அன்புள்ள ஜெயமோகன்,
முழுமையறிவு நிகழ்ச்சிகளில் எப்போதுமே ஒன்றை இயற்கையை ஒட்டி, இயைந்து கற்றுக்கொள்ளுதல் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இன்றைய வாழ்க்கையே உண்மையில் இயற்கையில் இருந்து விலகிச் செல்வதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளின் மக்கள்தொகையில் பாதிப்பங்கினர் அங்குள்ள நகரங்களிலேயே வாழ்கிறார்கள். இயற்கையுடன் அவர்களுக்கு தொடர்பே இல்லை. நவீன நாகரீகத்தின் வழிமுறையே உண்மையில் அதுதான். இயற்கையுடனான தொடர்பு திட்டமிட்டு தடுக்கப்பட்டு ஒரு பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது.
இயற்கையுடன் தொடர்பை நாமே திட்டமிட்டு நேரம் ஒதுக்கி அடைந்தால்தான் உண்டு. இயற்கையையே ஓர் ஆடம்பரமாக மாற்றிவிட்டார்கள். இயற்கையுடன் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்பவர்கள் கீழ்த்தள மக்களும் நடுத்தர வாழ்க்கைவாழும் மக்களும்தான். இயற்கையின் உறவிற்காக தேடி போகும் அளவுக்கு பொருளியல் சூழல் இன்று நகரத்தில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. அவ்வாறு அவர்கள் சென்றாலும் கூட அவர்கள் செல்லும் இடமும் ஏற்கனவே வணிகமயம் ஆக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊட்டி சென்றிருந்தபோது அங்கு சென்னையை விட மோசமான கடைகளும் நெரிசலும் அழுக்கும் குப்பையும் ஓசையும் நிறைந்திருப்பதைக் கண்டோம்.
மொத்தமாகவே இன்றைய வாழ்க்கை சூழல் இயற்கையுடன் இருப்பதை தடுக்கும் விதமாக உள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி. அந்த மாபெரும் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதற்குள் நாம் ஒரு ஓட்டையை போட்டு அப்பால் செல்வதைத்தான் நாம் இந்த காலத்தில் பேச வேண்டியுள்ளது.
சரவணன் ஆறுமுகம்











