இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

இஸ்லாமிய -சூஃபி மரபை அறிதல்

அன்புள்ள ஜெ

ஏன் இஸ்லாமைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் காணொளியை பார்த்தேன். அதையே நீங்கள் கட்டுரையாகவும் எழுதியிருந்தீர்கள். அதிலுள்ள உள்ளடக்கம் 2007ல் நீங்கள் எழுதிய கட்டுரையிலும் இருந்தது. பல கட்டுரைகளில் உள்ளது. 

உண்மையில் தமிழில் சதக்கத்துல்லா அப்பா, சீதக்காதி, உமறுப் புலவர், குணங்குடி மஸ்தான் சாகிப் ஆகியோரை நீங்கள் மட்டும்தான் பொதுவெளியில் தொடர்ச்சியாகப் பேசி வருகிறீர்கள் என நினைக்கிறேன். குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பற்றியும் பேசி வருகிறீர்கள்.

ஆனால் இதைப்பற்றிய ஒரு ஆர்வத்தை உங்கள் வாசகர்களிடமாவது உருவாக்க முடிந்துள்ளதா?

சி.ரவீந்திரன்

அன்புள்ள ரவி,

இல்லை, அவ்வாறு ஓர் ஆர்வத்தை  இதுவரை குறிப்பிடுமளவுக்கு உருவாக்க முடியவில்லை. ஆனால் அவ்வாறுதான் நிகழும் என தெரியும். நம் சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் முன்முடிவுகள் மிக ஆழமானவை. கசப்புகள் அதைவிட ஆழமானவை. நாம் எதற்கு எதிராகப் பேசுகிறோம் என தெரிந்திருந்தால் பேசும் சூழல் இருப்பதே ஒரு பெரிய விஷயம் என எண்ணத்தோன்றும். 

சாமானிய இந்துக்கள் பொதுவாக மிக ஆழமான மத ஒவ்வாமைகள் கொண்டவர்கள். அவர்களின் நாத்திகம். அனைத்து மத ஏற்பு போன்றவை பொதுவாக மேலோட்டமான பாவனைகள் மட்டுமே. இந்து மாபில் அத்வைதம் தவிர எதுவுமே பிற மதங்களுடன் உரையாடும் மனநிலை கொண்டது அல்ல.

அத்துடன் இஸ்லாமியத் தரப்பிலும் பிறருடன் உரையாடும் உளநிலை பொதுவாக இல்லை. மிக ஆழமான ஒவ்வாமை. அவர்களில் அடிப்படைவாதிகள் அரசியல்நோக்குடன் தங்கள் மதப்பார்வையை ஓங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். அதிலுள்ளது தாங்களே சரி, மற்றதெல்லாம் பிழை அல்லது பாவம் என்னும் குரல். மற்றவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அடிப்படைவாதிகள் ஓங்கிய பின் சதக்கத்துல்லா அப்பா, சீதக்காதி, குணங்குடி சாகிப் போன்றவர்களை பேசும் குரல்களே எழாமலாகிவிட்டன.

நடுவே உள்ள இடைவெளி மிகப்பெரிதாகிவிட்டது. நம் பணி நமக்குரியதைச் செய்துகொண்டே இருப்பதுதான். 

ஜெ 

 

இஸ்லாமிய மெய்யியல் அறிமுகப் பயிற்சி முகாம்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைமேடைப்பேச்சும் வகுப்புகளும்
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா, வெண்முரசு நாள்.