சிறுவர்கள், தாவரங்கள்

 அன்புள்ள ஆசிரியருக்கு

கற்பூரவள்ளியைகாப்பாலவள்ளிஎன்று வாயில் விரல் வைத்தபடி மழலை மொழி பேசும் குழந்தைகள் முதல், இவர்களுடன் சேர்ந்து சிறியவர்கள் ஆகிப் போன பெரியவர்கள் வரை தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்டோம்

இந்த முறை பனி அதிகம். அதோடு கடும் குளிர் காற்று. அந்த காலை வேலையில் ஆறரை மணிக்கு எல்லாம், சிறுவர்கள் ஆங்காங்கே குழுமி பறவை பார்த்துக் கொண்டிருந்தனர். பறவைகளின் அடையாளங்களை சொல்லி அவற்றின் பெயர்களை செயலிகளில் தேடிக் கொண்டிருந்தனர். இதுவா? அதுவா? இது இல்லை, அது இல்லை என்றபின் ஒரு முடிவுக்கு வருகின்றனர். பல முறை சந்தித்துக் கொண்டவர்கள் போல சிலர் இருந்தார்கள்.

ஆனால் அங்கு வந்த பிறகு தான் அவர்களைத் தெரியும் என்றனர். இப்படி ஒரு நட்புவட்டம் சிறிய வயதில் அமைவதைப் பார்க்க மகிழ்ச்சி அளித்தது. இவர்களின் பெற்றோர்களும் நண்பர்களாகி ஒன்றாக பயணம் செய்கின்றனர்.

தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் லோகமாதேவி, ஆலமரத்தடியில் இருந்தபடி

முதலில் ஆலமரம் அரசமரம் குறித்து அறிமுகங்களை சொல்லி வகுப்பை துவங்கினார். பின்னர்,

தாவரங்களின்பால் பொதுவாக இருக்கும் குருட்டுத் தன்மையை சுட்டிக்காட்டினார். ஆனால், அடுத்தடுத்த அமர்வில் தாவரங்களைக் கூர்ந்து கவனிக்க, அவற்றின் அமைப்பை அவதானிக்க கண்கள் பழகின

செங்காந்தள் மலரை பலமுறை கண்டிருந்தும், அதன் இலை நுனி சுருள் அழகை இம்முறை தான் கண்டேன். அவ்வளவு பெரிய ஆலமரம் ஒரு ஒட்டிவளரி ( epiphyte – grows non parasitically on other plant) என்றதெல்லாம் மிகுந்த ஆச்சர்யம் அளித்தது. ஆனால் அது அதன் கீழ் பிற செடிகளை வளர விடுவதில்லை

மலர்களின் நிறம், இதழ்களின் அமைப்பு, இலைகளின் வடிவம், வேர்களின் வடிவம், அதை சுற்றி வாழும் பிற உயிர்கள் ஒரு மொழி போலவே தங்களைக் குறித்து சொல்கின்றன.

ஒரு சூழலில் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்வியலுக்கு கொண்டுள்ள பரிணாமத் தேர்வுகள் எப்போதும் எனக்கு வியப்புக்குள்ளாகவது. அந்த உயிர்விசையை உணர முடியும். அந்த பார்வையை  விரித்துக் கொள்ளவும் நாம் வாழும் இடம் குறித்து அறிந்து கொள்ளவும் இந்த வகுப்பு எனக்கு ஒரு நல்ல துவக்கம். மேலும் இந்த வகுப்பில், உணவு பழக்கங்கள், வீட்டு மருத்துவங்கள் அவை சார்ந்த வதந்திகள் பெண் அறிவியலாளர்கள் எதிர் கொண்ட சிக்கல்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி இருந்தார்.

ஆசிரியர் லோகமாதேவி அவர்களுக்கு தாவரங்களின் பேரில் இருக்கும் அக்கறையும் ஆர்வமும் அவரை அறிந்த எல்லோருக்கும் தெரிந்ததுஎனினும் இந்த வகுப்பில்  அவர் மேல் மிகுந்த மரியாதை கூடியது. தான் நம்பும் ஒன்றின் பொருட்டு தன் முழு வாழ்வையும் அதை ஒட்டி அமைத்துக் கொண்டிருக்கிறார்.

செடிகளுக்காக காவல் நிலையம் செல்வது, வீட்டில் ஒரு சாரை பாம்பை அடிக்காமல்  விட்டுவைத்திருப்பது எல்லாம் நம்பவே முடியாதபடி இருந்தது.

வகுப்பில் குழந்தைகள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தனர். நாம் எண்ணி பார்க்காத வகையில் கேள்விகள் வந்தன. பெற்றோர்களே போதும் விடுடா என்றபோதிலும், ஆசிரியர் தொடர்ந்து பதில் அளித்து வந்தார். குழந்தைகளும் வகுப்பை கவனித்து தாங்கள் சிந்திப்பதை ஆசிரியரிடம் தான் சொல்கிறார்கள். அவர்களை கொஞ்சிக் கொஞ்சிக் பேசுவதில் அவர்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை. என்னடா சொன்ன எனக்கும் சொல்லேன் என்றால் என்னை மேலும் கீழும் பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களை அறிஞரிடம் தான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறார்கள்அவர்களை குழந்தைகள் போல் அல்லாமல் அந்த சிந்தனையை மதித்து பேசுவதை விரும்புகிறார்கள். இவர்களுடன் இருந்தது ஒரு மலர்வனத்தில் இருந்தது போல இருந்தது.

சிறியவர்கள் ஆன பெரியவர்கள், அணிகளாக சென்று தாவரங்களைத் தேடி சாகசங்கள் செய்தோம். எங்கள் அணிக்கு இன்னும் கொஞ்சம் மதிப்பெண் அளித்து இருக்கலாம் என்று வாதிட்டோம். தாவரங்களோடு அவரவருக்கு இருந்த கதைகளை பகிர்ந்து கொண்டோம்.

வகுப்பு முடியும் நேரம், முன் வரிசையில் ஒரு குரல் வந்தது.

” Mam, I will try to save the Earth”

“Please do”, என்றார் ஆசிரியர்.

சில பெற்றோர்கள், சிறுவர்கள் மேற்படிப்புக்கு தாவரவியலை தேர்ந்தெடுப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தனர்.

அவ்வபோது உங்களையும் உங்கள் கனவுகளையும் நினைத்துக் கொண்டேன்

நன்றி,

சரண்யா

முந்தைய கட்டுரைஅறிவதிகாரம்- கடிதம்