தனிமை, இசை, இயற்கை

அன்பிற்குரிய அய்யா, 

தங்களது ஓஷோ பற்றிய உரையை கேட்க நேர்ந்ததிலிருந்து உங்களை மெல்ல மெல்ல வாசிக்கத் தொடங்கினேன். 

கடந்த நான்கு ஆண்டுகளில் பல முறை பல குறுகிய கால அளவுகளில் தீவிரமாக வாசித்து பின் முழு வாசிப்பின்மைக்கு திரும்பி இருக்கிறேன். 

ஒவ்வொரு முறையும் தங்களது ஏதோ ஒரு கட்டுரையோ, யூட்யூப் காணொலியோ, சமீப காலங்களில் தங்களது முகநூல் காணொலிகளும் கூட தூது வந்து தீவிரமான வாசிப்புக்குள் மீண்டும் மீட்டு இழுத்துச் செல்லும். 

நாவல்கள் எதுவுமே வாசித்திறாதவனாக வெண்முரசு வாசிக்கத் தொடங்கினேன். முதல் முறை கிட்டத்தட்ட மழைப்பாடலில் ‘மொழியாச் சொல்‘ பகுதி வரை வார்த்தை பொருளாகமலும்,  வார்த்தை பொருளாகியும் கற்பனையாகமலேயே வாசித்திருந்தேன். மெல்ல மெல்ல வெண்முரசு என்னை உள் இழுத்துக் கொண்டது. 

பல முறை இலக்கிய வாசிப்பை விட்டு தூரச் சென்றாலும் வெண்முரசின் ஏதோவொரு நிகழ்வோ வரியோ நினைவில் எழுந்து புது உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. 

கவிதையோ பெண்களின் வாழ்க்கைசார் பிரத்தியேக எழுத்துக்களையோ படித்ததில்லை என்றாலும் கவிக்கோ அரங்கில் நிகழ்ந்த குமரகுருரன் விருது விழாவிலும் மானசா பதிப்பக நிகழ்விலும் கலந்து கொண்டேன். ஏதோ ஒரு வகையில் இலக்கிய வாசகர்களை சந்தித்தது இன்னும் வாசிக்க வேண்டுமென்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

கடலூர் சீனு சாரிடம் அன்று வெண்முரசு வாசிப்பு சார்ந்த நிறைய ஐயங்களைக் கேட்டித் தெளிய முடிந்தது. அன்றைய நாளில் மதிய உணவு வேளையில் உங்களைச் சுற்றி வீட்டுத் நல்நிகழ்வில் போல கொண்டாட்ட மனநிலையில் வாசகர்கள் அமர்ந்திருக்க நீங்கள் அவ்வளவு நகைச்சுவை உணர்வுடன் பேசிக்கொண்டிருந்தீர்கள். நீங்கள் எப்போதும் சீரியசாகவே  இருப்பீர்கள் என்னும் எனது அசட்டுத்தனமான மனபிம்பம் உடைந்து நொறுங்கியது. 

தனியனாக வாசிப்பதில் ஒரு குறைபாடு உள்ளது என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அதை என்னவென்று சொல்ல முடிந்ததில்லை. கொரோனா காலத்திலிருந்தே பொதுவாகவே தனித்து எனக்குள்ளேயே முற்றிலும்  சுருங்கிப்போய் இருந்திருக்கிறேன். எவரிடமும் பேசாமலேயே இருந்து இப்போதும் எவரிடமும் சகஜமாகவும் நட்பாகவும் பேச முடிவதில்லை. உரையாடலில் பெருஞ்சுவர் போல் ஒரு சிரமம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்நிலையில் கடந்த வார இறுதியில் நிகழ்ந்த மேலை இசை அறிமுகப் வகுப்பில் கலந்து கொண்டேன். வந்திருந்த சக நண்பர்களிடம் உரையாடியது பெரிய திறப்பாக இருந்தது. 

நண்பர் சுதன் தன் நான்கு அக்காக்களுடன் வெண்முரசு கூட்டு வாசிப்பில் ஈடுபட்டு உரையாடுவது எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதிர்ந்து போனேன். கொஞ்சம் பொறாமையும் கூட.  குந்தியின் தாய் மரீஷை அவ்வளவு மோசமாக நடத்தப்பட்டபோதிலும் ஏன் அன்பை மட்டுமே தருபவளாக இருந்தாள் என்று 12 வயது மூத்தவரான அக்கா சுதனிடம் கேட்டதாகச் சொன்னார். எனக்குள்ளும் ஒரு நகர்வு ஏற்பட்டது. அவரது நண்பர்களின் வெண்முரசு சார்ந்த கலந்துரையாடலான ‘முதல் அரும்பில்‘ இனி நானும் கலந்து கொள்வதாகச் சொன்னேன். 

அந்தியூர் மணி அண்ணா பேசுவதை உணவு இடைவேளையின் போதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். மிகநுட்பமான பல விஷயங்களை அவர் பேசிக் கேட்ட போது உரையாடல் சிந்திக்க விரும்பும் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்று புரிந்தது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நான்கு சுவர்களுக்குள்ளாகவே பெரும்பாலான நேரத்தைக் கழித்தவன் நான். மாலையில் இதயத்துல்லா அண்ணாவிடம் பேசிக் கொண்டே நித்யவனத்துக்கு வெளியே நடை சென்ற போது, செக்கச்சிவந்த வானின் ஒளியில் திடீரென ஒரு கனவுலகிற்குள் நுழையும் உணர்வு ஏற்பட்டது.  அவரும் அவர் வாசித்த கவிதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மிகவும் கனிவான மனிதர். 

 

முதல் நாள் வகுப்பிலேயே இந்த மேலையிசையின் பிடி கிடைப்பதற்கு சில காலம் ஆகுமல்லவா என அஜிதன் அண்ணாவிடம் கேட்டேன். நாளைக்கு குள்ள பிடி கிடைக்கனும், பயப்படாம இசையைக் கேட்கும்படி சிரித்துக் கொண்டே சொன்னார். 

முதல் நாள் Operaவின் வரலாற்று ரீதியான அறிமுகத்தைத் தந்து அதன்பின் கதைத் தருணங்களைச் சொல்லி, தேவைப்பட்ட இடங்களில் அத்தருணங்களின் தத்துவ உட்பொருளை சுட்டிக்காட்டி பல குறுகிய காணொலிகளைக் கேட்க வைத்து அந்த ரசனைக்கு எங்களைப் பழக்கப் படுத்தினார். மெல்ல மெல்ல சிலவற்றைக் கேட்கும் போது, உணர்ச்சியுடனாக இசையுடன் ஒத்திசைந்து ஏதேதோ 

வாழ்க்கை நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. 

இரண்டாம் நாள் வாக்னரின் ஓப்ராவுக்கு அதற்கான கதைகளை சொல்லி தயார் படுத்தினார். முதலில் Operaவின் பல தருணங்களைக் கேட்டோம். Overture எனப்படும் ஓப்ராவின் முக்கியமான பல theme-களின் தொகுப்பையும் கேட்டோம். இரண்டாம் நாள் மாலை Der Ring des Nibelungen எனப்படும் Ring cycle-ன் இரண்டாம் ஓப்ராவான Die Walküre –யின் காணொலியை முழுவதுமாக கேட்டோம். 

கதையை பின்தொடர்தல். அதன்மீது அமிர்த்தமாக நிறைந்து வழியும் இசையின் பாவத்தை உள்வாங்கிக் கொள்ளுதல். அதன் பின் இசையில் நிகழும் நுட்பமான விஷயங்களை உள்வாங்குதல். இவ்வாறாக என்னளவில் இந்த ரசனைக்குப் பழகுவதை நான் அவதானித்துக் கொண்டேன். 

ஒவ்வொரு இடைவேளை நேரத்திலும் அஜிதன் அண்ணாவிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். நானும் கேட்டேன். அவர்கள் கேட்கும் அளவுக்கு நுட்மான கேள்விகள் என் மனதில் எழவில்லை என்பது கொஞ்சம் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியது.

இரு முறை ஏதோ ஒரு வகையில் ரசனையைக் கேலிச் செய்யும் விதமாக பேச்சுவாக்கில் மிக எதார்த்தமாக இருவர் கேள்வி கேட்டபோது மரியாதையுடனும் மெல்லிய கடுமையுடனும், அமர்ந்து கேட்க நிர்பந்திக்கவில்லை. இயன்றால் கேளுங்கள்.  இத்தகைய கேலிகள் ரசனைக்குப் பழக முற்படும் மற்றவர்களுக்கு பெரும் இடையூறாக அமையும். வாழ்வில் ஒரே ஒரு முறை ஓப்ராவை அமர்ந்து கேட்பது கூட வாழ்வின் ஒரு மிகச் சிறந்த அனுபவமே என்று பொருள்படும்படி பதில் சொன்னார். 

எங்களுக்கு ஒவ்வொன்றையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் அந்தியூர் மணி அண்ணா. கடைசிநாள் மணி அண்ணாவின் தாயார் காலமனதாக செய்திவந்தது. அவரது ஆன்மா இளைப்பாறும்படி பிராத்தித்துக் கொண்டேன். 

ஒரு மாணவனாக ரசனையில் உயர்ந்த தரத்திலான ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பாத்திரமாக இருக்கிறேனா என்பதையும் நான் செரிவற்ற முறையில் கேள்வி கேட்பதால் கேள்வியே தவராக தெரிவிக்கப்படுவதையும் அசைபோட்டுக் கொண்டே வீட்டிற்கு பயணமானேன். 

வீட்டிற்கு வந்தபின் Ring cycle-ன் முதல் இரு ஓப்ராக்களையும் கேட்டுவிட்டு, தற்போது அடுத்ததையும் தொடரப் போகிறேன். இந்த ரசனை காலப்போக்கில் விதையிலிருந்து மரம் போல என்னுள் வளரும் என்று நம்புகிறேன். 

கட்டணத்தை என்னால் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பதானால் பிறகு கட்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். நீங்கள் அனுமதித்தீர்கள். ஏற்கனவே கட்டணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று  இந்திய தத்துவம் முதல்நிலை வகுப்புக்கு கட்டணமின்றி அனுமதித்தீர்கள். 

வகுப்புகள் தொடர்ந்து நிகழ கட்டணம் இன்றியமையாதது என்பதைப் புரிந்து கொள்கிறேன். இயலும்போது இனி கலந்துகொள்ளும் வகுப்புகளுக்கான கட்டணத்தையும் சேர்த்து  கட்டிவிடுகிறேன். 

இத்தகைய வாய்ப்பை நல்கிய உங்களுக்கும், முழுமையறிவு அமைப்புக்கும், ஆசிரியர் அஜிதன் அண்ணாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்புடன், 

அக்னி. 

முந்தைய கட்டுரைபாலியல் அடிமைத்தனம், கடிதம்.