
அன்பின் ஜெ,
இந்த வருடப் பொங்கல் விடுமுறையில், பறவை பார்த்தல் வகுப்புகளில் கலந்து கொண்டேன். மனைவி மற்றும் மகளுடன் (சமிக்ஷா – பத்து வயது) வந்திருந்தேன். இந்த மே மாதம் தாவர அறிமுக வகுப்புகளிலும் பங்கேற்க முடிந்தது. சென்ற முறை வரமுடியாத என் மகனும் (ஸ்வனிக் – பதினைந்து வயது) இந்த வகுப்பில் எங்களுடன் இணைந்து கொண்டான்.
வியாழன் மதியம் சென்னையிலிருந்து காரில் கிளம்பி, ஈரோடு சென்று, அங்கே ஒரு விடுதியில் இரவு தங்கினோம். வெள்ளி காலை நித்யவனம் சென்றடைந்தோம். சிக்னல் இல்லாத, அறிமுகமில்லாத காட்டுவழியில் வரும் பதற்றம் ஏதும் இந்தத் தடவை இல்லை. ஏற்கனவே வந்திருக்கிறோம் என்ற பழக்கம்.
முதல் முறையும் எங்களுக்குச் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. முழுமையறிவு அமைப்பு கொடுக்கும் வழிக் குறிப்புகள் மிகத் தெளிவானவை. அந்தியூர் ஃபாரஸ்ட் செக் போஸ்ட் முதல் கூரை வேய்ந்த நந்தி சிலை வரை குழப்பமில்லாத விவரிப்பு. கூகுள் ஆஃப்லைன் மேப்ஸ் எனக்கு வேலை செய்தது என்றாலும், அது இல்லாமலும் எளிதாக வந்திருக்க முடியும்.

நித்யவனம் வருவதற்கு என்று ஒரு பழகிய வழிமுறை இப்பொழுது அமைந்துவிட்டது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு வகுப்பு என்ற அளவிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். அடுத்த முறை இரயிலில் வந்து பார்க்க வேண்டும்.
இந்த மூன்று நாள் வகுப்புகளின் மூலம், தாவரவியலில் ஒரு மிகச் சிறந்த அறிமுகத்தைப் பேராசிரியர் லோகமாதேவி எங்களுக்கு அளித்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி.
முதல் வகுப்பு ஆலமரத்தடியில் உற்சாகமாக ஆரம்பித்தது. ஆலமரமும் அத்திக் குளவியும் இணைந்து பரவி வாழும் விதம் ஆச்சர்யமூட்டியது. அதிலிருந்து தொடங்கி, அனைத்து வகுப்புகளும் சற்றும் தொய்வின்றி நிகழ்ந்தன.
இந்த வகுப்புகளுக்குப் பிறகு, ‘Plant Blindness’ பற்றிய அவசியமான விழிப்புணர்வு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்பொழுது வெளியில் செல்லும்போது, இதைத் தெளிவாக உணர முடிகிறது. மரம், செடி, கொடிகளைக் கவனிக்கும் கண்கள் எங்களுக்கு அமைந்திருக்கின்றன.
பள்ளிக் காலத்துக்குப் பிறகு மகரந்தப் பரவல் பற்றி நான் யோசித்ததேயில்லை. இந்த வகுப்புகளில் அதைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டபோது, உயிர்களுடைய ‘பரவி நிறையும் விழைவு‘ பற்றி தீவிரமான சிந்தனைகள் ஏற்பட்டன.
என்ன பிரச்சனை வந்தாலும், மரம் அதே இடத்தில் நின்று சமாளிக்கிறது. மேலும் கீழும் நீரோட்டம் இருந்தாலும், எங்கேயாவது பிய்த்தால், எந்தச் செடியிலிருந்தும் திரவம் கொட்டுவதில்லை. இப்படிக் கற்றுக் கொண்ட பல விஷயங்கள் பெரிதும் யோசிக்கச் செய்தன.
ஒரு வகுப்பு இடைவேளையில் ‘சொல்லுங்க. மரம் பெரிசா, மனுஷன் பெரிசா?’ என்று ஒரு நண்பர் குழந்தைகளிடம் விளையாட்டாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இயற்கையைப் பற்றி மேலும் அறியும் தோறும் மனிதன் எவ்வளவு சாதாரணமானவன் என்று எண்ணம் ஏற்படத்தான் செய்கிறது.
வெள்ளி இரவு தாவரவியல் கதைகளைக் குழந்தைகளுடன் பெற்றோரும் ஆர்வமாகக் கேட்டனர். கேள்விகளால் அந்த அமர்வு ஆசிரியரின் வாழ்க்கைக் கதையை நோக்கி நகர்ந்தது. பெண் கல்விக்கு ஆதரவில்லாத சூழலிலிருந்து தொடங்கி, வெற்றிகரமான ஆய்வாளராக உயர்ந்தவர். அந்த விவரங்கள் பெரிதும் ஊக்கமூட்டுவதாக இருந்ததாக என் மனைவியும் மகனும் பின்னர் குறிப்பிட்டனர்.
மரங்களைத் தழுவும் வகுப்பு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. நடந்து சென்று மாமரங்கள் வரிசையாக இருக்கும் இடத்தை அடைந்தோம். அங்குச் சென்றதுமே உணர்ந்த குளிர்ச்சி இதமாக இருந்தது. அமைதியாகக் கண் மூடி மரத்தைத் தழுவுவது ஒரு தியான அனுபவத்தைத் தருகிறது. ஆனால் நாங்கள் கூட்டமாகக் குழந்தைகளுடன் இருந்ததால், என்னால் அதை உளம் குவித்து அமைதியாகச் செய்து பார்க்க முடியவில்லை. இயற்கைச் சூழலுக்குத் தனியாகச் செல்லும்போது முயன்று பார்க்க வேண்டும்.

தாவர வேட்டையில் ‘Y’ வடிவக் குச்சி, பெல் (மணி) போன்ற மலர் என்று பலவற்றைத் தேடிக் கொணர்ந்தோம். இனி இயற்கைச் சூழலுக்கு எப்போது சென்றாலும், இவற்றைக் கவனிக்கத் தோன்றும். தாவரங்களிலும் மலர்களிலும் எவ்வளவு வடிவங்கள், வண்ணங்கள்.
ஒருநாள் வகுப்பு இடைவெளியில் குழந்தைகளுக்கு அசைன்மெண்டும் தரப்பட்டது. அதை மிகுந்த ஆர்வத்தோடு செய்தனர். பலர் மிகுந்த படைப்பூக்கத்துடன் செய்து முடித்து ஆசிரியரிடம் காட்டிப் பாராட்டு பெற்றனர்.
‘அன்றாட வாழ்வில் தாவரவியல்‘ வகுப்பில் நிறையக் கேள்விகளுடன் அனைவரும் பங்களிப்பாற்றினர். ‘அரிசியில் ஆர்சனிக்‘ என்று ஆரம்பித்து, பல தகவல்கள், ‘எதைத்தான் சாப்பிடுவது‘ என்ற விரக்திக்கே கொண்டுசென்றன. ஆனால் அவை தெரிந்து கொள்ள வேண்டியவை. இந்த அறிதலுடன், நம்மால் இயன்ற வாழ்வியல் மாற்றங்களைச் செய்ய முடியும்.

காலை வேளைகளில் பறவை பார்த்தலையும் நாங்கள் தவற விடவில்லை. இதில் நாங்கள் இன்னும் கற்றுக்குட்டிதான். வகுப்பிற்குப் பிறகு ஒருமுறைதான் நாங்களாகப் பறவை பார்க்கச் சென்றிருக்கிறோம். அதன்பிறகு இப்பொழுது நித்யவனத்தில்தான். இருந்தாலும் மற்ற நண்பர்களின் உதவியுடன் ஓர் இனிய பறவை பார்த்தல் அனுபவம் கிடைத்தது. பறவைகளுக்கு இன்னும் நேரம் ஒதுக்கி, பொறுமையாகக் கவனிக்கும், அடையாளம் காணும் பழக்கத்தை இன்னும் முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
என் மகளுக்கு நித்யவனம் தோழிகள் என்றே இருவர் இப்போது அமைந்துவிட்டார்கள். சென்ற முறை பறவை பார்த்தலுக்கு வந்தபோது கிடைத்த நட்பு. இந்த முறை நாங்கள் திட்டமிட்டே இணைந்து வந்தோம். இதனால் மூன்று நாட்களும் அவளுக்கு உற்சாகமாகக் கழிந்தது.
இந்த வகுப்புகளை ஒருங்கிணைக்கும் உங்களுக்கும், விஷ்ணுபுரம்–முழுமையறிவு நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.
– சதீஷ் ரமணி.









