அன்புள்ள ஜெ,
எதிர்மறை மனநிலைகளை எதிர்கொள்வதைப் பற்றி ஒரு காணொளியை நீங்கள் முகநூலில் வெளியிட்டிருந்தீர்கள். எனக்கு அந்த காணொளி அளித்த அதிர்ச்சி சாதாரணமானது அல்ல. நானும் அதே மனநிலையில்தான் இருந்தேன். நேற்றுகூட இந்த நிகழ்ச்சியைப் பற்றி நையாண்டியாகப் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு நண்பர் என்னிடம் உனக்கு இருக்கும் விமர்சனம் என்ன என்றார். ‘ஜெமோ ஆணவமாகப் பேசுகிறார்’ என்றார். அவர் ‘அவரை பற்றி நீ இப்போது பேசுவது அதைவிட ஆணவமாக இருக்கிறது. உன் சாதனை என்ன?’ என்றார். எனக்கு படபடப்பாகிவிட்டது. சொல்லப்போனால் தூக்கமே இல்லை. இன்று காலை இந்த காணொளியையும் பார்த்தேன். உங்களை ஆணவம், சுயமையப் பார்வை என்றெல்லாம் சொல்லும் ஒவ்வொருவரையாகப் பார்த்தேன். வாசகன் பொருட்படுத்தும்படி ஒரு படைப்பை எழுதிய, ஒரு நல்ல கட்டுரை எழுதிய ஒருவர்கூட அதில் இல்லை. எல்லாருமே மிக அற்பமானவர்கள். எழுத முயற்சி செய்து தோற்பவர்கள். இந்த வம்புகளை நிறுத்திவிட்டு ஏதாவது உருப்படியாகப் படித்தார்கள் என்றால்கூட எதையாவது அவர்கள் செய்யமுடியும். ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதுபோல நாற்பது கடந்தவர்கள். எனக்கு 27 தான் . நான் சாதிக்கமுடியும். ஜெ, இன்னும் இரண்டு ஆண்டுகளில் உங்கள் முன் வந்து நிற்பேன். அப்போது நானும் எதையாவது சாதிப்பவனாக இருப்பேன். நிமிர்ந்து நின்று உங்களிடம் பேசுவேன்.
எம்
அன்புள்ள எம்,
அதற்கு நீங்கள் ‘சாதிக்க’ வேண்டும் என்பதில்லை. சாதனை என்பது நம் கையில் இல்லை செயல் மட்டுமே நம் கையிலுள்ளது. சரியான சுற்றம், சரியான சூழல் அதற்கு முக்கியம். எதிர்மனநிலைகளை விட்டு விலகி ஆக்கபூர்வமான சூழலுடன் இணைந்திருந்தாலே போதுமானது.
ஜெ










