துளி மதுரம்

திருமெய்யம்

அன்புள்ள ஜெ,

சென்ற வாரம் ஆசிரியர் ஜெயக்குமாருடன் ஆலய கலை பயணமாக புதுக்கோட்டை சென்றோம். இதற்கு முன்பு நான் பார்த்த தஞ்சை, தாராசுரம் போன்ற கோவில்கள் நுட்பங்கள் நிறைந்த பிரம்மாண்டத்தின் உச்சங்கள். வெண்முரசு போல. புதுக்கோட்டை கோவில்கள் அனைத்தும் சிறிய அழகான கோவில்கள். புனைவு களியாட்டு கதைகள் போல. துளி மதுரம்.

நாங்கள் சென்ற கோயில்கள் பெரும்பாலும் முதலாம் ராஜராஜனுக்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்டவை. இப்பொழுது ASI கட்டுப்பாட்டில் உள்ளவை. முதலில் சென்ற கண்ணனூர் பாலசுப்ரமணியனார் கோயில் முதலாம் ஆதித்தனின் காலத்தில் கட்டப்பட்ட சிறிய ஏகதள விமானம் கொண்ட முருகன் கோயில். அதை பார்த்துவிட்டு திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலுக்கு சென்றோம். பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டு திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். விஷ்ணு அனந்த சயனத்தில் இருக்க மது கைடபர், பிரம்மன், கருடன், சூரிய சந்திரர்கள என முழு தொகுதியும் பாறையில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. அந்த தொகுதியை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது சுற்றிலும் உள்ள மற்ற சிற்பங்கள் அனைத்தும் மறைந்து விஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருந்தேன். கருமை, ஆழ்கருமை, பிரபஞ்ச வெளி. ஒரு சிறு விரல் நுனி தொடுகையில் எழுந்து அமர்ந்து பேசி விடுவார் என்று தோன்றுமளவு உயிர்ப்புடன் இருந்தது. நீங்கள் பாறை ஓவியங்களில் குறிப்பிடும் பெரும் ஆள், வண்ணக்கடல் இளநாகன் காட்டில் இடபாடுகளிலேயே காணும் மாபெரும் சிற்பம், விராட புருஷன் என்று எண்ணங்கள் விரிய சிறு பதற்றத்துடன் பின்னடைந்தேன். மீண்டும் ஒருமுறை அந்த விஷ்ணுவை பார்க்க செல்ல வேண்டும். இதை வடித்த சிற்பி இது முடிந்ததும் பெரும் பித்து நிலைக்குச் சென்றிருப்பான். அவ்வளவு உயிர்ப்புள்ள சிற்பம்.

மாலையில் திருக்கட்டளை சுந்தரேஸ்வரரை பார்த்துவிட்டு அருகில் உள்ள குளக்கரையில் அமர்ந்து சிறிது நேரம் பேசி விட்டு வந்தோம்.

நார்த்தா மலை

இரண்டாம் நாள் பூமிநாதர் கோவில் சென்று விட்டு, கீழத்தானியம் உத்தமதானேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். மனிதர்களே இல்லாமல் அமைதியாக இருந்தது. நாங்கள் சென்ற பெரும்பாலான கோயில்கள் அப்படித்தான். கீழத்தானியம் கோவிலில் புனரமைக்கும் போது கோயில் படிகள் வரும் இடத்தில் கல்வெட்டுகள் இருப்பதால் ASI அதற்கு இடைவெளி விட்டு படிகளை தனியாக அமைந்து இருக்கிறார்கள் என JK சுட்டிக்காட்டினார். அதன்பின் சித்தன்னவாசல் ஓவியங்களை பார்க்கச் சென்றோம். அங்குள்ள ASI அலுவலர் தன் பணிக்காலம் முடிந்தும் அங்கேயே இருக்கிறார். நாங்கள் சென்ற இடங்களில் தானிருக்கும இடத்தை பற்றிய நல்ல புரிதலுடன் இருந்த ASI அலுவலர் அவர்தான். அவர் சொல்ல சொல்ல மங்கலான ஓவியங்களில் உருவங்கள் துலங்கி வந்தன. சமண மதத்தில் கூறப்படும் காடிகா பூமி பற்றிய ஓவியம் குடைவரையின் விதானத்தில் வரையப்பட்டிருந்தது. அஜந்தாவின் கிபி நான்காம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையிலான ஓவியங்கள் எல்லோராவின் ஏழாம் எட்டாம் நூற்றாண்டு ஓவியங்கள் சித்தன்னவாசலின் ஒன்பதாம் நூற்றாண்டு ஓவியங்கள் மற்றும் தஞ்சை பெரிய கோயில் சாந்தார அறையில் உள்ள பதினொன்றாம் நூற்றாண்டு ஓவியங்கள் என்று JK ஒவ்வொரு புள்ளியையும் இணைத்து பேசினார். திரும்பி வரும் பொழுது சொர்க்கம் என்பது இந்து மரபில் சொல்லப்படுவது போலவே சமணத்தில் உள்ள காடிகா பூமி பற்றியும் புத்த ஷம்பாளா பற்றியும் பேசிக்கொண்டே வந்தோம்.

கடம்பமலை

அப்படியே அருகில் உள்ள சமணர் படுகைகளை பார்த்துவிட்டு செல்லலாம் என்றும் மலை ஏறினோம். மலையின் குடைவான இடத்தில் பாறைகளை சிறிது செதுக்கி சமணர் படுக்கைகளை அமைத்துள்ளனர். அங்கு அமர்ந்து 1200-1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது இருக்கும் தடுப்பு கம்பிகள் ஏதும் இன்றி மனித சஞ்சாரமே இன்றி அந்த இடமே ஒரு ஆழ்ந்த தியானத்தில் இருந்திருக்கும். அங்கு ஒருவன் மட்டும் தனிமையில் அமர்ந்திருக்கும் பொழுது பெரும் இடி மின்னலுடன் கொட்டும் மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது என்ன நினைத்திருப்பான், அந்தப் பாறைக்குடைவே ஒரு சிப்பி போலத்தான் இருந்தது. சிப்பிக்குள் இருக்கும் முத்து போல, பேரியற்கையின் பெரும் கருணையின் கருவறையில் இருக்கும் கருக்குழவி போல தன்னை உணர்ந்திருப்பான் என நினைத்துக் கொண்டேன்.

அதன்பின் மாலையில் நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் சென்றோம். விஜயாலய சோழீஸ்வரம் முத்தரையர்களால் எட்டாம் நூற்றாண்டு வாக்கில் எழுப்பப்பட்டு பிற்காலத்தில் விஜயாலய சோழீஸ்வரம் என பெயர் பெற்றது. நாங்கள் செல்லும் பொழுது சூரியன் மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்தான். அந்திசாயும் வேலையின் கதிரொளியில் கோவில்கள் பேரழகை பெற்றுவிடுகின்றன. இந்த பாறையில் இந்த இடத்தில் கோயில் அமைக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை வியந்து கொண்டே சென்றேன். வெகு நேரம் அங்கு இருந்து விட்டு திரும்பினோம்.

மூவர்கோயில்

மூன்றாம் நாள் பயணத்திட்டத்தில் திருச்சி மலைக்கோட்டையும் இருந்தது. ஆனால் அது நாம் எப்பொழுதும் வேண்டுமானாலும் திருச்சி வந்தால் பார்க்கலாம் என்பதால் வேறு சில கோயில்களை இணைத்துக் கொண்டோம். பனங்குடியில் ஒரு சிவன் கோவிலை பார்த்துவிட்டு கடம்பர் மலை சென்றோம். கடம்பர் மலை கோவில் முதலாம் ராஜ ராஜனால் கட்டப்பட்டது. பாறைகளும், அல்லிக்குளமும் என மிக அழகான கோவில் அது. பாறையின் மீது அமைக்கப்பட்ட கோவில், யானையின் மீது ஒரு அம்பாரி போல இருந்தது.

அதன்பின் பூதி விக்ரமகேசரி கட்டிய கொடும்பாளூர் மூவர் கோயில். மூவர்கோயிலின் ஒரு விமானம் உள்ளீடற்ற விமானம். அதை பார்த்த பொழுது தஞ்சை பெரிய கோயில் விமானத்தை கற்பனை செய்து மலைத்து விட்டேன்.

இறுதியாக ஸ்ரீனிவாசநல்லூரில் ஆலமர்ந்த ஆசிரியனின் முன் ஒரு குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டு பயணத்தை முடித்துக் கொண்டோம்.

நான் என் பள்ளி காலத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பெரிய கோவிலை பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். முதன்முதலில் பெரிய கோவிலை பார்த்தது கல்லூரி காலத்தில்தான். ஆனால் அப்பொழுது சிறிது ஏமாற்றம்தான். மிகப்பெரிய கோவில், அதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. ஆலய கலை வகுப்பிற்குப்பின சமீபத்தில் சென்றிருந்த பொழுது அரை நாட்கள் போதவில்லை பார்த்து முடிக்க. மீண்டும் ஒருமுறை அதிகாலையில் கூட்டம் இல்லாத போது வந்து ஒரு நாள் முழுக்க பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். சமீபத்தில் சலிப்பு பற்றி தளத்தில் ஓரிரு கடிதங்களை பார்த்தேன். ஆலயங்களை பார்க்க தொடங்கிய பின் சலிப்பாவது இன்னொன்றாவது, அனைத்தையும் பார்த்துவிட வேண்டும் என்று பெரும் விழைவுதான் வருகிறது. ஆலய கலை பயணத்திற்கு வரும் பெண்களை பார்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களிடம் நான் காண்பது பெரும் உற்சாகம்தான். இனிமையான மூன்று நாட்கள். ஆம்,  நீங்கள் எப்பொழுதும் கூறுவது தான். கொண்டாட்டமான கல்வி. அனைத்திற்கும் உங்களுக்கும் எங்களுக்கு அமைந்த மிகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவரான ஜெயக்குமார் சாருக்கும் நன்றிகள்.

அன்புடன்,

கலைவாணி

முந்தைய கட்டுரைஆலயக்கலை :கற்றல் உணர்தல்
அடுத்த கட்டுரைஇந்திய தத்துவத்தை எப்படிக் கற்கிறேன்?