சைவமும் வைணவமும் இந்து மதமா?

மதம் வேறு தர்மம் வேறு. மதம் என்பது முன்னரே சொல்லப்பட்டதுபோல ஒரு மையமும், அதற்கான நெறிகளும், அதைப்பேணும் அமைப்புகளும் கொண்டது. தர்மம் என்பது ஒரு சிந்தனை மரபு தொன்மையில் இருந்து பல கூறுகள் ஒன்றாவதனூடாக மெல்ல மெல்ல உருவாகி, பலவாகக் கிளைவிட்டு பிரிந்து வளர்வது. இந்து தர்மம் என சொல்லப்பட்டதை இன்று இந்து மரபு என சொல்லலாம்.

இந்து மரபுக்குள் பல ‘மதங்கள்’ இருந்தன. பொதுயுகம் (கிபி) ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஆறு மதங்களையும் ஒன்றாக்கினார் என நூல்கள் சொல்கின்றன. அதை ஷன்மத சம்கிரகம் என்கின்றார்கள். அந்த ஆறுமதங்கள் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம்.

சிவனை வழிபடுவது சைவம். விஷ்ணுவை வழிபடுவது வைணவம். சக்தியை வழிபடுவது சாக்தம். முருகனை (குமரக்கடவுளை) வழிபடுவது கௌமாரம். சூரியனை வழிபடுவது சௌரம்.

இந்த ஆறுமதங்களும் இன்று நாம் ரிலிஜியன் என்று சொல்லும் அர்த்தத்தில் தனித்தனியாக பிரிந்து இயங்கின என்பது பிழை. இவை ஒரே ஞானமரபுக்குள் (அதாவது தர்மத்துக்குள்) இருந்த வெவ்வேறு தரப்புகள் மட்டுமே. அதாவது வேறுவேறு வழிபாட்டு முறைகள், வேறு வேறு நம்பிக்கைகள் கொண்டவை.

இவற்றுக்கு இடையே விவாதங்கள் இருந்தன. ஒரு மரபை மட்டும் உறுதியாக நம்பி இன்னொரு மரபை ஏற்காதவர்கள் இருந்தனர். ஆனால் இன்று இந்து, கிறிஸ்தவம். இஸ்லாம் இருப்பது போல இவை வேறுவேறு மதம் (ரிலிஜியன்) அல்ல. வேறு வேறு தரப்புகள், அவ்வளவுதான். அந்த பொருளிலேயே அவை மதங்கள் எனப்பட்டன. இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவான மதம் என்னும் வரையறையை இவற்றுக்கு போடக்கூடாது.

இந்த ஆறுமதங்களும் ஒரே மரபைச் சேர்ந்தவை. ஏனென்றால் இந்த ஆறு மதத்திற்கும் வழிபாட்டுமுறை ஏறத்தாழ ஒன்றுதான். ஆறுமதங்களின் புராணக் கதைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னியவைதான். ஆறு மதங்களின் தெய்வங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. இந்த ஆறு மதத்திற்கும் உரிய தத்துவ அடிப்படைகளான ஆத்மா, பிரம்மம், முக்தி, பிரமாணங்கள், குணங்கள் ஆகியவையும் ஒன்றுதான். தத்துவ நிலைபாட்டில் மட்டுமே வேறுபாடு இருக்கும்.

இந்த ஆறுமதங்களையும் மக்கள் ஒன்றாகவே வழிபட்டனர். அதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே உள்ளன. காளியை வழிபடும் காளிதாசன் எப்படி ராமனின் புகழ்பாடும் ரகுவம்சம் எழுதினான், காளிகோயில் பூசாரிகுலமான உவச்சர் குடியைச் சேர்ந்த கம்பன் எப்படி ராமகாதை பாடினான் என்று யோசித்தாலே போதும். சிலப்பதிகாரத்திலேயே கோவலன் மதுரைக்கு கிளம்புவதற்கு முன்பு எல்லா தெய்வங்களையும் வணங்குவதைக் காணலாம்.

ஆதிசங்கரர் ஆறுமதங்களையும் இணைத்தது தத்துவத் தளத்தில்தான். பிரம்மம் என்னும் மையக்கருத்தை வைத்து அதை அவர் செய்தார். ஆறுமதத்தின் தெய்வங்களும் நம்மால் அறியமுடியாததும், பிரபஞ்சத்தின் முதற்காரணமாக இருப்பதுமான பிரம்மத்தின் வடிவங்களே என விளக்கினார். ஏகதண்டி சம்பிரதாயம் என்னும் துறவியர் மரபாக அது ஆனது. அவர்களின் வழியில்தான் ஆறுமதங்களுக்கும் பூசை செய்பவர்களான ஸ்மார்த்தர் என்னும் பிராமணப் பிரிவினர் உருவானர்கள்.

ஆகவே ஆறு தனித்தனி நவீன பாணியிலான மதங்கள், அதாவது ’ரிலிஜியன்’கள், இங்கே இருந்தன என்பது மிகப்பிழையான கருத்து. கொஞ்சம் விவரம் அறிந்த இந்து அதைச் சொல்லவே கூடாது.

மேலும் காலத்தில் பின்னகர்ந்து சென்றால் ஆறு தரிசனங்கள் இருப்பதைக் காணலாம். அவை சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம். இவற்றுக்கு தனித்தனியான தெய்வங்கள் இல்லை. தனி வழிபாட்டுமுறைகளும் இல்லை. இவை ஆறு தத்துவ நிலைபாடுகள் மட்டுமே. இவை ஆறு மதங்கள் என்றே பழைய நூல்களில் சொல்லப்படுகின்றன.

இவை தவிர என பல மதங்கள் இருந்துள்ளன. மணிமேகலையில் ஏராளமான மதங்கள் பற்றிய குறிப்பு உள்ளது. அவை இன்னது என இன்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவையெல்லாம் தத்துவத் தரப்புகளே ஒழிய நவீன அர்த்தத்திலான மதங்கள் அதாவது ‘ரிலிஜியன்’கள் அல்ல.

இவை தவிர சைவம், வைணவம் என்னும் ஒவ்வொரு மதத்திற்குள்ளும் பல மதங்கள் உண்டு. சைவர்களுக்கு அகச்சமயம் புறச்சமயம் என்னும் பன்னிரண்டு மதங்கள் உண்டு.   பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் ஆகியவை சைவ அகச்சமயங்கள். பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், வைரவம், ஐக்கியவாதம் என சைவ புறச்சமயங்கள் ஆறு.

சைவத்தின் அடிப்படையான சிவனை ஏற்றுக்கொண்டவை இந்த பன்னிரண்டு சைவப்பிரிவுகள். ஆனால் தத்துவத்தில் வேறுபாடு கொண்டவை. (சிவனை ஏற்றுக்கொள்ளாத சமணம், பௌத்தம், வைணவம் போன்ற தரப்புகளை சைவத்துக்கு வெளியே உள்ள புறப்புறச் சமயங்கள் என சைவர்கள் சொல்கிறார்கள்) இந்த சைவப்பிரிவுகள் ஒவ்வொன்றும் மதம் அல்லது சமயம் என்றே சொல்லப்படுகின்றன.

அதேபோல வைணவத்தில் ராமானுஜர் உருவாக்கிய ஸ்ரீசம்பிரதாயம், மத்வர் உருவாக்கிய மத்வ சம்பிரதாயம், வல்லபர் உருவாக்கிய ருத்ர சம்பிரதாயம், நிம்பார்க்கர் உருவாக்கிய குமார சம்பிரதாயம் என நான்கு பிரிவுகள் உண்டு. அவையும் தனி மதங்கள் என்றே சொல்லப்படுகின்றன. ராமானுஜ மதம், மத்வ மதம் என்றே நூல்கள் சொல்கின்றன.

வேதங்களே இந்து மரபின் தொன்மையான அடிப்படைகள் எனப்படுகின்றன. வேதங்களை ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு மறுப்பவர்களும் இந்து மரபுக்குள் உண்டு. ஏற்றுக்கொள்பவர்கள் வைதிகர். மறுப்பவர் அவைதிகர். சைவர்களில் ஒரு பிரிவினர், வேதாந்திகளில் ஒரு சாரார் வேதங்களை ஏற்பவர்கள் அல்ல. வைதிகத்திற்குள்ளேயே இந்திரனைப் பற்றிய வேதமரபு ஐந்திரம் எனப்பட்டது. சூரியனை வழிபடுவது சௌரம். வருணனை வழிபடுவது வாருணம். அக்னியை வழிபடுவது ஆக்னேயம். இப்படி ஆறு உண்டு. பாரதியாரின் கட்டுரைகளில் இவற்றைத்தான் அவர் ஆறு மதங்கள் என்று சொல்கிறார்.

இந்து மரபு அல்லது இந்து தர்மம் என்பது இப்படி பல தரப்புகளை உள்ளடக்கிக்கொண்டு இயங்கும் ஒரு பொதுவான ஞானப்பெருக்கு மட்டுமே. எந்த ஞானமரபும் ஓர் ஆறுபோலத்தான் இயங்கும். பல துணை ஆறுகள் இணைந்தே ஓர் ஆறு உருவாகும். அதேபோல ஓர் ஆறு பல கிளைஆறுகளாக பிரியும். கபனியும் அமராவதியும் எல்லாம் இணைந்தே காவேரி ஆகிறது. வெண்ணாறும் கொள்ளிடமும் அதில் இருந்து பிரிகின்றன. எல்லாமே காவேரிதான்.

இன்றைக்கு ஒருவர் வந்து நம்மிடம் சைவம் இந்துமதம் அல்ல, அது தனிமதம் என்கிறார். அதை நாம் ஏற்றுக்கொண்டால் அவரே கொஞ்சநாள் கழித்து சைவமே ஒரு மதம் அல்ல, அதன் பன்னிரண்டு பிரிவும் பன்னிரண்டு தனி மதங்கள் என்பார். நான் இந்து அல்ல சைவன் என்று சொல்பவர் கொஞ்சநாள் கழித்து நான் சைவன் அல்ல பாடாணவாதி என்பார். அதை சைவர்கள் ஏற்பார்களா? வைணவம் தனிமதம் என்பவர் கொஞ்சநாளில் வைணவமே கிடையாது, அது உண்மையில் நான்கு மதங்கள்தான் என்றால் ஏற்போமா?

சைவம் இந்து மரபின் ஒரு பகுதி. இந்து மரபை நாம் ஞானப்பரிமாற்றத்தில் தர்மம் அல்லது மரபு என்றே சொல்லவேண்டும், அவ்வாறே அர்த்தப்படுத்த வேண்டும். சட்டத்துக்காகவும்  நடைமுறைக்காகவும் அதை நாம் இந்து மதம் (Hindu Religion) என்று சொல்லலாம். தவறில்லை. ஆனால் சொல்லும்போதே இந்து மதம் என்பது புரட்டஸ்டாண்ட் மதம் போல ஒரு ரிலிஜியன் அல்ல, அது ஒரு ஞானமரபு என்ற புரிதலும் நமக்கு இருக்கவேண்டும்.

 

முந்தைய கட்டுரைபிரபந்த வகுப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைமெய்ஞானத்தைக் கற்பிக்கும் தகுதி என்ன?