

அ.

 

அன்புள்ள அ

நான் நீங்கள் வெளியிட்டுள்ள இரண்டு காணொளிகளைப் பார்த்தேன். கோவிட் தடுப்பூசிக்கு எதிராக நீங்கள் பேசியிருந்தீர்கள். கோவிஷீல்டு ஊசி போட்டுக்கொண்டவன் நான். எனக்கு அந்த மருந்தை அதைப் போடும்போதே நன்றாகத்தெரியும். அதன்பின்னரே ஊசிபோடச் சென்றேன்.

கோவிட் தொற்றுநோய்க்கான முறிமருந்துகள் கோவிட் கிருமியையே ஆற்றலிழக்கச் செய்து உடலுக்குள் அனுப்பி நோய்த்தடுப்பை உருவாக்கும் தன்மை கொண்டவை. வாக்ஸின்கள் எல்லாவற்றுக்குமே மிகச்சிறிய அளவில் எதிர்விளைவுகள் உண்டு. ஏனென்றால் அவை கிருமிகள். உடல் அளிக்கும் எதிர்வினையால்தான் நோய் குணமாகிறது. உடல் எப்படி எதிர்வினை ஆற்றும் என்று சொல்லமுடியாது. பத்தாயிரத்தில் ஒருவர் சிறு பாதிப்புகளை அடையலாம். லட்சத்தில் ஒருவர் இறக்கவும் கூடும். அது கோவிட் மருந்தின் விளைவாக அல்ல. கோவிட் மருந்தை அவர் உடலில் நுழையும் கோவிட் கிருமி எதிர்கொள்ளும் விதத்தால்.

கோவிட்டுக்குப் பின்னர் அப்படி இதயநோயோ குருதியுறைவு நோயோ மிதமிஞ்சி பெருகவில்லை. ஆனால் கோவிட்டுக்குப் பின் வீட்டில் இருந்து வேலைசெய்வது பெருகியது. வீட்டுக்கு உணவை வரவழைப்பது பெருகியது. ஆகவே மிகையான எடை, உளச்சோர்வு போன்றவை அதிகரித்தன. அதன் விளைவான இதயச் சிக்கல்கள் சற்று கூடியுள்ளன. வேலையிழப்பு, தொழில் அழிவு ஆகியவற்றின் விளைவான உளச்சோர்வும் உள்ளது. உளசோர்வு மிகையுணவுக்கு கொண்டுசென்று, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோயை உருவாக்கும்இதை நவீன ஆய்வுகளே சுட்டிக்காட்டியுள்ளன

கொவிட்டின் சாவு விகிதம் மிக அதிகம். அந்நோய் உருவாக்கும் நீண்டகால விளைவுகளும் அதிகம். தடுப்பூசியால் ஏதேனும் எதிர் விளைவு உண்டு என்றால் அது அதிகம்போனால் மூன்றுமாதக்காலம் மட்டுமே. ஆனால் கோவிட் முற்றி அதில் இருந்து மீண்டவர்கள் அடையும் எதிர்விளைவுகள் நீடித்தவை. அந்த மாபெரும் நெருக்கடியின்போது எப்படி இந்த மாற்றுமருத்துவங்கள் வாயால் வடைசுட்டனர், எத்தனை பேரை நம்பவைத்து மேலே அனுப்பினர் என எனக்கு தெரியும். நானறிந்தவர்களிலேயே நான்குபேர் மாற்று மருத்துவத்தை நம்பி தடுப்பூசி போடாமல் இளமையிலேயே மறைந்தனர்.  

எந்த மருந்தும் பின்விளைவு கொண்டதுதான். சாதாரண தலைவலி மாத்திரைகூட. சித்த மருந்துகள் கடுமையான பின்விளைவு கொண்டவை – சிறுநீரகத்தை பாதிப்பவை. ஆயுர்வேத மருந்துகள் பற்றி அண்மைக்காலம் வரை அவை பக்கவிளைவற்றவை, ஏனென்றால் அவை உலோகங்களை பயன்படுத்துவதில்லை என சொல்லிவந்தனர். அண்மைக்கால ஆய்வுகள் அவற்றின் பக்கவிளைவுகளை கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளன.

அலோபதி மருந்துக்கு புறவய ஆய்வுமுறையும், உலகு தழுவிய சோதனைமுறைகளும் உள்ளன. ஆகவே பக்கவிளைவுகள் அறிவிக்கப்படுகின்றன. சித்த, ஆயுர்வேத முறைகளில் அப்படி ஆய்வுமுறையோ, புறவயமான நிரூபணமுறைகளோ இல்லை. ஆகவே பக்கவிளைவுகள் பெரும்பாலும் முறையாக ஆவணப்படுத்தப் படவில்லை. ஆனால் அவற்றுக்கு மெல்ல மெல்ல அறிவியல் சார்ந்த முறைமைகளும் ஆய்வுமுறைகளும் உருவாகி வருகின்றன. வாழ்க்கைமுறையை சீர்திருத்திக்கொண்டு, நோயை எதிர்கொள்ளும் முறையை அவை முன்வைப்பதனால் அவற்றுக்கு ஓர் இடம் மருத்துவத்தில் உண்டு.

மாற்று மருத்துவம் மேலே சொன்ன மருத்துவங்களில் ஒன்றல்ல. அதற்கு மருத்துவம் என்ற பெயரே சரியல்ல. அது பூசாரி பேயோட்டி நோயை தீர்ப்பதுபோல ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம். அதற்கு எந்த வகையான புறவயமான ஆவணப்பதிவும், தகவல்சேகரிப்பும், சோதனைகளும் இல்லை.

இந்நிலையில் பக்கவிளைவுகளைச் சுட்டிக்காட்டி அலோபதி மருத்துவத்தை எதிர்க்கிறீர்கள். அதன்மேல் அவநம்பிக்கைகளை உருவாக்குகிறீர்கள். அலோபதி வணிகமாகிவிட்டது என்கிறீர்கள். அது உண்மை. ஆனால் மற்ற மருத்துவங்களும் அதேபோல வணிகமயமானவையே.

மாற்று மருத்துவம் பற்றிப் பேசுபவர்கள் நவீன மருத்துவத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். அதைக்கொண்டு தங்களின் இடத்தை உருவாக்குவார்கள். ஆனால் தங்கள் மருத்துவத்தை எந்த அறிவியல் ஆய்வுக்கும் கொண்டுவர மாட்டார்கள். எந்த அறிவியல் தரவுகளும் அவர்களிடமில்லை.

மாற்று மருத்துவம் பற்றிப் பேசுபவர்கள் எந்த புறவயமான முறைமை (மெதடாலஜி)யையும் முன்வைப்பதில்லை. அவர்கள் சொல்வதெல்லாமே அவர்களின் தனிப்பட்ட ‘தெய்வீகமான’ ஆற்றலைப் பற்றி மட்டும்தான். அப்படி ஒன்று இருப்பதாகவே கொள்வோம். அதை எவரும் கற்பிக்கமுடியாது.

மிகமிக அடிப்படையான உண்மைகளைக் கூட பார்க்க மறுப்பவர்களாக இன்று தமிழர்கள் மாறிவிட்டனர். அறிவார்ந்ததை ஐயப்படுவார்கள், கற்கமுயலமாட்டார்கள். வெறும் நம்பிக்கையை, அற்புதக் கதைகளை அளந்துவிட்டால் நம்பி கூட்டம் கூட்டமாக அதை நோக்கிச் செல்வார்கள்.  

இப்படி பரப்பப்படும் நவீன மூடநம்பிக்கைகளில் முதன்மையானது மாற்று மருத்துவம். நாங்கள் இந்த வகையான எல்லா கண்மூடித்தனங்களுக்கும் எதிரானவர்கள். இதற்கு எதிராக எல்லா துறைகளிலும் அறிவை, மெய்ஞானத்தை முன்வைக்க முயல்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைபுதுக்கல்வி, சில கனவுகள்
அடுத்த கட்டுரைஇந்து மதத்தை கற்று அறியவேண்டுமா?