வணக்கம் ஜெ,
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லியோனார்டோ டா வின்சி ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, பொறியியல் என ஒரு பல துறைகளில் மேதையாக இருந்தார். ஒரு வகை முழுமை அறிவை அடைந்தார். ஆனால், இன்றைய உலகில் ஒரு டா வின்சி சாத்தியமா ?
இன்று பல துறைகளில் ஆழமான அறிவு கொண்டவர்கள் மிகவும் குறைவு. இதற்கு ஒரு காரணம், ஒரு துறையில் வெல்வதற்கே, இதற்கு முன்னர் வந்த அனைத்து மேதைகளையும் முந்த வேண்டியுள்ளது. இதற்கே ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது. எனவே, இரண்டாம் துறையில் கொஞ்சம் கால் நனைக்கலாமே ஒழியே, அதன் ஆழத்தைத் தொடுவது மிக மிகக் கடினமாகிறது.
உதாரணத்திற்கு, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமானுவேல் லாஸ்கர் (https://en.wikipedia.org/wiki/Emanuel_Lasker ) 27 ஆண்டுகள் உலக சதுரங்க சாம்பியனாக இருந்தார். அதே நேரத்தில், கணிதத்தில் டேவிட் ஹில்பெர்ட்டின்(https://en.wikipedia.org/wiki/David_Hilbert) மாணவராக இருந்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளார். மெய்யியல் அறிஞராகவும் இருந்துள்ளார். ஆனால், இன்றோ சதுரங்கத்தில் உலக வாகையாளர் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 5 வயதில் பயிற்சியை தொடங்கி முழு கவனத்தையும் சதுரங்கத்திற்கே கொடுத்தாக வேண்டும். ஒரு துறையில் முனைவர் பட்டம் வாங்கி வேறொரு துறையில் அதே நேரத்தில் உலக வாகையாளர் ஆவது மிக மிக அரிது.
எனது ஆசை அறிவியல் (கணினித் துறை {மென்பொருள், வன்பொருள், தரவு மையம், செயற்கை நுண்ணறிவு, இன்னும் பல}, கணிதம், இயற்பியல், வானியல்), இலக்கியம்(செவ்வியல் இலக்கியம், பிற மொழி இலக்கியம்), தத்துவம்(இந்திய மெய்யியல், சீன மெய்யியல், ஐரோப்பிய மறுமலர்ச்சி மெய்யியல், கிரேக்க மெய்யியல், இஸ்லாமிய மெய்யியல், கிறித்தவ மெய்யியல்), , விளையாட்டு(சதுரங்கம், பாட்மிண்டன்), என அனைத்தையும் ஒன்றுடனொன்று இணைத்துக் கற்றுக் கொண்டு அதில் சிலவற்றின் எல்லைகளையாவது விரிக்க வேண்டும் என்பது தான். ஆனால், ஒரு குழந்தை இரண்டு இருக்கைகளில் ஒரே நேரத்தில் அமர முடியாதோ என்று எண்ணும் பெருந்துயரை நான் அடைந்து உள்ளேன். அது உண்மையாகவே பெருந்துயர் என்று தெரிகிறது.
எனக்கு வாழ்க்கையில் மிஞ்சி இருப்பதோ கிட்டத்தட்ட 18,000 நாட்கள் தான். இந்த சொற்ப நாட்களில் அறிவின், செயலின், வாழ்க்கையின் எல்லைகளை விரிப்பது எப்படி ?
நன்றி,
ஹரீஷ்
அன்புள்ள ஹரீஷ்
முழுமையறிவு என்பது ‘எல்லா அறிவையும்’ ஒருவர் கற்றுக்கொள்வது அல்ல. அறிவின் முழுமை என்று மட்டுமே அதற்குப் பொருள். எல்லா அறிவையும் எவரும் கற்றுக்கொள்ள முடியாது.
நாம் நமக்குரிய கேள்விகள் வழியாகவே கற்கிறோம். அதுவே சரியான கல்வி. கேள்வி இல்லாத இடத்தில் கல்வி இல்லை. ஏனென்றால் கற்பதென்பதே விடைதேடுவதுதான்.
நமக்கான கேள்விகள் நம் வாழ்க்கையில் இருந்து உருவாகின்றன. நம் ஆளுமையைச் சார்ந்து கூர்கொள்கின்றன. நம் அறிவுப்புலத்தில் வேர்விட்டு எழுகின்றன.
அக்கேள்விகளை நாம் விடைநோக்கி விரிக்கையில் சாத்தியமான எல்லா களங்களில் இருந்தும் விடைகளை தேடவேண்டும். அதை மட்டுமே நான் முழுமையறிவு என்கிறேன்.
ஒருவரின் வினா எதுவானாலும் அது ஆழமாகச் செல்லுந்தோறும் அது அடிப்படையான தத்துவக் கேள்வியாக உருமாறும். அப்போது அதை அவர் எளியமுறையில் பொதுப்புத்தியைக் கொண்டு ஆராய முடியாது. அவருக்கு மெய்யியல் கல்வி தேவைப்படும். தத்துவப்பயிற்சி தேவையாகும். கலையிலக்கியம் தேவையாகும். மெய்யியல், தத்துவம், கலையிலக்கியம் ஆகிய களங்களில் ஓர் அடிப்படைத் தேர்ச்சி அவருக்கு இன்றியமையாதது. அக்களங்களிலுள்ள எல்லா கோணங்களையும் அவர் அறிந்தாகவேண்டும். அப்போதுதான் அவருடைய தேடல் சரியான திசை நோக்கிச் செல்லும்.
இவற்றுள் எல்லாவற்றிலும் ஒருவர் முழுத்தேர்ச்சி அடைய முடியாது. ஓர் எழுத்தாளர் தத்துவ அறிஞர் ஆக முடியாது. வரலாற்றாய்வாளரும் ஆகமுடியாது. அவருடைய களம் இலக்கியம்தான். அதில்தான் முழுமை நோக்கிச் செல்லமுடியும். ஆனால் அவருடைய களமாகிய இலக்கியத்துடன் இணைந்துகொள்ளும் தத்துவம், வரலாறு, அறிவியல் மெய்யியல் ஆகியவற்றில் அவர் அறிமுகம் கொண்டிருக்கவேண்டும். இலக்கியத்தில் தன் தேடலை சரியான படி முன்னெடுக்கத் தேவையான அளவுக்கு தேர்ச்சி.
ஒருவர் தனக்குரிய ஒரு களத்தில் விரிவான கல்வியும், அதனுடன் இணைந்த பிற களங்களில் தேவையான அடிப்படைக் கல்வியும் கொண்டவராக இருப்பதையே முழுமையறிவு என்று சொல்கிறேன். அதை கற்பவர் அக்கல்வியின்போதே உணரலாம். ஒருவரின் ஆர்வம் கலை ஆக இருக்கலாம். ஆனால் தத்துவம் அந்தக் கலைத்தேடலை கூர்மையும் விரிவும் கொண்டதாக ஆக்குவதை அவர் அறியமுடியும். ஆகவேதான் அறிவின் எல்லா தளங்களையும் கற்பிக்கவேண்டும் என எண்ணுகிறோம்
ஒருவர் தன் வாழ்க்கைக்குள் எல்லாவற்றையும் கற்றுத்துறைபோக வேண்டியதில்லை. ‘முடிந்தவரை முன்செல்லுதல்’ மட்டுமே நம் இலக்காக இருக்கவேண்டும். அவ்வளவுதான் நம்மால் முடியும். முன்சென்றவரை நன்மையே என்றே கொள்ளமுடியும்
ஜெ