கசல் பாடல் ஒன்றில், கடலின் ஆழம் அறிவேன், நீயோ அதன் ஒவ்வொரு துளியிலும் ஆழம் காட்டுகிறாய் என்று காதலியிடம் தன்வலி சொல்வதாக அமைந்த தேன் வரிகள் ! தேன் குடுவையின் சுவையை ஒரு துளியில் அறியக்கூடும். கடலின் ஆழத்தை அதன் ஒரு துளியில் அறிய முடியுமா?
நித்யவனத்தில் உருது இலக்கிய அறிமுக வகுப்பில் கடலின் ஆழத்தை துளிகளில் கடத்தி கற்றலின் பேரனுபவத்தை அளித்தார், ஆசிரியர் திரு ஃபயஸ் காதிரி அவர்கள்! உருது இலக்கிய அறிமுக வகுப்பு ஒரு மொழியின் இலக்கியத்தை எவ்வாறு அணுகவேண்டும் என்ற வரையறையை அளித்தது. ஆசிரியர் ஃபயஸ் தனது ஆழ்ந்த மொழிப்புலமை மற்றும் மொழிபெயர்ப்பு அனுபவங்களிலிருந்து தகவல்களை பொறுக்கியளித்து உருது இலக்கியம்குறித்த ஒரு முழுப்பார்வையை கட்டமைத்துச் சென்றார். கூடவே ஜெ அவர்கள் தன் கேள்விகளாலும் குறிப்புகளாலும் அந்தந்தக் காலக்கட்டத்தின் இந்திய மற்றும் ஆங்கில இலக்கியத்தையும் கோடிட்டுக் காட்டி கொண்டே வந்தார்
இம்மொழியின் மேல் உள்ள ஈர்ப்பு எதனால் என்பதை முதல்வகுப்பிலேயே ஆசிரியர் உணர்த்தினார். உருது மொழியில் ‘ஹ‘ என்ற எழுத்து மொழிக்கு ஒரு மென்மை தன்மையும் இசை தன்மையும் அளிப்பது. ஷம்மி–பர்வானா , ஆமத் –ஆவர்தன், தரன்ணும் –தெஹத் , கியாஃபியா –றதீப்ஃ, மாட்லா –மக்தா –எத்தனையெத்தனை இனிமை நிறைந்த வார்த்தைகள், இசை கூடிய வாக்கியங்கள் !
மொழி அறிஞர் ஃபயாஸ் ஒரு ஓவியர், வளமான குலைந்த இசைக்கலைஞர். உருது மொழியின் எழுத்து உருவாக்கத்தை வரைந்து காட்டியும், கஜல் பாடல்களை பாடி காட்டியும் , வகுப்பை முற்றிலும் வேறு ஒரு நிலைக்கு கொண்டு சென்றார்.மென்மையான குரலில் அவ்வப்போது இடைநிறுத்தி தன் நினைவுகளை தொகுத்துக் கொண்டு வகுப்பை நடத்திச் சென்ற விதம் அனைவரையும் சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டது.
மொழியின் வரலாறு தொடங்கி கவிதை, உரைநடை, புதினம்,திறனாய்வு, சிறுகதை என இலக்கிய வடிவங்களை தொட்டுச்சென்று ஒவ்வொரு பகுதியிலும் முக்கியமான இலக்கிய ஆளுமைகளை காலவரிசைப்படி அறிமுகப்படுத்தி சென்றார். இலக்கியம் உருவாகிவந்த காலகட்டத்துடன் பண்பாடு மற்றும் அரசியல் பின்புலத்தையும் இணைத்து விளக்கிச்சென்ற விதத்தால் ஆர்வம் குறையாமல் வகுப்பில் ஈடுபாடு கொள்ள முடிந்தது.
வகுப்பின் மூன்று நாட்களிலும் இலக்கியத்தின் இரு ஷாஹீன் (ராஜாளி) பறவைகளின் உயர்விசையில் இழுக்கப்பட்ட சிறுபறவைகள் என மிதந்து கொண்டே இருந்தோம் ! கடலூர் சீனு தனது நன்றியுரையில் கூறியதுபோல அவரவர் மொழியறிவு நிலைக்கேற்ப ஆசிரியர் சொன்னவற்றை தொகுத்துக் கொள்ள முடிந்தது.
அடுத்தடுத்த வகுப்புகளில் காலீபின் இசைமனதின் ஊடாகவும் அல்லாமா இக்பால் அவர்களின் உன்னத இலக்கிய உலகின் வழியாகவும் ஆசிரியருடன் உலவ போகும் நாட்களுக்காக ஏங்கத் தொடங்கிவிட்டது மனம்!
ஜீவா சக்தி