சவால்களை எதிர்கொள்ளுதல்

திட்டு, முதற்சாதனை

பிரியத்திற்குரிய ஜெ,

வணக்கம். நலம், நலமே என நம்புகிறேன்.

தளங்களை தொடர்ந்து வாசித்துகொண்டு வந்தாலும் இந்த கடிதம் வந்தபோது வாசிக்கத் தவறிவிட்டேன்; அதற்கான எதிர் வினை கடிதத்தைத் தொடர்ந்து வாசித்து பிரமித்துவிட்டேன்.

தயக்கமெனும் நோய் கட்டுரையையும் அதனைத் தொடர்ந்து வந்த எதிர்வினைகளயும் வாசித்திருக்கிறேன். அது சற்றே பொதுப்படையாக, பெரும்பாலோனாரை மனதில் கொண்டு எழுதப்பட்டது என்று அப்போது பட்டது.  Ofcourse, இத்தனை வருடங்கள் நூற்றுக்கணக்கான கூட்டங்களை ஒருங்கமைத்த அனுபவங்களிலிருந்து வந்த ஓர் சாரமே அந்த கடிதம்.

ஆனால் இந்த வாசகி, ‘அ’…முதலில் எல்லாரையும் போல் ஆர்வக்கோளாறில் கேள்விகள் கேட்க ஆரம்பித்து ஒரு திட்டு, கடுமையான எதிர்வினை உங்களிடமிருந்தே பெறுகிறார்.பெரும்பாலோனோர் இந்த இடத்திலேயே திரும்பிவிடுவார்கள். எனது சிறு, குறுகிய அனுபவத்திலேயே அப்படி U turn எடுத்துக்கொண்ட பலரைத் தெரியும்.
அந்த முதல் கசப்பு, ஒட்டவே விடாது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த எதிர்வினை, வந்தது, உங்களிடமிருந்து.

தான் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒருவர், தினந்தோறும் மானசீகமாக உரையாடிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுமை, எதிர்பாராதவிதமாக நேரடியாக தனக்கு எதிர்வினையாற்றும் போது தன்னங்கங்காரம் கடுமையாக சீண்டப்படும். இது இயல்பே.ஏனெனில் உங்கள் இடம் அப்படி, உயரம் அப்படி.
ஆயுதம் கூர்மை அதிகமாக, அதிகமாக, அதைக் கையாளும் பொறுப்பும் அதிகமாகிறது, அது உங்கள் தலைவலி!

ஆனால் இந்த வாசகி, அப்படித் திரும்பிவிடாமல் முன்னெடுக்கிறார்; செயல்களில் இறங்குகிறார். என்னதான் நவீன உலகமெனினும், பெரு நகர் வாழ்க்கையெனினும், குடும்ப வாழ்க்கையில் பெண்களுக்கே உரிய பொறுப்புகள், எதிர்கொள்ள வேண்டிய கேள்விகள், வேலைகள், குழந்தைகள் (இந்த வாக்கியம் எழுதும்போது அருண்மொழி நங்கை எனும் எழுத்தாளரின், “தேனில் விழுந்த பூச்சி/ஈ வாழ்க்கை” எனும் அழகான ஒப்புமை நினைவிற்கு வருகிறது) ஏராளங்கள் உண்டு.

ஆனால் இது இலக்கு, இது மாற்ற முடியா ஒன்று என்று முடிவெடுத்துவிட்டார்களானால்… அதை அடைய வழிகள் என்ன என்று ஆரம்பித்து, தெளிவாக மென்மேலும் சென்றுவிடுவார்கள். இத்தனை வருட சொந்த வாழ்க்கையிலும்(அம்மா, மனைவி) பணி அனுபவங்களிலும் சொல்கிறேன் (என்னுடைய மேலாளார்கள் பெரும்பாலும் பெண்களே – இந்திய, பிரிட்டிஷ், ஸ்வீடிஷ் பெண்கள்).

இந்த வாசகியும் இப்படி எழுந்துவிட்டார் – சின்னஞ்சிறு ஒட்டடைகளை விலக்கிவிட்டு  முகாமிற்கு சென்று விட்டார்.அன்றாட கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று எழுதுகிறார் (வெந்நீர் கிடைத்ததா). இது போன்ற சூழ்நிலைகள் குடும்பத்தினருக்கும் புதிது என்பதால் இயல்பான, அக்கறையான கேள்விகளே.

அந்த கனவு வார இறுதி, மூன்று நாட்கள் முடிந்தபின், மறுபடியும் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தவுடன் எல்லாம் அவ்வளவுதான், வாழ்நாள் சாதனை என்று போய்விட்டிருந்தார் எனில், உங்களுக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார் எனில் மேலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஆனால், அதன் பின் அந்த அனுபவத்தை வைத்து இரண்டரை மாத கெடுவில் ஒர் புத்தகத்திற்கு அத்தனை உழைப்பு கொடுத்திருக்கிறார். ஒரு வார இறுதி மட்டும் எனில் குடும்பத்தினர் “சகித்து” கொள்வார்கள். ஆனால் தின வாழ்க்கையில்  – வீட்டில் குழந்தைகள், வயதானவர்களுக்கு உடல்நலக்குறைவு என்பது, கையில் இருக்கும் அனைத்தையும் போட்டுவிட்டு அதற்கு மட்டுமே முழுமுதற் கவனம் செலுத்தவேண்டிய ஒன்று – தொடர்வது என்பது மிக சவாலானது.

இத்தனைக்கும் கொரோனா காலத்தில்தான் தங்கள் இணைய தளத்தை கண்டடைந்திருக்கிறார். அதன் பின் எழுத்துப் பயிற்சி வகுப்புகள், ஆலயக்கலை வகுப்பு என்று சென்று, ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் என்பதே இதில் பிரமிப்பானது.

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் சில பெண்களும்” படத்தில் மூன்றாவதான கதை, முன்னாள் விளையாட்டு வீராங்கனையின் பாத்திரம் என்னை மிக கவர்ந்த ஒன்று. அதன் இறுதியில் பிள்ளையின் டிபன் பாக்ஸை ஓடிச்சென்று  கொடுத்துவிட்டு மூச்சு வாங்குவதோடு படம் முடிந்துவிட்டாலும் அதன் பின் அவர் தன் இன்னொரு பக்கமான “விளையாட்டை” எப்படியோ தொடர்வதாக (பாகம் இரண்டு!) நானாக கற்பனை செய்து கொண்டேன்.

அந்த விமோசனம் படத்தில் இறுதியில் நாயகி, மாலையில் தனக்கான ஒரு காபி/டீயை கலந்து கொண்டு  மிக நிதானமாக நாற்காலியில் சாய்ந்துகொண்டு எதையோ அசைபோடுவதைப் போன்ற காட்சி, மாபெரும் வெற்றிக்கோப்பை தருணம், அந்த கதையின் பாகம் 2 என்று கூட எடுத்துக்கொள்ளலாம்!

இது போல்,சிவரஞ்சனிக்கும் ஓர் பாகம் 2 – அட்லீஸ்ட் ஒரு கோச்சாகவாவது – அந்த காலனி வாசி குழந்தைகளுக்கு, அவர்களுக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் போது ஓர் அமெரிக்க/ஐரிஷ் க்ளப் நிர்வாகி தற்செயலாக கவனித்து, பாராட்டி தங்கள் அணிக்காக சிறப்பு முகாம்களை…கற்பனைக்குதான் தர்க்கங்கள் அதிகம் தேவையில்லையே!).

இந்த வாசகி, நிஜ வாழ்க்கையில் பாகம் இரண்டிற்கு சென்றிருக்கிறார்.
அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

முகாம்களை தொடர்ந்து நடத்துவற்கான மிக முக்கிய காரணங்கள், அதன் நல்விளைவுகளில் இதோ, இன்னொன்று.   நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள்.

 

சிவா கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைமேலைத்தத்துவம், அஜிதன்- கடிதம்
அடுத்த கட்டுரைஆலயம் – கடிதம்