இரு நிகழ்வுகள், கடிதம்

அன்பு ஆசானுக்கு,

வருகின்ற ஜூன் 30ம் தேதி கோவையில் கட்டண உரை அறிவிப்பை கண்டேன். PSG கல்லூரி D block Auditorium என் கல்லூரி காலத்தில் அநேக நாட்கள் நிறுவனங்களின் Pre Placement Talk கேட்டு அமர்ந்திருந்த இடம். அறிவிப்பை கண்டவுடன் பலப்பல எண்ணங்களை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். அத்தகைய அரங்கில் தங்களின் உரை கேட்பது என்பது பரவசமூட்டும் ஒரு அனுபவமாக இருந்திருக்கும். அந்த மூன்று நாட்கள் ஜா ஜா வின் பிரபந்த வகுப்பில் பங்கேற்க இருக்கிறேன். அதனால் உரையை தவற விடும் படி ஆகிறது. வகுப்புகள் ஏறத்தாழ அனைத்து வரங்களும் நிகழ்வதால் இந்த இடையூறு வந்திருக்கும். தங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டி இந்த மின்னஞ்சல்.

மனோஜ், திருவானைக்காவல்

அன்புள்ள மனோஜ்

எங்கள் பயிற்சி வகுப்புகள் முன்னரே திட்டமிடப்படுகின்றன. பங்கேற்பாளர்கள் தங்கள் பயணத்திட்டங்களை வடிவமைக்கவேண்டியுள்ளது. பணம் கட்டி இடம் முன்பதிவு செய்யவேண்டியுள்ளது. இந்த கட்டண உரை போன்ற நிகழ்வுகள் சட்டென்று முடிவாகின்றன.

ஜூன் 23 அன்று சென்னையில் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது விழா. அதேநாளில் பைபிள் அறிமுக வகுப்பு. அதை நடத்துபவர் சென்னை நண்பர் சிறில் அலெக்ஸ். சென்னையில் அவர்தான் இந்த விழாவிலும் வழக்கமாக முன்னிற்பார்.

எல்லா நிகழ்வுகளையும் ஒன்றுடனொன்று சரியாகப் பொருத்த முடியாது. கட்டண உரை கோவையின் நன்னெறிக்கழகம் நடத்துவது. வகுப்புகள் முழுமையறிவு அமைப்பால் நடத்தப்படுவது. அப்படி வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்று கொள்ள்வேண்டியதுதான்

ஜெ

முந்தைய கட்டுரையோகம், பயிற்சி, ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைவாசிப்பைப் பயில முடியுமா?