வெறும் பேச்சு மட்டும்தானா?

அன்புள்ள ஜெ

லிவிங் தமிழ் இலக்கியவிழா என்று கேள்விப்பட்டேன். ஆனால் வெறும் உரையாடல்கள் மட்டுமே நிகழும் என்று சொன்னார்கள். அதை பொதுவாக அனைவரும் ரசிக்கமுடியுமா? இளைஞர்கள் வரவேண்டும் என்றால் அவர்களுக்கேற்ற நிகழ்ச்சிகள் தேவை அல்லவா? அவர்களை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் எதாவது சேர்த்திருக்கலாமே?

லதா கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள லதா,

 

இலக்கியம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களுக்காக மட்டுமே இத்தகைய இலக்கிய விழாக்களை நிகழ்த்த முடியும். கேளிக்கைகள் கலைகள் ஆகியவற்றுடன் அவற்றை நிகழ்த்தினால் அந்த அரங்கில் இலக்கியத்தை முன்வைக்க முடியாது .அதற்கான பார்வையாளர்கள்  இருக்க மாட்டார்கள். அந்த மனநிலையும் இருக்காது.

பார்வையாளர்கள் அரங்கின் மேல் செலுத்தும் தீவிரமான பாதிப்பை பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் மேலோட்டமான பார்வையாளர்கள் நிறைந்திருக்கும் ஓர்  அரங்கில் ஒருபோதும் ஒரு தீவிரமான விஷயத்தை நிகழ்த்தி விட முடியாது.  

இந்த கருத்தரங்கு முதன்மையாக வாசிக்கும் வழக்கமும், இலக்கிய அறிமுகமும் கொண்ட அமெரிக்கக குழந்தைகளுக்கானது. அங்கும் எதையும் வாசிக்காத குழந்தைகள் உள்ளன. அவர்கள் இங்கே வரமுடியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்களை உள்ளே கொண்டுவருவதும் கடினம். அவர்களுக்கு அறிவுத்திறன், கற்பனை ஆகியவை இருக்கவேண்டும், இல்லையேல் அவர்களை இழுத்துக்கொண்டு வந்து என்ன சாதிக்கமுடியும்?

மேலும் நம்மை அறிந்திராத அமெரிக்க அறிவு வட்டத்தினர் மற்றும்  இலக்கிய ஆர்வலர்களுக்காக  நடத்தப்படுவது இது. அத்தகைய அவையில் ஏற்கனவே இலக்கியத்தில் தெரியாத, இலக்கியத்தில் ஆர்வமே இல்லாத ஒருவருக்கு பெரிய இடம் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். அவர்களுக்கான பொதுவான கேளிக்கை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும் ஏராளமாகவே நடைபெறுகின்றன.

 ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கிய விழாக்கள்