மேலைத்தத்துவம், அஜிதன்- கடிதம்

அன்புள்ள ஜெ

நான் கேட்பது உங்களைச் சீண்டுவதாக இருக்குமென்றால் மன்னிக்கவும். நான் இதைக் கேட்கவில்லை. இந்த வகையான பேச்சுக்கள் என் காதில் விழுவதனால் கேட்கிறேன். நீங்கள் இந்திய தத்துவம் கற்பிக்கிறீர்கள். உங்கள் மகன் மேலைத்தத்துவம் கற்பிக்கிறார். தத்துவத்தைக் குடும்பக்கல்வியாக ஆக்கிவிட்டீர்கள் என ஒரு நண்பர் சொன்னார். தத்துவம் கற்பிக்க உங்கள் மகன் போல வயதுகுறைவான ஒருவரை தேர்வுசெய்ய என்ன காரணம்?

பாலா ரவிக்குமார்

அன்புள்ள பாலா

வருத்தமெல்லாம் இல்லை. சீண்டப்படவும் இல்லை. இந்தவகையான எரிச்சல்களும் காழ்ப்புகளும் பழகிப்போய்விட்டன. அத்துடன் இவற்றுக்குப் பதில் சொல்லும் வகையில்தான் என்னுடைய தரப்பை தெளிவாக்கிக் கொள்கிறேன்.

மேலைத்தத்துவத்தை அஜிதன் கற்பிப்பதற்கு ஒரே காரணம்தான், நான் மேலைத்தத்துவத்தை ஒரு ‘பாடமாக’ சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரை நாடவில்லை. மேலைத்தத்துவத்தை அவை பேசும் அடிப்படைப் பிரச்சினைகள் வழியாகச் சொல்லிக்கொடுக்கும் ஒருவரை நாடினேன்.

மேலைத்தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவும் இந்தியா நவீனத்தொழில்நுட்பச் சூழலுக்குள் சென்ற பின்னரே நமக்கு வந்தமைகின்றன.

அத்துடன் நாம் கொஞ்சம் வறுமையில் இருந்து விலகி, உணவு உறைவிடத்திற்கு உறுதிப்பாடுள்ள நடுத்தர வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னரே கூர்கொள்கின்றன. சென்ற தலைமுறைக்கு உயிரோடிருத்தலே போராட்டமாக இருந்தது. அவர்களின் அக்கறைகளும் சிக்கல்களும் வேறுவகையானவை.

ஆகவே, மேலைத்தத்துவம் பேசும் பல பிரச்சினைகள் இன்றைய இளைஞர்களிடையே பரவலாக இருப்பவை. அவர்களின் கேள்விகள் அவை. அவற்றை விவாதிக்கும் அறிவியக்கமாக மேலைத்தத்துவத்தை அவர்களுக்குக் கற்பிக்க அவர்களில் ஒருவரால் மேலும் சிறப்பாக முடியும் என நினைத்தேன். அது ஆசிரியர் மாணவர் கற்பித்தலாக இல்லாமல் நண்பர்கள் நடுவே நிகழும் உரையாடலாக நிகழ்வது மேலும் பயனுள்ளது என்று பட்டது.

ஆகவேதான் அஜிதன் அவ்வகுப்பை நடத்துகிறான். நானறிந்தவரை இன்று இவ்வகுப்பை இவ்வகையில் நிகழ்த்த இன்னொருவர் இல்லை.  முறையான கல்வித்துறைசார்ந்த கல்வியும், கூடவேதனிப்பட்ட தேடுதல்கொண்ட விரிவான வாசிப்பும் இரண்டுமே அவனுக்கு உண்டு.

அத்துடன் இளமையில் தத்துவத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்றால் பற்பல ஆண்டுகளை முழுமையாக அதற்காக ஒதுக்கியிருக்கவேண்டும். இன்றைய சூழலில் ஒரு தமிழ் இளைஞன் எண்ணியே பார்க்கமுடியாத ஆடம்பரம் அது. தமிழ் இளைஞர்கள் பொதுவாகவே தொழிலுக்கான கல்வியை கற்றேயாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். அஜிதனுக்கு அவ்வாய்ப்பு அமைந்தது.

அஜிதனின வகுப்புகளுக்கு வந்தவர்கள் எவரும் இதில் மாற்றுக்கருத்து கொண்டிருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஜெயமோகன்

 

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவ வகுப்புகளுக்கு முன்…
அடுத்த கட்டுரைசவால்களை எதிர்கொள்ளுதல்