தூலமும் சூட்சமும்

மதிப்புமிக்க ஜெயக்குமார் சார்,

உங்களுடன் நான் வந்து அனுபவித்த வகுப்பு நிகழ்வுகளையும், என் அனுபவங்களையும் தொகுத்து உங்களுக்கு எழுதுகிறேன்.

தூலமும் சூட்சமும்

சிதம்பரத்திற்கு நான் வந்திருந்தபோது உங்களைக் காண ஆவலாக இருந்தேன். அப்பா, உங்களைப் பற்றியும், சாம்ராஜ் அவர்களைப் பற்றியும் நிறைய கூறியிருக்கிறார்உங்கள் இருவரையும் சந்தித்தப் பிறகு பின் நான் நிறைவடைந்தேன். நீங்கள் சிதம்பரம் கோவிலின் வரலாறை மிகச் சிறப்பாக கூறினீர்கள். கோவில் வழிபாட்டு முறைகளை வகித்தவர்களான வ்யாக்ர பாதர் பதஞ்சலி போன்றோர் பற்றிய வரலாறுகளை நன்று விளக்கினீர்கள். புராண இலக்கியங்களில் த்ரிசஹஸ்ரசம்ஹிதை போன்ற சிதம்பரத்தின் மறுபெயர்களும் அதற்கான காரணங்களும் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. தில்லை வாழ் அந்தணர்களின் கதையும், குஞ்சிதாங்கிரிஸ்தவம் பற்றி தாங்கள் கூறியதும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. தாங்கள் கூறிய மன்னனின் பெயரோ, வருடத்தின் எண்ணோ எனக்கு இன்னமும் ஞாபகம் இல்லை.

ராய கோபுர கோஷ்ட சிற்பங்களை தாங்கள் காட்டும்போது கூறியஆதிஸ்டானம்”, ‘உபபீடம்போன்ற சொற்கள் ஆலயக்கலை வகுப்பிற்கு போக வேண்டும் என்று என்னை எண்ண வைத்தது. ராய கோபுரம் அவ்வளவு சிறப்பு மிக்கதா என்று வியந்தேன்.

நான் முன்பே அப்பாவோடு சிதம்பரம் கோவிலுக்கு வந்திருக்கிறேன், ஆனால் நாங்கள் சித்சபையில் ஏறி சேவித்ததில்லை. நம்மூரில் பெரும்பாலான கோயில்களில் மின் விளக்கை கோவில் விக்ரஹத்தின் மேல் படர விடுகிறார்கள். இது விக்ரஹத்திலிருந்து செயற்கையான ஒளியை கொண்டு வருகிறது. ஆனால் இச்சன்னதியில் விளக்குகள் மட்டுமே இருந்தவை ஆனதால், தெய்வீக ஒளி புறப்பட்டது. இதை இக்கோயிலில் நன்கு உணர்ந்தேன், அருமையான தரிசனம்.

இதற்கு முன்பு பக்கத்து சந்நிதிகளுக்கு சென்றதே இல்லை. சில நேரம் காத்திருந்தாலும் அம்பாள் தரிசனம் அருமையாக இருந்தது. கரணங்கள் என்ற ஒன்று இருந்தது என்று எனக்கு முன்பு தெரியாது. நீங்கள் கூறிய பிறகு தான், அது ஒரு தெய்வீக நடனம் என்று அறிந்தேன். இதற்கு முன்பு இந்த கோயில் சுற்றுவழியாகக் கூட சென்றதில்லை.

விமானத்தில் இருந்த நான்கு தூண்கள் நான்கு வேதம் என்றும், விமானத்தின் மேலிருந்த தகடுகளின் எண், மனிதன் ஒரு நாளுக்கு மூச்சை விடும் எண்; போன்ற தூலமும் அதற்கான உள் காரணமும், என்னை பிரமிக்க வைத்தது.

இரவில், அர்த்த ஜாம பூஜையின் குஞ்சிதபாதம் சந்நிதி விட்டு வெளியே வருவதற்கு என்ன ஆவலோடு இருந்தனர் மக்கள்! அவ்வைபவத்தை கேரளக் கோயில்களில் நடப்பது போலச் செய்தார்கள். குஞ்சிதபாதம் வெளியே வந்து, பல்லக்கில் ஏறி, சுற்றிவிட்டு, பள்ளியறை செல்லும் வரை, ஒரு தெய்வீக சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது!

முந்தைய நாள் திருவரங்கம் சென்றிருந்தோம், அங்கு வீணை ஏகாந்தம் எவ்வளவு அமைதியாக இருந்ததோ, அதற்கு மாறுதலாக (contrast) இருந்தாலும், இது ஒரு மாய அற்புதம்! இரவில் எனக்கு தூக்கமே இல்லை. அடுத்த நாள் கோவிலுக்கு செல்ல ஆவலோடு இருந்தேன். கோவிலில் நீங்கள் நாதாந்த நடனத்தை பற்றி விளக்கிய பொது அது மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது.

ஞான சம்பந்தர் நுழைந்த வாயில் வழியாக சென்றது அமைதியாக இருந்தது. சிதம்பர ரகசியத்தை, தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன். அதை நீங்கள் கூற ஆவலாக இருந்தேன். காலை சுவாமி தரிசனம் செய்வதற்கு முன் நீங்கள் பாடிய பாடல், ‘காண வேண்டாமோஎன்னவாய் இருந்தது! ஊருக்கு வந்து நானும், அமாவும் அதை தினமும்கேட்காத குறை தான்.

தரிசனத்திற்கு பிறகு திருமூலட்டானர் சந்நிதிக்கு போயிருந்த போது தான் புரிந்தது, எவ்வளவு நன்றாய் கோவிலை பராமரிக்கிறார்கள்  என்று. கோவிந்தராஜ பெருமாள், தாயாரை சேவித்துவிட்டு வரும்போது ஒன்று கவனித்தேன், சுவாமி சந்நிதியை விட அம்பாள் சந்நிதிகளில் தான் திரை, பலமுறை சாத்தப்பட்டது. ஸ்படிக லிங்க அபிஷேகத்தை கண்ணாரக் கண்டேன். சிறிதாக, அழகாக இருந்தது அவ்விக்ரகம்.

கோவிலில் உட்கார்ந்து, சிதம்பர கருவறை ரகசியத்தையும், பகவானின் ஆடலில் உள்ள யோகத்தையும், ஐந்தொழிலையும், சிதம்பரம் நமக்குள் எங்கு உள்ளது, எப்படித் தெரியும் என்று நீங்கள் விளக்கிய போது உடன் வந்த நண்பர்கள் (பெரியோர்கள்) உங்களை பிரமிப்புடன் பார்த்து கொண்டிருந்தனர். எனக்கு சற்றே புரியவில்லை என்றாலும் புரிய வைத்துக் கொண்டேன். சிதம்பரம் இவ்வளவு தத்துவார்த்தத்தை கொண்டிருந்ததை கண்டு நான் பிரமித்து விட்டேன். நாம் இவ்வளவு நாள் சென்றது கோவில் இல்லை, வெறும் சந்நிதி என்று புரிந்தது.

சாயங்காலம், மழையில், நாம் சென்றமேலகடம்பூர் கோவில்சிறிதாக இருந்தாலும், நன்றாய் பராமரிக்கப்பட்டிருந்தது. கோவில் சுற்றுப் பிரகாரத்தில் இருந்த கோஷ்ட சிற்பங்களில் அர்த்தனாரி, கங்காதரர் சிற்பம் மிக அழகாக இருந்தது. நாசிகையின் விளக்கங்கள் அருமையாக இருந்தது

பிரதோஷத்திற்கு மட்டும் வெளியே வரும் பழைய வங்க தேசத்து நடராஜர் செப்பு சிலை அங்கு படத்தில் காட்டப்பட்டிருந்தது. நடராஜர் நந்தியின் மேல் நடனம் செய்யும் திருக்கோலம் வித்தியாசமாக இருந்தது. அவருக்கு பக்கவாட்டில் நிறைய தேவர்கள், தேவிகள் கைகூப்பி நிற்கும் அழகிய சிலை அது. நேரில் காணவில்லை என்ற கவலை.

கீழகடம்பூர் கோவிலில் வெறும் சந்நிதி மட்டும் இருந்தது. ஆனால் அங்கிருந்த அர்ச்சகருக்கு தல வரலாறு தெரியவில்லை என்று எனக்கு வெட்கமாக இருந்தது. அங்கிருந்த பிரகார சுவர் கோஷ்ட சிற்பங்கள் இருட்டிலும் அழகாக இருந்தன.

இரவில் சாம்ராஜ் சாரின்தூலமும் சூட்சுமமும்உரை கேட்டு அவரைப் போல பேச வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் வீராணம் ஏரிக்குச் சென்றிருந்த போது, அது எல்லை இல்லாத கடல் போல காட்சி அளித்தது. நம்மாழ்வாரின்கடல் ஞாலம் செய்தேனும்என்ற பாசுரம் நினைவுக்கு வந்தது. கரையோரம் நடந்து வந்தது நல்ல ஒரு அனுபவம்.

லக்ஷ்மி விலாஸ் விட்டுப் போவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. தாங்கள் பாடியபழமுதிர்ச்சோலைமற்றும்தெருவில் வாரானோபாடல் கேட்க இனிமையாக இருந்தது.

கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு நன்றாக கூறினீர்கள். வெளிப்ரகார கோஷ்ட சிற்பங்களான நடராஜர், சக்ரதானமூர்த்தி போன்றோர் மற்றும் கருவறை முன்னிலும் வெளியிலும் சிவபுராண கதைச்சிற்பங்கள் மிக அழகாய் காட்டப்பட்டிருந்தது. உள்ளே இருந்த சிவனும் பார்வதியும் உற்சவர் சிலை வெகு அழகாய் இருந்தது, அதனைப் பார்த்து சாம்ராஜ் சார் அந்த சிலை தற்போது தான் மதியம் சாப்பிட்டு உறக்க நிலைக்கு போகுமாறு உள்ளது என்றார். நான் எனக்குள் சிரித்து கொண்டேன்.

சாம்ராஜ் சார் என்னை இந்த வகுப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு நான்சூப்பர்என்று கூறினேன், அதற்கு அவர் எப்போதுமே ஆங்கில வார்த்தைகளையே உபயோகிக்காதே, தமிழ் சொற்களாலும் வர்ணிக்கத் தெரிய வேண்டும் என்றார்.

அங்கொரு மூலையில் இருந்த சண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தி

சிவன் சடை மற்றும் ஆபரணங்கள் மிக அழகாக நுட்பமாக செதுக்கப்பட்டிருந்தன. அவ்வரசனின் முகம், சாம்ராஜ் சார் கூறியது போல, ‘குருவைக்காண கூசி நின்றேனோஎன்றே இருந்தது. தேவியும் உடன் இருந்தார். ஓர்உபாசனதெய்வத்தை நேரில் காணும் போது வரும் ஆனந்தம் அச்சிலையில் தெரிந்தது. அவ்வரசன் கண்கள், அச்சிலையை சுவைப்படுத்தியது.

சிதைந்த சந்நிதிகளும், சிற்பங்களும் கூட அழகாக இருந்தது. மதியம் சாப்பிட்டு, ஓர் கட்டிடத்தின் அடிவாரத்தையும் கண்டு எனக்கு என்னவோ அச்சிறு செங்கல்களை வைத்து அரண்மனை கட்டியிருக்கவே முடியாது என்று தோன்றியது.

சாம்ராஜ் சாரை விட்டுப் பிரிய மனமில்லை

அஜந்தா & எல்லோரா

அஜந்தா

மிகுந்த ஆவலோடு அஜந்தாவிற்கு கிளம்பினோம். சென்னை விமான நிலையத்தில் பார்கவி, பிரதீப் & திருவேங்கடம் ஆகியோரை சந்தித்தோம். ஹைதராபாத் விமான நிலையத்தில் லலிதா ராகவன் ஆகியோர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். அவுரங்கபாத் விமான நிலையத்தில் திருமலை, திருமூலநாதனும் சேர்ந்து கொண்டார்கள். அஜந்தா MTDCல் பிரதீப் சாருடன் தங்கியிருந்தோம்.

ஏசி பேருந்தில், இரண்டாவது நாள் அஜந்தாவுக்கு போகும்போது, வியென்னா ஸ்ரீராம் அண்ணாவோடு பேசிக்கொண்டு வந்தேன். வியென்னா நகர் எவ்வளவு பழமையானது என்று அவர் கூற, நான் அதை கற்பனை செய்து கொண்டிருந்தேன். மஞ்சரி அக்கா கிணறுகளை சரி செய்வதைப்பற்றி கூறியபோது தான், அது மிகக் கடினமானது என்று புரிந்தது.

மேலே, அஜந்தா, குகை -1ல், வெளிச்சம் இல்லாமல், ஓவியங்களைப் பார்க்கவே முடியவில்லை. அந்த கும்மிருட்டில் எப்படிப் பார்ப்போம் என்று நினைத்தேன். ஒரு டார்ச், அவ்வோவியத்தின் மீது விழுந்த போது, மிக பிரம்மாண்டமாக இருந்தது.

அனைவரும் அவரவர்க்கு அளிக்கப்பட ஜாதகக் கதைகளை சிறப்பாக கூறினார்கள். அவ்வோவியங்களில், பூசப்பட்ட வண்ணங்கள் இன்னமும் அழகாய் தெரிகின்றது. தற்போதைய காலத்தில் வண்ணங்கள் வைத்து வரைந்தால், ஒரு வருடத்தில் மங்கிப் போய்விடுகிறது. அப்படியிருக்க, அவர்கள், இயற்கையைப் பயன்படுத்தி வண்ணம் இட்டிருக்கும்போது கூட அது வெகு காலத்திற்கும் பின்னும் இருக்கிறதே!

குகை -1ல் இருட்டாக இருந்தாலும், அதற்கு கண்கள் பழகிவிட்டது. மாளிகைகள், இயற்கை, மனிதர்கள், விலங்குகள், முகபாவனைகள், ஆடை, அணிகலன்கள் போன்றவை மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

தவிர, ஸ்தூபங்கள், சைத்யங்கள் மற்றும் புத்த பரிநிர்வாண நிலை சிற்பங்களைக் காணும் போது, அது மிக பிரம்மாண்டமாக இருந்தது. ஸ்தூபத்தின் முன் இருந்த புத்தர் அமைதியாக காட்சி அளித்தார்.

குகை-10ல், ஒரு ஜாதக கதை சித்திரத்தை கூட நம்மால் பார்க்க முடியாத அளவிற்கு கீறல்கள். நம் மக்களுக்கு எப்படி அவ்வழகான சித்திரத்தின் மேல் கீறத்தோன்றுகிறது என்று புரியவே இல்லை.

ஜாதக கதைகள், மஹா பிரதிஹார்யம், நந்தா மனமாற்றம், சிம்ஹளா போன்ற கதைகள் பெரிது பெரிதாக, புரியும்படி சித்தரிக்கப்பட்டிருந்தன. ஒரு குகை மண்டபம் எப்படி உருவாக்கினர் என்றும் புரிந்தது. ஒவ்வொரு ஓவியத்திலும் கண்களின் பாவனை மாறிக்கொண்டே இருந்தது

அஜந்தாவில் எனக்கு உங்களுடையமன்னுபுகழ்பாடல், நேரில் கேட்க கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. மற்ற பாடல்களும் இனிமை. திருமூலநாதன், ஸ்ரீராம் அவர்கள் பாடியகண்டேன்பாடல்களும் (மாதர் பிறை, திருக்கண்டேன்) கேட்க நன்றாக இருந்தது. நீங்களும் பார்கவி அவர்களும் சேர்ந்து பாடியது கேட்க புதிய அனுபவமாக இருந்தது. நாம் பாடாதவரைக்கும் நல்லது என்று நினைத்துக்கொண்டேன். பாட சொல்லிவிடுவார்களோ என்ற ஒரே கவலை. நல்லவேளை, பாடச் சொல்லவில்லை.

குகை 17ல் நடந்ததைப்பற்றி எழுத விரும்பவில்லை. அதை நினைத்தால் எனக்கு கோபம் கொந்தளிக்கிறது. உயர் அதிகாரியே இவ்வாறு இருந்தால், பணியாட்கள் பொறுப்புணர்வுடன் இருக்கவே மாட்டார்கள் என்று நினைத்து கொண்டேன். பார்கவி அவர்களுக்கு அவ்வளவு கோபம் வந்து நான் முதன் முதலில் பார்த்தேன்.

குகை 24ல்மிகப் பிரமாண்டமான நாசிகைகள் இருந்தன

எல்லோரா

எல்லோராவில் பல வகையான குடைவரைகள் இருந்தன. ஜெயின மதத்துக் கோயில்கள், பெளத்த சைத்யங்கள், கோயில்கள், மூன்று மாடி சைத்தியங்கள், சிறிய, பெரிய ஹிந்து கோயில்கள் இருந்தன.

கைலாசநாதர் கோயில் முன் நீங்கள் கதை கூறிக் கொண்டிருந்த போது, எப்போது உள்ளே செல்வோம் என்று பரபரப்போடு இருந்தேன். உள்ளே சென்ற போது தான்பிரம்மாண்டமான, உயர்ந்த platformல் இருந்த அவ்விமானதைக் கண்டேன்.

நீங்கள் முதல் நாள் இரவு கோவிலின் விஸ்தீரணம் பற்றி பலமுறைக் கூறிக்கொண்டிருந்த போது நான்இவர் கூறியதை பார்த்தால் கைலாசநாதர் கோவில் மிக பிரம்மாண்டமாக இருக்கும் போலஎன்று நினைத்து கொண்டேன். வண்ணக்கடல் நாவலில், ஷண்முகவேல் அவர்கள் பலமுறை வரைந்திருந்த அரண்மனையைப் போல கற்பனை செய்து கொண்டேன்.

14 வருடங்களில் கோவிலை கட்டி முடித்தார்கள் என்றால் கட்டுமான பணிக்கு நிச்சயம் அதிக அளவிலான சிற்பிகள் இருந்திருக்க வேண்டும். இக்கோவிலை கட்டுவதர்கு முன்பு எப்படி அச்சிற்பிகள் ஒரே மாதிரியான கோவிலை கற்பனை செய்திருப்பார் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. அக்கோவிலின் மிகச்சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளைக் கண்ட பின்பு, இவ்வளவு வேலைப்பாடுகளை மனதில் வைத்துக்கொண்டு எப்படி இதை ஒரே கல்லில் கட்டினர், அதையும் எப்படி ஒத்துழைத்து செய்தனர் என்பது ஒரே ஆச்சரியமாக இருந்தது

நம் வீடுகளில் வாசற்கதவிற்கு மேல்  லக்ஷ்மி (கஜலக்ஷ்மி) எப்படி இருகுமோ, அது போலவே இங்கும் ஒரு மிகப்பெரிய கஜலக்ஷ்மி முன்னே இருந்தது. திரிசூலத்வஜம், மிகப்பெரிய த்வஜஸ்தம்பம் போலக் காட்சியளித்தது.

கருடாரூடர், கங்கையமுனைசரஸ்வதி, சிவபார்வதி பகடையாட்டம், இராவண அனுக்ரஹ மூர்த்தி, சதுரதாண்டவர், மகிஷாசுரமர்த்தினி போன்றோரின் சிற்பங்கள் மிகுதியாக இருந்தாலும், ஒவ்வொரு முறை அதைக் காணும் போதும் புத்துணர்ச்சி தருகிறது. ஒவ்வொரு முறை அதே சிலையில் நுணுக்கம் அதிகமாகிறது.

தவிர, ஒரே மாதிரியான ஜெய்ன, புத்த சிலைகளைப் பார்த்த பின், ஹிந்து குகைகளைக் காணும் போது மகிழ்ச்சி கிளப்புகிறது. ’கனகமுனிஎன்கிற பெயரே ஏதோ நமது சைவ, வைஷ்ணவ ஆச்சாரியர்களின் பெயர் போலவே ஒலிக்கிறது.

அந்த நாள் முடிவில் மலை மீது ஏறி அந்த பெரிய பிரம்மாண்டமான கோவிலை கண்டபோது மனது நிறைவடைந்தது. அந்த விமானத்தின் மேல் இருந்த சிம்மங்களை கண்ட போது, அந்த விமானமே அச்சிங்கங்களின் சண்டைக்களமாக எனக்கு தோன்றியது

அன்று இரவு MTDCல், இரவு இரண்டு மணி வரை அனைவரும் பேசிக்கொண்டு இருந்ததாகக் கேள்விப்பட்டேன். சிரிப்புச் சத்தம் நான் கண்ணயர்ந்த பின்பும் கேட்டது!

அடுத்த நாள் மீண்டும் சென்றோம். சதுரதாண்டவரை, ஈஷானேந்திரர் என்கிறார்கள். ஒரு மன்னன் எப்படி மூன்று மதங்களை பின்பற்ற முடியும் என்று எனக்கு கேள்வி எழுந்தது. விஷ்ணுவின் கதாயுதம் பெயர்கௌமோதகிஎன்று நீங்கள் கூறித்தான் எனக்கு தெரியும்

குகை 31ல் இருந்த சதுரதாண்டவரைக் கண்டு எல்லோரும் அங்கேயே உட்கார்ந்து விட்டனர்! உண்மை தான்! என்னவாய் இருந்தது அந்த விரிசடையும், நடனமும்! பார்கவி அவர்கள் மனமுருகி அச்சிலைக்கு முன்புஆடும் தெய்வம் நீஎன்று பாடிய பாடல் தெய்வீகமாக இருந்தது

ஒரு பாறையில் மூன்று அடுக்கு விஹாரத்தை பார்க்க பிரமாண்டமாய் இருந்தது. வெகுநேரம் சைவ சிலைகளைப் பார்த்துவிட்டு தசாவதார சிலை  கண்ட போது உற்சாகம் பிறந்தது

விமான நிலையத்தில் நாம் பிரியும் போது, உங்களை அணைத்துக் கொண்ட போது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

  • கடைசி வரை எங்களோடு அறை பகிர்ந்து கொண்டு, அவ்வப்போது சிரிப்பு உடைத்த பிரதீப் சபாநாயகம்,
  • தசாவதானி என்றால் என்ன, IIT அலுவகங்களில் வேலைகள் எப்படி இருக்கும், extracurricular எவ்வளவு முக்கியமானது என்று விளக்கிய திருமூலநாதன் 
  • மிருதங்கம் பற்றி விளக்கிய விக்னேஷ்
  • உபாசனா வகுப்பு சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்த குரு, விஜி,
  • வியன்னா ஸ்ரீராம் அண்ணா, மஞ்சரி அக்கா
  • எனக்கு நம்பிக்கை ஊட்டிய முகேஷின் அம்மா, அப்பாவுக்கும் 
  • கலகலவென பேசிக்கொண்டு வந்த நண்பன் விஷ்வா, அவன் தந்தை ராஜா சார்
  • நோட்ஸ் பகிர்ந்த திருமலை, பிரவீணா மேடம், திருவேங்கடம் அவர்கள்
  • சிதம்பரத்தில் உற்ற துணையாக இருந்த மனோஜ், கலைவாணி, அவர்களுக்கும்
  • பிரியும் பொது மூன்று முறை என்னை அணைத்த சாம்ராஜ் சாருக்கும்
  • சிதம்பரத்தில் விளையாட்டு நண்பர்களாக இருந்த கார்த்திகேயன் அவர்களுக்கும், ஆரண்யாவுக்கும்
  • வகுப்பு முழுவதும் பேசாமல், அஜந்தா எல்லோரா முடிந்து, கடைசி நேரத்தில் நான் அறுத்த கேள்விகளுக்கு தயங்காமல் பதில் அளித்த பார்கவி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

உங்கள் அனைவரையும் அடுத்த வகுப்பில் சந்திப்பேன் என்று ஆவலோடு இருக்கிறேன்!

முந்தைய கட்டுரைசாமானியனும் தத்துவக்கேள்வியும்
அடுத்த கட்டுரைஉருது வகுப்புகள், ஞானசேகரன்