தத்துவமும் காணொளிகளும், ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ

நான் உங்கள் காணொளிகளை தொடர்ச்சியாகப் பார்த்து வரும் வாசகி. எனக்கு அவற்றில் இருந்து ஏராளமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. என்னால் தத்துவநூல்களை விரிவாக வாசிக்க முடிவதில்லை. வாசித்தவரை என் கேள்விகள் அவற்றில் நேரடியாகப் பேசப்பட்டதே இல்லை. தத்துவக்கேள்விகளும் என் கேள்விகளும் வேறுவேறாகவே உள்ளன. ஆனால் இந்தக் காணொளிகளில் நேரடியாக என்னை தாக்கும் கருத்துக்கள் உள்ளன. பலவற்றை நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். ஏன் நீங்கள் விரிவான உரைகளை வெளியிடலாகாது?

சுதா ராம்

அனைத்துக் காணொளிகளும்

அன்புள்ள சுதா

தத்துவத்திற்கான ஒரே பயில்முறை வகுப்புதான். நேரடியான வகுப்பு. ஆசிரியருடன் அதற்கே உரிய தனித்த, இயற்கைசார்ந்த இடத்தில் அமர்ந்து கற்பது. காடு இல்லாமல் தத்துவக் கல்வி இல்லை. அக்கல்வியின் தொடர்ச்சியாக வேறுவகை உரையாடல்கள் அமையலாம்.

தத்துவ உரைகள், தத்துவ சிற்றுரைகள் எல்லாமே தத்துவசிந்தனை என்னும் இயல்பை, மனநிலையை வாசகர்களில் உருவாக்குவதற்கான முயற்சிகளே. அவை தன்னளவில் தத்துவபயிற்சிகள் அல்ல. தத்துவப்பயிற்சி இன்னும் ஆழமானது. உறுதியான கட்டமைப்பு கொண்டது.

தத்துவத்திற்கு எளிய பாதை இல்லை. அதன்பொருட்டு கிளம்பிச்சென்றே ஆகவேண்டும். முடியாது என்பவர்கள் கற்கவேண்டியதில்லை. தத்துவம் கற்றேயாகவேண்டும் என்று ஒன்றுமில்லை. சமூகத்தில் மிகமிகச் சிலர் தத்துவக்கல்வியை அடைந்தாலே போதுமானது.

நீங்கள் இன்று அடைந்திருப்பது தத்துவ ஆர்வம். உங்கள் சிந்தனையில் தத்துவ வினாக்களும், தத்துவத்தர்க்கமும் உருவாகியிருக்கிறது. தத்துவம் இனிமேல்தான் தொடங்குகிறது.

ஜெ

முந்தைய கட்டுரையோகமும் தியானமும் ஒன்றா?
அடுத்த கட்டுரைதத்துவத்தின் அடித்தளம்