கதையும் ஞானமும்

மெய்ஞானமும் இன்றைய ஞானமும்

அன்புள்ள ஜெ

ஆர். ராமநாதன் அவர்களின் கடிதத்தை வாசித்தேன். அவர் கூறியதுபோலநம் ஆன்மிக குருக்கள் சொல்வது வேறொரு உலகிலுள்ளது. நீங்கள் அறிவியலும் நவீனச்சிந்தனையும் கற்ற ஒருவனின் தர்க்கத்துக்கு உகந்த முறையின் நம்முடைய தொன்மையான மெய்ஞானத்தைச் சொல்கிறீர்கள் — என் மனநிலையும் அதுவே.

என் எண்ணம் என்னவென்றால்:

ஒரு வாசகன் கூர்ந்து வாசித்தால் அவர் எழுத்தாளனுக்குச் சஹ்ருதயன் ஆகிறார். ஒரு நல்ல சஹ்ருதயன் தான் ஒரு சிறந்த எழுத்தாளனையும் அறிந்து கொள்ள முடியும்.அந்த எழுத்தாளன் தத்துவ தளத்தில் நின்று பேசும்போது படைப்பாளியாகிறார். படைக்கும் வல்லமையால் அவர் வெறும் எழுத்தாளன் அல்ல, பல கலைகளின் அனுபவத்தையும் ஞானத்தையும் ஏந்தும் கலைஞன் ஆகிறார். கலைஞன் கனியும் போது ஞானியாகிறார்.

எனக்கு தனிப்பட்ட முறையில் — வெண்முரசுவிஷ்ணுபுரம் போன்ற படைப்புகளை வாசிக்கும் போது வரும் அனுபவ நிலைகளுக்கும்கீதையை அறிதல்தன்மீட்சி போன்ற உங்கள் ஆன்மிக நூல்களை வாசிக்கும் போது வரும் அனுபவத்துக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. முதலாவது வாசிப்புகள் என்னை ஆழ்ந்த உணர்வுகளுக்குள் இழுத்துச் செல்கின்றன. ஆனால் இரண்டாவது வகை — கீதையை அறிதல் போன்றவைஎன்னை உணர்வுக்கு அப்பால், சொற்கள் இல்லாத மௌனத்திற்குள் இட்டுச் செல்கின்றன.

அது ஏன் எனக்குப் புலப்படவில்லை.அந்த எழுத்தாளர் கனிந்து ஞானியாகி, சொற்களைக் கடந்த மௌனத்தையே ஞானமாக அளிப்பதால் தானோ? அல்லது நான் ஒரு நல்ல இலக்கியவாசகன் அல்லாததால் தானோ?

எனினும், என் மனதில் பதிந்திருப்பது ஒன்று தான்: உங்கள் ஆன்மிக நூல்கள் என்னை உருமாற்றின. எழுத்தாளர் என்ற வரம்பைத் தாண்டி, ஞானத்தின் குரலாக என் உள்ளத்தில் வாழ்கிறீர்கள்.

உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்.

ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்,

நம் இலக்கியங்களை புராணங்களுடன் ஒப்பிடலாம். தத்துவ நூல்களை மெய்ஞானநூல்களுடன் ஒப்பிடலாம். பாகவதம் வேறு கீதை வேறு. பாகவதம் கதை, ஆகவே எப்படியோ அது உலகியலுடன் தொடர்புகொண்டுள்ளது. கீதை தூயதத்துவம், உலகியலுக்கு அப்பாலுள்ளது.

ஓர் இணைப்புச்சரடை உருவகியுங்கள். உலகியல் -மெய்ஞானம் என இரண்டு புள்ளிகள். பாகவதம் அந்த இணைப்புச் சரடில் உலகியலுக்கு அணுக்கமாக மெய்ஞானம் நோக்கிச் செல்வதாக உள்ளது. கீதை மெய்ஞானத்துக்கு அணுக்கமாக, உலகியலில் இருந்து வந்ததாக உள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரையோகப்பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரைதொல் ஆன்மிகம், கடிதம்