விபாசனா பயிற்சியும் விலக்கமும்

அன்புள்ள ஜெ

விபாசனா போன்ற பயிற்சிகளால் நம் மனதின் உலகியல் சார்ந்த ஊக்கம் குறைந்துவிடும் என்று சொல்லப்படுகிறதே?

இதை என் அனுபவத்தைச் சார்ந்து கேட்கவில்லை . இதைப்பற்றிய ஓர் உரையாடலில் இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டது. அதைத்தான் கேட்டேன்.

சாம்

அன்புள்ள சாம்,

விபாசனா போன்ற தியானப் பயிற்சிகள் அகத்தில் ஓர் ஆழமான அமைதியை அளிக்கின்றன. அது ஓர் உறுதிப்பாடு.

அந்த உறுதிப்பாட்டை மட்டுமே இலக்காக்கிச் செல்லும் ஒருவர் உலகியல் செயல்பாடுகளில் இருந்து விலகிவிடுவது நிகழ்வதுண்டு. அந்த ஆழ்ந்த அமைதி தன்னை நோக்கி ஈர்க்கும் விசை கொண்டது.

ஆனால் உலகியலில் இருப்பவர்களுக்கு அவர்களைச் சூழ கொந்தளித்த்துக்கொண்டிருக்கும் அன்றாடத்தின் அலைகள் நடுவே ஓர் உறுதியான பிடிமானமாக அந்த ஆழ்ந்த அமைதி அமையும்.

சிந்திக்கும் ஒருவர்  எந்நிலையிலும் முழுமையாக உலகியலில் ஈடுபடுவதில்லை. ஒரு சிறு பகுதி விலகி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த அகம் சிலசமயம் உலகியலில் உள்ள அர்த்தமின்மையை உணர்ந்து  சட்டென்று சலிப்படையும். ஆழமான சோர்வாக அந்தச் சலிப்பு உருமாறும். பெரும்பாலான உளச்சோர்வுகளின் ஊற்று அதுதான்.

மிகத்தீவிரமாகச் செயல்படுபவர்கள் ஒரே நாளில் சோர்வின் உச்சிக்குச் செல்வது வழக்கம். அந்த இருநிலையில்தான் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள். அந்த இருநிலை அதிகரித்தால் அது ‘பைபோலார் சின்ட்ரோம்’ போன்ற அதீதநிலைகளுக்குக்கூடச் செல்லக்கூடும்.

அந்தச் சோர்வை அகற்றச் சிறந்த வழி அகத்தில் , அந்தரங்கமாக , ஒரு தனிமையையும் அமைதியையும் பேணிக்கொள்வதுதான். நாம் எவர், என்ன செய்கிறோம் என உணர்ந்து கொள்வது தியானம் வழியாக சாத்தியம். அதன்பின் செய்யவேண்டியவற்றை பெரிய பற்றோ , பெரிய விலக்கமோ இல்லாமல் நடுநிலையில் நின்று செய்யமுடியும். தியானம் அளிப்பது அந்த நடுநிலை வழியை.

ஆகவே தியானம் உண்மையில் உலகியல் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்வதற்கு உதவியானது

ஜெ

 

 

அமலன் ஸ்டேன்லி நடத்தும் பயிற்சி வகுப்புகள்

செப்டெம்பர் 6, 7 and 8 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

விபாசனா, கடிதம்

பௌத்தம்,விபாசனா- கடிதம்

வீடும் வகுப்பும், கடிதம்

 

முந்தைய கட்டுரைவேண்டுதலா தியானமா?
அடுத்த கட்டுரைதில்லை செந்தில்பிரபு – கடிதம்