எவருக்கான வகுப்புகள்?

 

அன்புள்ள ஜெ

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நீங்கள் நடத்துவதுபோன்ற நேரடியான வகுப்புகளுக்கு என்ன பயன்? நேரடியாக அவ்வளவுதூரம் பயணப்பட்டு வந்தே ஆகவேண்டும் என்பது சரியானதா? எனக்கு அது தேவையற்ற அலைச்சல் என்று படுகிறது. தப்பாக நினைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

மதன் அருணாசலம்

 

அன்புள்ள மதன்,

இலக்கியத்தை அல்லது கலைகளை புரிந்து கொள்வதற்கும், இயற்றுவதற்கும் அதற்கான பயிற்சி அவசியமாகிறது. நல்ல ரசிகனும் வாசகனுமே நல்ல கலைஞனும் எழுத்தாளனும் ஆக முடியும்.

இரண்டு வகையிலேயே அப்ப பயிற்சி நிகழ முடியும் .ஒன்று தொடர்ச்சியான கூர்ந்த வாசிப்பின் வழியாக. அரிதான தனித்தன்மை கொண்டவர்கள் அந்த வாசிப்பின் வழியாகவே தங்கள் தனித்தன்மையை கண்டடையவும், திறனை பெருக்கிக் கொள்ளவும் முடியும் .ஆனால் பல சமயம் மிக எளிதான ஒன்றை அவர்கள் கண்டடைவதற்கு நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருக்கும். சில சமயம் மிக அடிப்படையான ஒன்றை கண்டடையாமலேயே போய்விடக்கூடும். தவறான சில புரிதல்கள் நீண்டகாலம் களையப்படாமலேயே இருந்துவிடவும் வாய்ப்புண்டு.

முன்னோடிகளிடமிருந்து கற்றுக் கொள்வதென்பது இரண்டாவது வழி. அதுவே மனிதகுலம் தோன்றிய காலம் முதல் முதன்மையாக இருந்து வந்தது. ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்வது. மிக எளிய ஆனால் அடிப்படையான சில விஷயங்களை நாம் ஒருவேளை நமது அனுபவத்தின் ஊடாக அல்லது வாசிப்பினூடாக கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும், ஏனனில் அந்த அறிதல் ஒரு தற்செயல்தான் .ஓர் ஆசிரியர் அவர் வரைக்கும் வந்தடைந்த ஒரு மரபின் ஞானத்தை நமக்கு கற்பிக்கிறார். அது முழுமையானது, அனுபவம் சார்ந்தது .ஒர் ஆசிரியரை நாம் அடையும் போது பல்லாயிரம் பேரின் தனி அனுபவங்களை சிந்தனைகளை அடைகிறோம்

 ஆகவே தான் நேர் தொகுப்புகள் அவ்வளவு முக்கியமாக ஆகின்றன. நேர் வகுப்புகளில் ஆசிரியரிடம் இருந்து கற்றுக் கொள்வது என்பது அவருடன் உறைந்து மட்டுமே சாத்தியமாகும் .அவருடைய எல்லா சொற்களும் முக்கியமானவை .சொற்களை இணைக்கும் உணர்ச்சிகள் முக்கியமானவை. அவருடைய சிந்தனைகள் அவரில் இயல்பாகத் தோன்றும் முறை முக்கியமானது .எவ்வாறு அவர் சொற்றொடர்களை எடுக்கிறார், தொடுக்கிறார், முன்வைக்கிறார் என்பது முக்கியமானது. ஓர் எண்ணத்திலிருந்து இன்னொரு எண்ணத்திற்கு அவர் எவ்வாறு தாவுகிறார் என்பது முக்கியமானது .அதாவது சிந்தனைகளை அல்ல சிந்திப்பதையே நாம் ஆசிரியரிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம்.

அவ்வாறு தனிப்பட்ட முறையில் ஒரு ஆசிரியரை சந்தித்து அவருடன் உறைந்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு  அமைவது மிக அரிது. நவீன வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொருவரும் எதற்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டகட்டத்தில் தனக்கான ஆசிரியர் என்பது அனேகமாகச் சாத்தியமற்றது. ஆகவேதான் உலகம் எங்கும் பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைக்கிறார்கள்.வெளிநாட்டு பல்கலைக் கழக்ங்களில் அநேகமாக எல்லா நாளும் வெவ்வேறு கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் அப்படிப்பட்ட கலைவகுப்புகள் இல்லை என்பதற்காகவே முழுமையறிவு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அவர்கள் பங்கு எடுப்பவர்கள் அவற்றின் பயனை ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

உங்களுக்கு அந்த வகுப்புகள் பயனற்றவை என்று தோன்றுகின்றது என்றால் உங்களுக்கு அவை தேவை இல்லை. உங்கள் அவசரமான வாழ்க்கையில், அந்த அவசரத்தினூடாக என்ன கிடைக்கிறதோ அதுவே உங்களுக்குரியது. ஆனால் சிலர் அவசர வாழ்க்கையில் இருந்து விலகி சிலவற்றை கற்க விரும்புவார்கள். மிகச்சிலர். அவர்களுக்குரியவையே இந்த வகுப்புகள்.

ஜெ

முந்தைய கட்டுரைவரலாற்றில் ஓர் இடம்