ஏன் பெரிய விழா?

அன்புள்ள ஜெயமோகன்,

வாழும் தமிழ்  இலக்கிய நிகழ்வு பற்றிய  உரையாடல்கள் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உள்நோக்கமும் ஒவ்வொரு வகையான எதிர்பார்ப்பும் உள்ளது என்றாலும்  சில கேள்விகளுக்கு எப்போதுமே  ஒரு முக்கியத்துவம் உண்டு.

அதில் ஒன்று.  மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி, மிக அதிகமான பேரிடம் சென்றடையும் ஒரு இலக்கிய நிகழ்வை தானே நாம் இப்போது முன்னெடுக்க வேண்டும்?  300 பேருக்குள் மட்டுமே நிற்கும் ஒரு விழா என்பது  ஒரு சிறிய நிகழ்வாக தோன்றுகிறது அல்லவா ? இதற்கு உங்களுடைய எண்ணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ரவி முருகேசன்

அன்புள்ள  ரவி,

எங்கள் விழா பெரிய விழாதான். ஆனால் மிகப்பெரிய விழா – கார்னிவல் அல்ல.

உண்மையில்  மிகப்பெரிய இலக்கிய விழாக்களுக்கு இருக்கும் பங்களிப்பு வேறுவகையானது. இலக்கியம் என்பதை பரவலாக அறிமுகம் செய்ய அவை உதவும். ஆனால் தீவிர இலக்கியத்திற்கு அவை பயனளிப்பதில்லை.

ஜெய்ப்பூர் இலக்கிய விழா அவ்வளவு பிரமாண்டமானது .ஆனால் அதனால் ராஜஸ்தானி இலக்கியத்திற்கு அல்லது இந்திய இலக்கியத்திற்கு நேரடியாக பயன் என்ன உள்ளது ? அங்கே தீவிர இலக்கியம் உருவாகிறதா? அந்த விழா தீவிர இலக்கியத்தை முவைக்கிறதா?

பெரிய விழாவுக்கு நிதி நிறையத்தேவை. ஆகவே நிதியை அளிக்கும் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது . அவர்கள் சொல்லும் புகழ்பெற்றவர்களை அழைக்க வேண்டி இருக்கிறது. புகழ் பெற்றவர்கள் எப்போதுமே வணிகநாயகர்கள்இலக்கியத்திலும். அந்த உலகம் தீவிர இலக்கியத்திற்கு எதிரானதாகவே இருக்கும்.

அறிமுக வாசககர்களை  அதுள்ளே கொண்டு வருகிறது என்பது உண்மைதான் ஆனால்  தீவிர இலக்கியம் சார்ந்த விவாதங்களுக்கு  கவனம் இல்லாமல் ஆகி விடுகிறது .வாழும் தமிழ் ஒரு தீவிர இலக்கிய நிகழ்வு. இதைப் போன்ற ஒரு நிகழ்வை ஒருபோதும் மிகப்பெரிய அளவில் நிகழ்த்த முடியாது.

இந்த நிகழ்வி நோக்கம் தமிழின் தீவிர இலக்கியத்தை அறிமுகம் செய்வது மட்டுமே. தமிழிலுள்ள எல்லாவற்றையும் கொண்டுசெல்வது அல்ல. இதற்கு இத்தகைய குவிமையம் கொண்ட நிகழ்வுகள் மட்டுமே உதவியானவை.

மெ

முந்தைய கட்டுரைஇளைமையை நோக்கி…