பிரபந்த வகுப்பு, கடிதம்

அன்புடையீர் ,

நான் மார்ச் 22 அன்று பிரபந்தம்  பயிற்சி   வகுப்பிலும்  29 அன்று ஆலயக்கலை பயிற்சி வகுப்பிலும் பங்கு கொண்டேன்.ஒன்று அகம் சார்ந்ததாகவும் மற்றொன்று அறிவு சார்ந்ததாகவும் எனது கணிப்பில் உணர்ந்தேன். மேலும்  ஆசிரியர்கள் இருவரும் தங்கள் பாடங்களில் மிகவும் கற்றுத்தேர்ந்தவர்களாக இருப்பதை அறிந்தேன்.வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ப்ரபந்தப் பாடல்களை பொருளுடன் முன்பு படித்திருந்தாலும்பாடல்களை எவ்வாறு சரியாக படிப்பது மற்றும் பொருள் கொள்வது என்பதை ஆசிரியர் மற்றும்திரு .மாலோலன் அவர்கள் வழியாக அறிந்தேன். திரு.மாலோலன் அவர்களின் பிரபந்தம் ஞானம்மிகவும் வியப்புக்குரியது.

ப்ரபந்தப் பாடல்கள் எட்டு தலைப்புக்களில் இருந்தன. பாடல்கள் எண்ணிக்கை 169. அதிகப்பாடல்கள் பெரிய ஆழ்வார் பாடியது. எண்ணிக்கை 49. குறைந்த பாடல்கள் தொண்டரடிப் பொடி ஆழ்வார் பாடியது. பாடல்கள் இரண்டு. மதுரகவி ஆழ்வார் பாடல்கள் இல்லை .என் சிறு குட்டன் தலைப்பில் பெரிய ஆழ்வார் பாடல்கிடக்கில் தொட்டில்பொருளை ஆசிரியர் விளக்கியபோது காலவெளியில் 21 ஆண்டுகள் பின் சென்று என் பேரனை நினைத்துக்கொண்டேன். அதனை ஆசிரியரிடமும் சொன்னேன். ஒரு  பாடல் வழியாக இனிமையான கடந்த காலத்தை நினைவூட்டிய ஆசிரியரின் திறன் நினைவில் இருத்திக்கொள்ளத்தக்கது.

பாடல்கள் பலவும் நாடகியத்தன்மை கொண்டது என்றும் பொருள் உணர நாம் பெண் தன்மை கொள்ளவேண்டுமென்றும் ஆசிரியர் கூறினார். நப்பின்னை காணில் சிரிக்கும்  தலைப்பில்எண் 16 ‘பாலை கறந்துபாடல் பொருள் கூறும்போது ஆசிரியர் ஆயர் குலமகள் ஆகிவிட்டார்.உன் மகனைக் கூவாய்  கூப்பிடு உன் மகனை என சொடுக்கு போட்டு சற்று கூடிய ஒலியில்கூவினார். நான் மிகவும் அனுபவித்த காட்சி. உள்ளத்தில் பதிந்துவிட்டது. இது போல் பலவும் உள்ளன. வைணவம் குறித்தும் பிரபந்தம் குறித்தும் அவர் கற்பித்தது மிகவும்  சிறப்பாய்  இருந்தது. .இனி  நான் தான் அவர் பரிந்துரைத்துள்ள நூல்கள் வழி நான் அறிந்ததை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் .

மார்ச் 22 அன்று  பயணத்துக்கு ஓர்  வேன் ஐ  ஆசிரியரே  ஏற்பாடு செய்து விட்டார். நான் அதில் பங்கு பெற்றதால் பயணம் இடர் இன்றி அமைந்தது.ஆலயக்கலை  வகுப்பிற்கு பயணத்திற்கு என் செய்வது என இருந்தேன். வாசகி  பாகம்பிரியாள் அவர்கள் காரில் எனக்கு இடம் கிடைத்தது. ஈரோடு ரயில் நிலைய வாயிலில் காலை 6 மணிக்குஅவருக்காக காத்திருப்பேன் என செய்தி அனுப்பியிருந்தேன்.சொன்ன நேரத்திற்கு அவர் வந்துவிட்டார். அறிமுகத்துக்குப்பின் என் எடை மிகுந்த பையினை அவரே வாங்கி கார் பூட் உள்வைத்தார்.இதனை நானே செய்கிறேன் எனச் சொல்லியும்  அவர் கேட்கவில்லை .மேலும்  முன் இருக்கையில் வசதியாக உட்கார வகை செய்தார்.அவரே ஓட்டுநர். மேலும் இருவரை  லட்சிமி  நகரில் ஏற்றிக்கொள்ள இருந்தார். என்னால் நம்ப முடியவில்லை. பெயருக்கேற்ப அவர் அம்மைதான். முன்பின் அறியாத என்னை பெரும் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்கிறாரே என எண்ணினேன். எனது தகுதி அந்நேரத்தில் திரு.ஜெயமோகன் வாசகன்.அது அவருக்கும்பொருந்தும். அந்தக் கண்ணிதான் அப்போது செயல்பட்டுள்ளது. மேலும் வகுப்பு முடிந்து

திரும்புகையிலும் நான் திருச்சி பஸ் சுலபமாக அடையாளம்  காணவும் பயணம் செய்யவும்ஓர் ஆட்டோ ஏற்பாடு செய்தார்.உடன் வந்த திரு.சுரேஷ் மற்றும் மணிகண்டன் அவர்களும்  மிக்க அனுசரணையாக இருந்தனர். வாசகி பாகம்பிரியாள் அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் மதிப்பும்என் வாழ் நாளில் மறக்க இயலாத முற்றிலும் புதிய அனுபவம்.ஆலயக்கலை பாடத்திட்டம் சற்று விரிவானது. இது எனது கருத்து. வரலாறு, கட்டிடக்கலை, வாஸ்துகலை, ஆகமம் ,சிற்பக்கலை,பண்பாடு,பல்வேறு வடிவங்களில் இறை, தொன்மம்,புராணம் எனப்பல. iவற்றின் அடிப்படைகளையாவது நான் அறிந்து கொண்டேனா என்றால் ஓரளவுதான் அறிந்துள்ளேன் எனத்தோன்றுகிறது.ஆயினும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஆசிரியர் அளித்துள்ள பாடங்களைப்  கவனத்துடன் படித்து அறிதலை மேம்படுத்துக்கொள்வேன். கோயில்களுக்குச் செல்லும்போது  நேரில் கண்டும் அறிந்ததை உறுதிப்படுத்திக்கொள்வேன்.உச்சமாக ஆசிரியருடன் ஓர் பயணம் சென்றால் போதும். வகுப்பில் கலந்துகொண்டதென் பயனை அடைவேன் என உறுதியாக நம்புகிறேன். ஆசிரியர் சிறப்பாகப் பாடம் நடத்தினார். அவரதுகல்வித்தகுதி மேம்பட்டதாக உள்ளது.அத்தகையவரிடம் நான் சரியாக அறிந்து கொள்ளவில்லை என வருத்தமாக உள்ளது.கிடைத்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ளாதது எனது தவறு. ஆயினும் தவறினைத் திருத்திக்கொள்ள எனக்கு வாய்ப்பு இருக்கிறது .

இத்தகைய வகுப்புகளில் கலந்துகொள்வதை சாத்தியப்படுத்திய தங்களுக்கு நன்றி .

சிவநாத்

ஸ்ரீரங்கம் .

வரவிருக்கும் பிரபந்த வகுப்பு நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected] 

முந்தைய கட்டுரைஇந்துமதம் காட்டுமிராண்டி மதமா?
அடுத்த கட்டுரைசைவமும் வைணவமும் இந்து மதமா?