General பொற்திரை, சக்திவேல்

பொற்திரை, சக்திவேல்

அன்புள்ள ஜெ 

இம்முறை மூன்றாம் தத்துவ வகுப்பில் உபநிடத விளக்கம் என் தேடலில் சில தெளிவுகளை ஏற்படுத்தியது. வகுப்பில் நடத்தப்பட்ட ஈஸோவாஸ்ய உபநிடத மந்திரங்களில் சில மனதில் எழுந்து கொண்டே இருந்தன.

நேற்றிரவு கோயம்புத்தூர்சில்ச்சார் விரைவு ரயிலில் பயணித்து காலை வீடடைந்தேன். வாரத்திற்கு ஒருமுறை அஸாம் செல்லும் இந்த ரயிலில் பெருங்கூட்டம். ஸ்லீப்பர் கோச் முழுக்கவே பொதுபெட்டி போல நெரிசல். கீழ் இருக்கையில் மட்டும் ஆறு பேர் அமர்ந்திருந்தார்கள். அப்பா, என்னை நடு இருக்கையில் படுக்க வைத்தார். நடைபாதை, வாயில் என்று எங்கும் தேன் பிசின் மேல் ஈ போல மனிதர்கள் ஒருவரொடொருவர் உரசி கொண்டு நின்றும் அமர்ந்தும் பயணித்து கொண்டிருந்தனர். இரவில் நல்ல தூக்கம் இல்லை. யாரோ ஒரு பெண் என் கால் மேல் தன் பொதி மூட்டையை வைத்திருந்தார். அந்த கணம், அப்பெட்டியில் முன்பதிவில்லாமல் ஏறியவர்கள் அனைவர் மீதும் கடும் ஒவ்வாமை கொண்டேன். அப்போது அந்த வரி எழுந்து வந்து அணைத்து கொண்டது.

அனைத்துயிர்களையும் தன் ஆத்மாவிலும்

ஆத்மாவில் அனைத்துயிர்களையும்

என்று நான்கு சொற்களாக என்னருகே ஒரு ஆறுதல் கரம் நீண்டது. படுத்த நிலையிலேயே என் பார்வை எட்டும் தொலைவு வரை முகங்களை பார்த்து கொண்டிருந்தேன். என்னை போலவே, களைத்த, சோர்வுற்ற, உறக்கத்தின் விளிம்பில் ஊசலாடி கொண்டிருக்கும் முகங்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் சொந்த நிலம் நோக்கி தாகத்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள். என் பயணத்தை போலவே தங்கள் விருப்பத்தை நோக்கி நகர்பவர்கள். அதன் தவிர்க்க முடியாத இடர்களில் என்னை போலவே சிரமப்படுகிறவர்கள். என்னிலிருந்து அவர்களும் அவர்களில் இருந்து நானும் வேறுபட்டோர் அல்ல. என் ஒவ்வாமை மெல்ல தரையிறங்கியது. அவ்வரியை நோக்கி சென்று கொண்டிருந்தேன். உடன் எழுந்தது,

பொற்பட்டுத்திரையால் மூடப்பட்டுள்ளது 

உண்மையின் முகம் 

என்ற வரி. மலை மேல் அமர்ந்து அன்புள்ளம் கொண்ட ஆசிரியர் நாவில் இருந்து இச்சொற்களை கேட்பது ஒரு பொற்தருணம். ஆனால் அந்த திரையின் மறைவில் மெய்நாடி சந்திக்க காத்திருக்கிறது உண்மையின் முகம். உச்சி நுனையின் அமைதியில் மட்டுமல்ல, சமவெளியின் சுட்டெரிக்கும் செம்புழுதிக்கு நடுவிலும் சமநிலையில் இருப்பதே மெய்மை. உபநிடதம் கூறும் மெய்ஞ்ஞானம் எத்தனை அரியது என்பதன் ஒரு கீற்று அனுபவமாக அமைந்தது நேற்றிரவு பயணம்.  

அறிவுரைகள் அல்ல, ஆனால் மந்திரமாகும் கவிதை, நம் அனுபவத்தின் பகுதியாக, நாமாகிறது. இது ஒரு தொடக்கம். அகப்பயணத்தின் முதற்புலரியின் மிக மெல்லிய ஒளியை உணர முடிகிறது

அன்புடன் 

சக்திவேல் 

முந்தைய கட்டுரைஓவிய அறிமுகப் பயிற்சி- வடிவமைப்புப் பயிற்சி