அன்புள்ள ஆசிரியருக்கு,
இயல்பாக தத்துவ கேள்விகள் பெரிதாக எழாத ஒருவனுக்கு தத்துவ அறிமுகம் கிடைக்கும் எனில், அதன் பிறகு அந்த அறிமுகத்தினால் அவனுக்கு தத்துவத்தின் மீது ஆர்வம் உருவாக்கி அவன் தத்துவ மாணவனாக வாய்ப்புள்ளதா?
சிபி
அன்புள்ள சிபி,
சுவாரசியமான கேள்வி.
தத்துவக்கேள்வி என்றால் என்ன? அடிப்படையான வாழ்க்கைக்கேள்விகளுக்கு தர்க்கரீதியான அமைப்பை அளிக்கையில் அவை தத்துவக்கேள்வி ஆகின்றன.
அடிப்படைக்கேள்விகள் அனைவரிடமும் உள்ளன. ஆனால் அதற்குரிய தர்க்கம் இருப்பதில்லை. பிறப்பு, சாவு, உறவுபிரிவுகள், வாழ்க்கையின் அர்த்தம் ஆகியவற்றைப் பற்றி கேள்விகள் இல்லாதோர் யார்? ஒரு சாதாரண உரையாடலில்கூட அடிப்படைக்கேள்விகளும், அதற்கான பதிலும் சாமானியர் வாயிலிருந்தே வெளிவருவதைக் காணலாம். “மனுஷன் இன்னிக்கு இருப்பான், நாளைக்கு போயிடுவான்” “ஒண்ணுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை, நாமளே நினைச்சுக்கிட்டாத்தான் உண்டு’ இப்படி எத்தனையோ வரிகளை காதில் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். அவை எல்லாமே அடிப்படைக் கேள்விகள்தான்.
உண்மையில் தத்துவத்தை சந்திக்கும் வரை அவை எளிய வினாக்கள் போல தோன்றுகின்றன. ஏனென்றால் அவை மொத்த வாழ்க்கையையும், மொத்த பிரபஞ்சத்தையும் கருத்தில்கொள்வதில்லை. தன்னை மையமாக்கி, தன் அன்றாடத்தை களமாக்கி அவை எழுகின்றன. தத்துவத்தை அறியத்தொடங்கும்போது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் கேள்விகளை மொத்த மானுடவாழ்க்கைக்கும், மொத்த பிரபஞ்சத்துக்கும் உரியதாக விரிக்கிறோம். அதற்கான தர்க்கபூர்வமான அமைப்பை உருவாக்கிக்கொள்கிறோம். அவை தத்துவக்கேள்விகள் ஆகிவிடுகின்றன.
தத்துவம் உங்களிடமிருக்கும் கேள்விகளை தத்துவக்கேள்விகளாக ஆக்குகிறது.
ஜெ