வைணவ வகுப்புகள் எதைப்பற்றி…

அன்புள்ள ஜெ

நாலாயிரத் திவ்ய பிரபந்த வகுப்புகள் முழுமையறிவு அமைப்பில் நிகழும் செய்தியை அறிந்தேன். அவற்றின் பாடத்திட்டம் என்ன?

அரிபரந்தாமன்

அன்புள்ள அரி,

நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றிய கல்வியை நாங்கள் எங்கள் முழுமையறிவு வகுப்புகளில் அளிக்கிறோம். ஜா.ராஜகோபாலன் அதை நடத்துகிறார்

தமிழில் ஒரு மத்லாக வைணவர்களால் பரவலாக கருதப்படுவது, ஆலயங்களில் வழிபாட்டுக்குரிய மந்திரமாக இருப்பது நாலாயிர திவ்ய பிரபந்தம். ஆனால் தமிழில் மிகக் குறைவாகவே இந்நூல் படிக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு உண்மை. பள்ளிப் புத்தகங்களுக்கு பிறகு தமிழகத்தில் பெரும்பான்மையினர் எந்நிலையிலும் இதில் எந்த பாடலையும் படிப்பதில்லை. தங்களுடைய சிறிய மத வட்டத்திற்கு வெளியே அதைக் கொண்டு செல்வதில் இங்குள்ள வைணவர்களுக்கும் பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால் தமிழகத்தின் பண்பாட்டு சொத்து என்று  திவ்ய பிரபந்தத்தை சொல்ல முடியும். அறியப்படாத செல்வம். கையருகே இருக்கும் வைரப்புதையல்.

பிரபந்தம் போன்ற ஒரு படைப்பு வேறொரு மொழியில் இருந்திருந்தால் அந்த மொழியின் முதன்மையான பெரும் படைப்பாகவும், அந்த பண்பாட்டின் முதன்மை ஆவணமாகவும் திகழ்ந்திருக்கும். ஆனால் அதனுடன் ஒப்பிடத்தக்க கம்பராமாயணம் போன்ற படைப்புகள் தமிழில் உள்ளன .சங்க இலக்கியத்தை ஒரு நூலாக எடுத்துக் கொண்டால் அது இவை அனைத்தையும் விட மேலானது. இந்த பெரும் பரப்பில் அமைந்திருப்பதனால் நாலாயிர திவ்ய பிரபந்தம் போதுமான அளவுக்கு கவனிக்கப்படுவதில்லை என்பது ஒரு பக்கம்.இன்னொரு பக்கம் நாலாயிர திவ்ய பிரபந்தம் இந்தப் பரம்பரத்தின் ஒரு பகுதியாய் இருப்பதனாலேயே ஆழ்ந்த பொருளை அளிப்பதாகவும் உள்ளது.

இந்த இரு நிலையைதான் இன்று நாம் கற்பிக்க வேண்டி இருக்கிறது. நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் அரிதான தன்மையையும், கூடவே அது தமிழ் பண்பாட்டின்  ஒரு பிரிக்க முடியாத பகுதியாக அமைந்திருப்பதையும் சொல்லவேண்டியுள்ளது

இன்னொன்று, ஒரு பேரிலக்கியத்தை அதனுடன் இணைந்த தத்துவ உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாமல் அணுகவே முடியாது. உணர்வு நிலையாக மட்டுமே நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அணுகும் பக்தர்கள் அந்த பெரும் நூலை தவற விடுகிறார்கள் .

மூன்று படிகளாக நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் தரிசனக் கட்டமைப்பு உள்ளது .

  • ஒன்று அது சங்க காலம் முதல் தொடங்கி வளர்ந்து வந்த அகத்துறை அழகியலையும் தரிசனத்தையும் தன்னில் கொண்டுள்ளது.
  • இரண்டு இந்திய அளவில் உருவாகி வந்த வைணவ மதமரபின் தமிழ் பண்பாட்டு கிளையாக இங்கிருக்கும் பல தெய்வ உருவங்களை இணைத்துக் கொண்டு  தமிழ் வைணவம் உருவாகி வந்த போது அதன் முதல் நூலாக அந்த அமைந்திருக்கிறது.  தமிழ் பக்தி இயக்கத்தின் பெருங்கொடை அது.த
  • மூன்றாவதாக இராமானுஜருக்கு பிறகு அது தமிழகத்தின் முதன்மையான தத்துவக் கொள்கைகளில் ஒன்றாகிய விசிஷ்டாத்வைதத்தின் மூல நூலாக மாறியது. விசிஷ்டாத்வைத் நோக்கில் தொடர்ந்து அது மறு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த மூன்று நிலைகளிலும் பயிலும்போதே உண்மையில் பிரபந்தத்தின் அழகையும் வீச்சையும் நாம் அடைய முடியும். அதை கற்பிப்பது என்பது இன்று மதம் சார்ந்த அமைப்புகளில் சாத்தியம் இல்லை. ஒரு மதம் சார்ந்த அமைப்பு மதம் சார்ந்த கொள்கையைத்தான் கற்பிக்க முடியும். ஒட்டுமொத்த பார்வையை அளிப்பதற்கு ஒரு நவீன வாசிப்பு தேவை.

நவீன வாசிப்பு என்பது வரலாற்று பின்னணியையும் உலக- இந்திய- தமிழ் செவ்வியில் சார்ந்த பின்னணியும் கொண்டது .தமிழில் நாலாயிரத்திவ்தய பிரபந்தத்தை கம்பராமாயணத்துடன், சங்க இலக்கியத்துடன் இணைக்காமல் ஒருவர் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. அந்த விரிவான பார்வை அளிப்பதற்குத்தான் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன

முந்தைய கட்டுரைஏன் திரைப்படப் பயிற்சி?